Disable text selection

July 17, 2012

உயிர்க்காதல்

மனித வாழ்வில் ஒருத்தர் ரொம்பவும் உணர்ச்சிபூர்வமாக உயிரை வருடும் அளவுக்கு உணரும் ஒரு விஷயம் உண்டென்றால், அது உயிருக்கு உயிராக நேசிக்கிற துணையின் மீது கொண்ட காதல். 

தாய்ப்பாசம் இல்லையா என கேட்டால் அது வேறு ரகம். எந்த தாயும் தன் பிள்ளை உயிரோடு இருக்கிற பொழுது கஷ்டப்படுவாளே ஒழிய பிள்ளை போனதும் கூட வரமாட்டாள். இது தாயன்பை குறைத்து மதிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. குழந்தைப்பருவத்தில் இன்றியமையாததாக இருக்கும் தாய்ப்பாசம் வளர்ந்த பின்பும் உண்டு தான்,  ஆனால் அது ஒரு நன்றி மற்றும் கடமை கலந்த அன்பாக மாறி விடும். அதையும் தாண்டிய, உயிருக்கு உறவான தன்னோடு ஒன்றிப்போன துணையின் அன்பு தான் உண்மையில் தேவை ஒரு மனிதனுக்கு/மனுஷிக்கு. இது யதார்த்தம். இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்ட வீடுகளில் மாமி-மருமகள், நாத்தி-அண்ணி பிரச்சினைகள் இருப்பதில்லை.

சரி. விஷயத்துக்கு வருவோம். ஒருத்தரிடத்திலே மனத்தை செலுத்தி விட்ட பின், அவரையே கதியாக நினைத்து மனசை அர்ப்பணம் பண்ணி சரீரத்தையும் அவருக்கே அர்ப்பணம் பண்ணி விடுவது தான் இன்றைய சூழலில் ஆத்மலாபத்துக்கு உறுதுணையாக இருக்கும். அன்றைய நாட்களில் பெண்களுக்கு மட்டும் பாதிவ்ரத்யம் என கற்பு நெறியை வைத்து இருந்தனர். ஏனெனின் ஆணுக்கு அவன் சரணாகதி பண்ண குரு இருந்தார், சின்ன வயசிலேயே அவரிடம் இவன் போய் விட்டான் (சன்யாச குரு வேறு - அவர் அப்புறம் வருவார்). இன்று நாமாக குருவை தேடி போனால் அது அனர்த்தத்தில் முடியும் அபாயம் உள்ளது. தானாக சன்யாச குரு வரும் போது வரட்டும். ஆனால் மனசை அர்ப்பணம் பண்ண வேண்டுமே. நமக்கென்று தனி ஆசை தனி ப்ளான் இல்லாமல் இருக்கணுமே, அதற்கு ஒருத்தர் வேண்டுமே - யார் கிடைப்பார்கள்? தூய துணை தேடிக்கொள்ளுங்கள் என்பதே விடை. கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் அப்படி சமர்ப்பணம் பண்ணி விட்டால் மோக்ஷம் சமீபத்தில் தான். அத்தகைய உண்மையான அர்ப்பணம் - மனம், வாக்கு உடலால் - அஃதே கற்பென்னும் திண்மை. கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை.

இதெல்லாம் சாத்தியமா? அப்படி பிராணனையே ஒருத்தரிடம் நாட்டி வைக்க இயலுமா? ஏன் இயலாது? புருஷன் பிராணன் போனவுடன் தானாகவே பட்டென்று தனது உயிரை விட்ட மகா பவித்ரமான பதிவ்ரதைகள் இருந்து இருக்கிறார்கள், இருக்கிறார்கள். ராவணன் பத்நீ மண்டோதரி முதல், கௌரவர்களின் பத்தினிகள், ஸ்ரீ ஜெயதேவரின் பத்நீ பத்மாவதி அம்மையார்....... சிலப்பதிகாரத்தில் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி...... தனது உயிர் நிலையை பதியிடம் நாட்டி விட்டதால் அவர் போன பின் முயற்சி இல்லாமலேயே இவர்கள் பிராணன் போயிருக்கிறது என்பது விசேஷம். 

டேய்..... இதெல்லாம் புராணம்....... ரெகார்ட் இருக்கிறதா? என கேட்பீர்கள். அதனால் தான் தென்னாட்டு உதாரணத்தையே காட்டுகிறேன். 

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் (புறநானூறு பாடல் 71 இவர் இயற்றியதே) இறைவனடி சேர்ந்தான். அவன் மனைவி பெருங்கோப்பெண்டு அவனோடு உடன்கட்டை ஏறினாள். அவளை சான்றோர் தடுத்தனர். தடுத்த சான்றோரை அவள் நன்றாக திட்டி விட்டு தீயில் குதித்தாள். அவள் திட்டிய திட்டை புறநானூற்று பாடலாக (புறநானூறு பாடல் 246) நமது இலக்கியம் சேமித்து வைத்து இருக்கிறது. 

