Disable text selection

February 11, 2013

காலகாலர் துதி ஐந்து.....

மேனி யழகும் முதன்மையெ னுந்நிலையும்
பேணிய நாளும் நிலையோ - தேமொழிநல்  
தோணிய வன்பதம் பிறவிக் கடல்தாண்ட
காலகா லன்பதம் சேர்.

தனமும் வாக்கும் கொண்டகு டும்பமும்
சினம்கொண்ட கூற்றின்முன் நில்லா - தேமொழிநல்
கணம்கொண்ட நாதனா மாலகாலம் லம்முண்ட 
காலகா லன்பதம் சேர்.

வீரமும் வெற்றிச் செருக்கும் பாரிலோர்
தீரமுடன் சேர் தம்பியும் - தேமொழிநல் 
பூரமது போல்கரையும் கண்டாய் வாழிநீ
காலகா லன்பதம் சேர்.

கற்ற கல்வியும் பெற்ற மனைசுகமும்
நற்றவம் போலவ ருமா   - தேமொழிநல்
உற்றதாயும் உடன்வாராள் பற்றறுத்து
காலகா லன்பதம் சேர்.

நுண்ணிய நல்லறிவும் திண்ணிய தோள்தவழும்
ஒண்ணுதல் பிள்ளைகளும் நிலையா - தேமொழிநல்
புண்ணியப் பயன்றுய்த் துய்ய கண்ணுதலோன்
காலகா லன்பதம் சேர்.

February 4, 2013

அணைத்துக்கொள்

உன்னுடன் இருந்த தருணங்கள்......
உன்னைப்பிரிந்த குட்டி மரணங்கள்.....
உன்னை நினைவூட்டிய சாயல் மின்னல்கள்......
நீ விட்டுச்சென்ற உயிர்ப்பதிவுகள்......
நீ என்றோ சுருட்டிப்போட்ட தலைமுடியுடன்.......
கண்ணாடியில் ஒட்டிப்போன பொட்டுடன்......
இங்கே நிரந்தரமான பொக்கிஷங்களாய்......
இன்றிரவும் தூங்கப்போகின்றேன்.......
உன் நினைவுகளின் தாலாட்டில்.......
அணைத்துக்கொள்...... கனவில்.......

திருக்குறள் 135:: ஒழுக்கமும் செல்வமும்


அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

புவனேஷ்வர் உரை:

பொறாமைக் குணம் உடையவனுடைய செல்வம் எப்படி அவனுக்கு இன்பத்தையும் அறத்தையும் தராது பாழ்படுமோ, அது போல, ஒழுக்கம் இலானுடைய உயர்வும், அவனுக்கு புகழைத் தராது போம்.

விளக்கம்:

பொறாமைக் குணம் உடையவன்கண் செல்வம் சேராது என இங்கு பொருள் உரைப்பார் பலர் உளர். அஃது அவ்வாறன்று. பொறாமைக் குணம் உடைய ஒருவனுக்கு எத்துணை செல்வம் கிட்டினும், அதை நினைத்து மனம் நிறையாது பிறர் பொருளையே என்றும் ஏங்கி நோக்குவதால், அவன் தனக்கு கிட்டிய செல்வத்தை நோக்கான். அதனைப் பயன்படுத்தி நல்வாழ்வு வாழவோ, அறம் செய்து நல்வினை ஈட்டவோ அவனுக்கு இயலாது. பிறர் பெற்ற பொருளினும் அதிகம்  வேண்டும் என்று எண்ணிக் கருமியாய்ப்போகவே வாய்ப்பு அதிகம். ஆபத்தில் உதவாத கருமியை ஊர் மட்டும் இல்லை, உற்ற உறவும் தூற்றும். ஆதலின் அச்செல்வத்தான் அவனுக்கு இழுக்கேயாம்.

அதே போல், ஒழுக்கம் தவறிய ஒருத்தனுக்கு ஏதோ ஒரு நிமித்தம் ஒரு உயர்வு கிட்டுமாயின் அவன் அவ்வுயர்வையும், அதன்கண் கிட்டிய வாய்ப்புகளையும், தான் இன்னும் ஒழுங்கீனமான கேடு செயல் புரிவதற்கே பயன்படுத்துவான். இறுதியில், ஒழுக்கக்கேட்டிற்கு உதவியாய் இருந்த அவ்வுயர்வினால் தன் பெயர், புகழை இன்னும் அழித்துக்கொள்வானே ஒழிய, உண்மையில் அவ்வுயர்வு அவனுக்கு உயர்வாய் இராது.

தன்னிடம் உள்ளதைக் கொண்டு நல்லறம் புரிந்து மன நிறைவுடன் வாழ்பவனுக்கே செல்வம் பயன்படும். அதே போல் எத்துணை வாய்ப்பு கிடைத்தாலும் ஒழுக்கம் தவறாத பண்பாளனுக்கே, உண்மையான உயர்வும் குன்றாத புகழும் கிட்டும்.

அருச்சுனனுக்கு பீபத்ஸு என்ற ஒரு புகழ்ப்பெயர் உண்டு. அதாவது, எந்த வசதி, எவ்வளவு வாய்ப்பு கிடைத்தாலும் கூட, அதை பயன்படுத்திக்கொண்டு அவன் ஒருநாளும் ஒழுக்கம் தவற மாட்டான், வெட்கப்படத்தக்க செயல்களை கனவிலும் புரியான் என்று அப்பெயர் பொருள்படும்.

வெற்றி பெறுவோம்! புகழுடன் வாழ்வோம்!

பிரியங்களுடன்,

புவனேஷ்வர்!

February 3, 2013

தொடுவான உறவுகள்....... (புவனேஷ்வர்)

எங்கோ நுகர்ந்த வாசங்களை......
அன்று யாரோ விட்டுப்போன
சிதைந்து போன சுவடுகளில்
பாசமழை பட்ட மண்வாசனைகள்....... இன்று
தேடுகின்றேன் உன்னிடம் இனம்புரியாமல்.......
தூரத்து நினைவுகளில்
தொட்டுப்பழகிய ஏதோ ஒன்றை
தேடித் துழாவுகின்றேன் அரைமயக்கத்தில்......
தொடுவான நினைவுகளாய் வெள்ளி நிழல்கள்.....
எதிர்வரும் முகத்தை எல்லாம்
"அம்மாவோ?" என்று நோக்கும்
சந்தையில் தொலைந்த சேய்போல்......