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். பலரும் (பெண்ணியவாதிகள்) கூறுவது போல கணவன் இறந்ததும் சுற்றத்தார் அந்த பெண்ணை தீயில் இட்டனர் என கூறுவது பொய் என இப்பாடல் நிரூபிக்கிறது. சுற்றத்தார் தடுத்தும் கேளாமல் கணவன் வழி சென்றால் அம்மாதரசி. இதை கவனிக்க வேண்டும். கணவன் மீது கொண்ட அதீத பாசத்தால், அவன் இன்றி க்ஷணமும் ஜீவனை வைத்துக்கொண்டிருக்க இயலாது என்ற அன்பின் உயர் நிலையில், யார் தடுத்தும் கேளாமல், கட்டாயமின்றி தானே உயிர்விட்டது தான் உடன்கட்டை.  அவளுடைய சேலை எரியாமல் தாலி எரியாமல் இருக்கும். இன்றைக்கும் பல குடும்பங்களில் அப்படி மிஞ்சிய அந்த பதிவிரதையின் சேலை மற்றும் கருகமணி தாலியை பெட்டியில் வைத்து வழிபடுவதை காணலாம். 

பெண்கள் தான் என்று இல்லை. துணை மேல் அளவிட முடியாத காதல் வைத்த ஆண்களும், மனைவி இறந்த பின்  இதை பண்ண தலைப்பட்டு இருக்கிறார்கள், சங்கப்பாடலில் சான்றுகளும் உள்ளன. (அடடே!!!). அவை பின்னொரு பதிவில். 

இக்காலத்திலும் பாட்டி இறந்துபட்ட சில நாட்களில் தாத்தாவும் போய் விடுவதை கண்கூடாக பார்க்கிறோம் அல்லவா? எனது வீட்டிலும் அப்படித்தான் நிகழ்ந்தது. அறுபதாண்டு காலம் கூட வாழ்க்கையை பங்கு போட்டு இழைந்து வாழ்ந்த துணை இறந்ததும் அடுத்த சில நாட்கள் ஏதும் சாப்பிடாமல் தூங்காமல் தண்ணீர் குடிக்காமல் தானும் கூட போய் விட்டார் தாத்தா. 

பிடிக்கலைனா டைவர்ஸ் பண்ணிடு என்று கூவும் இன்றைய "முன்னேறிய" வர்க்கத்துக்கு என்று இதெல்லாம் புரியும்!

சரி பாடலும் விளக்கமும் கீழே.

பல்சான் றீரே! பல்சான் றீரே!


செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்

பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!

அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட

காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது

அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்

வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட

வேளை வெந்தை வல்சி ஆகப்

பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்

உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்

நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்

பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற

வள்இதழ் அவிழ்ந்த தாமரை

நள்இரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே!

உரை:

பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! ”உன் மணாளன் மாண்ட பின் அவன் ஈமத்தீஇடை வீழ்ந்து நீ இறந்து படுவாயாக” என்று கூறாது, நான் என் கணவரோடு ஈமத்தீயில் மூழ்கி இறப்பதைத் தவிர்க என்று கூறும் தீய மதி கொண்ட பெரியோர்களே! அணிலினது முதுகின்  மேலுள்ளது போன்ற வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்தால் தோன்றும் விதைகளைப் போன்ற, வெண்மை பொருந்திய, மணமுள்ள நெய் கலவாத, சோற்றுப்பானையின் அடிப்பகுதியில் நீருடன் கலந்த சோற்றைப் பிழிந்தெடுத்து, அத்துடன் வெள்ளை நிறமுள்ள எள்ளை அரைத்து ஆக்கிய துவைலோடு, புளியிட்டுச் வேக வைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு, சிறு பரல்  கற்களால் ஆன படுக்கையில் பாயில்லாமல் படுத்து வருந்தும் இழிந்த வாழ்வினை உடைய கைம்பெண்களில் நான் ஒருத்தி அல்லள். பெரிய பாழ் நிலக்காடாகிய சுடுகாட்டில் கரிய மரக்கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்கு ஏறுதற்கு அரியதாக இருக்கலாம்; எனக்கோ, பெரிய தோள்களையுடைய என் கணவர் இறந்ததால், அந்த ஈமத் தீயிலுள்ள பிணப்படுக்கையும் அரும்புகளே இல்லாமல், மலர்ந்த தாமரைகளை மட்டுமே உடைய நீர் செறிந்த பெரிய குளமும் ஒரே தன்மை கொண்டது ஆகும்..


உடன்கட்டை ஏறுவது சரி என்றோ அது இன்னமும் வேண்டும் என்றோ நான் கூற வரவில்லை. கட்டாயப்படுத்தி செய்தால் அது மகா பாபமே. சந்தேஹமே இல்லை. ஆனால் ஒரு பெண் தன் பதி மீது கொண்ட அளவிட முடியாத காதலினால் பதி இறந்த பின்னர் உயிர் தரிக்க இயலாது எல்லாரும் தடுத்தும் கேளாமல் தானும் பிராணத்த்யாகம் பண்ணினாள் என்றால், அத்தகைய உன்னதமான காதலை வணங்குவதே முறை. யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்பதற்கு இப்பாடல் சான்று!

No comments: