Disable text selection

Showing posts with label என் கவிதைகள். Show all posts
Showing posts with label என் கவிதைகள். Show all posts

October 24, 2012

புறப்பட்டு வா.......

பறிக்க யாருமற்ற பாலையில் ஒரு பூப்போல.....
சுவைக்க ஒரு குரங்கு கூட இல்லாத காட்டில் கனி போல....
இங்கே நிறக்குருடர்களின் உலகில் ஒரு வானவில் நான்......
நேரமாகிறது..... புறப்பட்டு வா.......
இப்படிக்கு, 
உள்ளீடற்ற உறவுகளுக்கு இடையில், 
உனக்காகவே வந்த நான்......  

October 20, 2012

காலகாலன் பாதம் வாழும்நாள் மறப்பதில்லை

தும்பிக்கை போனாலும் யானைகால் பூனைமேல்
வீழ்ந்திடப் பூனை விழும் - ஆயுதம்
நம்பிக்கை ஒன்றுண்டு தும்பிக்கையான் தந்தை
சூழ்ந்தணைத் துடன் வருவான்;
ஆலகாலம் கொண்ட காலகாலன் பாதம்
வாழும்நாள் மறப்பதில்லை - தில்லை
தாளமொடு வியாகரணம் தானருளி தாவியொரு
கோலநட மாடுஞ் சிவனே! நல்ல
சோலைகுயில் கூவிமிடம் மான்களிடை நாய்நரியை
ஊளையிட வைத்த பரனே!

October 15, 2012

Character counts!

எத்துணைதான் அன்புசெய்து நட்டாலும் கீழ்மக்கள்
கிட்டுபொருள் தாம்கொண்டு கைவிடுவர் - தொல்லுலகில்
அட்டபாலும் அம்பாகும் வேர்பெய்து வளர்த்திடினும்
எட்டிமரம் காய்க்காது மா!

(Bhuvaneshwar D)


பொருள்:

எத்துணை தான் நாம் அன்பு செய்து நட்பு பாராட்டி இருந்தாலும், கீழ்மக்கள் நம்மிடம் கிடைக்கும் பொருளை சுருட்டிக்கொண்டு, சமயம் நேர்ந்த போழ்து நமக்கு உதவாமல் கைவிடுவர். தொன்மையான இந்த உலகில், சுண்டக்காய்ச்சிய பாலும் இனிய பாகும் (அம்பாகும் = அம + பாகும் = இனிய பாகும்) எட்டி மரத்துக்கு ஊற்றி வளர்த்தாலும் அம்மரம் இனிய மாங்கனியை தராது (கசப்பும் விடமும் உள்ள எட்டிக்காயை தான் தரும்)

August 16, 2012

கருணை மனு

வேளை நெருங்கும் போழ்து
பிரசவ வலி ஒரு வேதனை........
பிள்ளை முகம் பார்க்கும் வரை...... உனக்கென நான்
காத்திருக்கும் கணங்களும் காண், கொடுமை......
உன்மடி வீழும் வரை.....

உன்னிடம் முன் அனுமதி பெற்று தான்
என் தாயின் மடி மேல் வந்தேன் போலும்.......
கண்மறைத்து இன்னும் உன் கண்ணாமூச்சி ஆட்டம்.......
கொடுங்கோலரசி தானடி நீ.......

கருணை மனு போட்டு விட்டேன், உன் முன்.
இனி காத்திருப்பது எத்தனை நாள், சொல்?

எதிர்நோக்கி......

முகம் தெரியாமல் உன்னை நேசித்து, எதையும்
எதிர்பாராமல் உனக்கெனவே சுவாசித்து, இறையிடம் 
உனை மட்டுமே வரமாக யாசித்த உன் தாய்க்கும் 
உனக்காக காத்திருக்கும் எனக்கும் அதிக வேறுபாடில்லை.....
உன்னை எதிர்நோக்கிய நாட்களில், 
என் மாமி உன்னை கருவில் சுமந்தார்,
நானோ சுமக்கிறேன் உன்னை, உனக்கெனவே உருவான என் நெஞ்சில்.......

August 15, 2012

நீயின்றி ... விந்தை

நீரின்றி வாழ்கின்ற மீனுண்டோ? காண் விந்தை!

நீயின்றி வாழ்கின்ற நான்.

மாயமென்ன?

உன் அன்பென்னும் தேன் பருக ஆசைப்பட்டு 

உன் முகமென்னும் தாமரையை சுற்றி சுற்றி வந்தேன்

உனக்கெனவே வண்டாகிய நான்......

திடீரென்று உன் பொல்லாத விழிமீன்கள் 

என்னைப்பிடித்து விழுங்கிய மாயமென்ன?

July 17, 2012

முறையீடு

சேல்விழியின் சத்தியமும் பேதலித்த புத்திகளும்

ஒருநி லையும்  கண்டதிலை யே;

வேலையற்ற வன்பேச்சும் ஆண்மையற்ற வன்பாட்டும்

ஆழ மெனக் கொள்வதிலை யே;

வணங்குவார் வார்த்தைக்கு வழிவிட்ட தெய்வமென்

வாழ்வில் விளை யாடியது மேன்?

மூலப்பொரு ளானவுமை பாகனொரு நாதமொடு

கோலனட மாடுஞ் சிவ னே;

சோலைகுயில் கூவுமிடம் மான்களிடை நாய்நரியை

ஊளை யிட வைத்தபர னே;

 

 

 

July 16, 2012

நெஞ்சுக்கறிவுறுத்தல்

ஒண்ணுதல் நிலையாது  நன்னெஞ்சே கன்னிமுலை

இன்றிருக்கும் நாளைவெந்து நீறாகும் - யாண்டும்நீ

வென்றைந்தை  நாளும கிழ்ந்திருக்கக் கன்னியுமை

தண்ணடியே மண்ணிற் றுணை;   

உரை:


ஒளிபொருந்திய நெற்றி கொண்ட பொது மகளிரை நாடாதிரு நன்னெஞ்சே, கன்னியரின் உடல் இன்று இருக்கும் இறந்தபின்னர் சாம்பலாகும், ஐந்து புலன்களையும் வென்று நீ நாளும் மகிழ்ந்திரு, அதற்கு (புலனடக்கத்திற்கு) உனக்கு உண்மையான துணை நித்திய கன்னிகையான அம்பிகையின் குளிர்ச்சி பொருந்திய திருப்பாதங்களே ஆவன. 

ஒண்ணுதல் என்னும் சொல் அழகிய நெற்றியை உடைய பெண் எனும் பொதுவான பொருளை தரினும், இந்த இடத்தில் பொது மகளிரையே குறிக்கும். காரணம் இல்லறத்தில் உள்ள (துறவறம் பூணாத) மக்கள் பெண்ணையே நாடாது இருக்க இயலாது. அவரவர் துணைவியை ஆதரித்து வாழ்வது நன்றேயாகும். கற்பு நெறி தவறி காமமே கண்ணாக பரத்தையரை நாடும் தகாத செயலையே இச்செய்யுள் சாடுகிறது.

July 3, 2012

கண்ணனென்-மனைவி

கரம்பிடித் தாளென்னை காணோர் தெய்வம்

வரமென்னத் தகுமென்றன் வண்ணமயி லாள்;

அறம்வளர் நெஞ்சுடை யாளென தாவிக்

குரமனை யாள்திரு மகளனை யாள்;




யதுகுலத் தேயுதித் தாளென் றேவி

மதுகை டபர்தமை தொடைக்களித் தாள்;

வஞ்சகர் தமைவெறுப் பாளிவள் மட்டும்

நஞ்சிலா யெண்ணிலாப் பொய்யுரைப் பாள்;

 

கண்ணிலே மணிபோல் வாளிவ ளேயான்

பண்ணிய தவப்பயத் துணைவி யென்றன்

னெண்ணிலாத் துயரழித் தேயோர் காதற்

பண்ணிலே பணிந்தெனக் கருள் தருவாள்;

 

எண்ணிலாக் குறும்பிழைப் பாள்காண் பிள்ளை

தண்ணிலாப் போல்நகை யுதிர்த்திடு வாள்;

கண்ணினாற்க் காவியங் கள்குழை ப்பாள் முழு

எண்ணமும் நாட்பட அவள்பதம் தான்.

 

பந்தள வில்வெண் ணெய்யது வேண்டி

மந்திப ழித்திடும் சேட்டிதஞ் செய்தாள்

முந்தைய நாள்கதை நம்புவ தாற்றேன்

அந்தமி லாநிலை தந்தனள் கூடி;

 

கண்மணி கண்ணனி வள்கரம் கொண்டதும்

நண்ணிய நன்மைகள் எண்ணவும் ஆற்றேன்

சின்னவன் என்றெனை எள்ளிய தறியேன்

மண்ணெனை பொன்னெனப் பண்ணினள் பைந்தொடி.

 

பண்டம் சிறியது யான்பகிர்ந் தாலும்

அண்டத் துண்மைகள் அன்புடன் காட்டுவள்

கண்டறி யாதன காட்டுவள் கான்முனி

விண்டறி யாதன மெய்பல சொல்வாள்;

 

தின்னற் கரியபொ ருள்மருந் தாகிலும்

கன்னற் பாகினில் போல் - வேதாந்தம்

சின்னக் குழவிம திபுரிந் துய்திட

கண்ணனி வள்தந் தாளில் லறமதில்;

 

பண்ணிய புண்ணியம் யாதோ அறியேன்

திண்ணிய மேன்மகள் கண்ணனை பற்றிட;

கன்னற் றேமொழி காதலி யென்னைப்

பின்னற் பிறவிக ளின்னலிற் காத்தனள்;




என்னத வம்செய் தேன்யா னிவளை

வன்னமு டன்வாழ் வில்மணந்தி டகாண்;

மண்ணும்மு லைமணி பொன்னும் விரும்பிய

சின்னவ னென்னையும் சிந்தையில் மாற்றினள்;

 

கண்மணி இவளை கைக்கொண்டது முதல்

பண்ணிய சீர்மைகள் திண்ணிய பலபல;

அன்றவள் பணிந்தனள் இன்றுயென் முறையாம்

இல்லறம் கண்ணனி வள்செய நல்லறம்;




கைப்பிடித்தாள் எனை காதலிற் கட்டினாள்

மெய்ப்பிடித் தேனது காந்தா சம்மிதம்;

தைப்பிறந்தா லெழும் ஞாயிறு கண்ணனெம்

மைப்பிடித்தா ளிருள் மாயை மருண்டது;

+++++++++++++++++++++++++++++++

கான் முனி: காட்டில் தவம் இயற்றும் முனிவர்; கன்னற்றேமொழி : கன்னல் தேமொழி = கரும்பின் சாறு போல், தேன் போல் இனிய மொழி பேசும் மனைவி; மெய்ப்பிடித்தேன்: உண்மை (முடிவான உண்மையினை) பிடித்தேன்;

காந்தா சம்மிதம்:

உபதேசத்தில், வணங்குதற்கு உரிய குரு ரூபத்தில் வந்து உபதேசிப்பது ஒரு வகை (பிரபு சம்மிதம்). நண்பனாக வந்து உபதேசிப்பது இன்னொரு முறை (சுஹ்ருத் சம்மிதம்/மித்ர பாவம்). மனைவியாக/கணவனாக/காதலியாக/காதலனாக வந்து உபதேசிப்பது மேலும் ஒரு முறை (காந்தா சம்மிதம்/காந்தா பாவம்)



June 30, 2012

Divorce - the sad truth

உள்ளங்கள் உரசியதால் உறவுக்குள் தீப்பிடித்து

பற்றி எரிந்ததுவோ "நாம்";

+++

அகங்கார ஆப்பதனை அன்புறவில் அடித்ததினால்

அற்று பிளந்ததுவோ "நாம்".

+++

எனக்கு உனக்கு என கணக்கு இடையில்வர
பிணக்கில் துணுக்கான "நாம்";



+++

வண்டி மாடுகள் சண்டி பண்ணவே
துண்டித்த பயணமே "நாம்";




June 29, 2012

Who will help on that last day?

கண்மணி யென்றவளும் கலவிநு கர்ந்துன்னைப்

பொன்மணி யென்னப் புகழ்ந்தவளும் – மன்னவனே

மண்ணிற்க் கடைவழிக்கு வாராள் காண் மன்னுபுகழ்

கண்ணுத லோனே துணை;

+++++ 

கண்ணுதலோன்: கண் + நுதலோன் = நெற்றியில் ஒரு கண்ணை உடைய சிவ பெருமான்

God save us - A message to our minds

மண்ணினா லானதிந்தப் பெண்ணுடம்பு நீயதனை

நண்ணி யழியாதே நன்னெஞ்சே - மண்ணுலகில்

பண்ணியபல் பாதகங்கள் போதுமொரு பாதியுமை

தண்ணடியே தஞ்சம் இனி.

+++++++++

பாதியுமை: பாதி + உமை = அர்த்த நாரீஸ்வர திருக்கோலம் கொண்ட எம்பெருமான்

தண்னடி: தண்மை + அடி = குளிர்ச்சி பொருந்திய அடி

June 22, 2012

முருகன்-துதி

காரிருள் குழலாள் குழவி ஆறிரு வந்தோள் போற்றி;

சீறிடு முறுபகை மாற்றும் தாரணி வோன்வேல் போற்றி;

மாறிடு மனத்தோர் வஞ்சம் காறிடுங் குழந்தை போற்றி;

சோறிடும் எந்தை போல்வான் ஆறுவாய் குடக்கோ போற்றி!

 

ஐந்தலைப் பொதிகை தங்கும் பைந்தமிழ் பிள்ளை முனிவன்

மைந்தனாக் கொண்டு லகோர்க்கு நைந்திடாத் தென்மொழி யீந்த

அஞ்சிறை மயில் மீதேகி அஞ்சிடும் மான்விழி எழுவர்

மிஞ்சிடும் பிள்ளையி னன்பால் கொஞ்சிடும் கோவே போற்றி;

+++++

ஆறிரு வந்தோள்: ஆறு + இரு + வன் + தோள் = பன்னிரண்டு வலிய தோள்கள்

தாரணி வோன்: தார் + அணிவோன் (தார் - முனை கட்டப்படாத மாலை; திருச்செந்தூர் வேலன் படம் காணவும்)

ஆறுவாய் குடக்கோ: ஆறு முகம் உடைய, மலைகளுக்கு (குடம் - மலை) அரசன் (முகத்துக்கு வாய் எனும் சொல்லையே பயன்படுத்துவது வடமொழியின் இயல்பு)

மைந்தன் = சீடன்;

அஞ்சிறை: அம் + சிறை = அழகிய சிறகு

அஞ்சிடும் மான்விழி எழுவர்: மருண்டு விழிக்கும் மான் போன்ற கண்களை உடைய பெண்கள் எழுவர் - கார்த்திகை பெண்டிர் மற்றும் பார்வதீ தேவி 

கோ: அரசன் - பிள்ளையை ராஜா என கொஞ்சும் பொருளில்.

June 1, 2012

கண்ணன்-காதலன்-சத்குரு.....

காணுமி டந்தோ றும்மெங் கண்ணன்

கட்டழ காச்சு தடி யோர்மாயன்

வேணுகு ழாயூ தும்விண் வண்ணன்

நட்டவி தைகா தல்மர மாச்சுது ;

துயிலது பயிலா தேவெயி லோனொளி

செயலது மிலதா யேமல மிலதாய்

வயலது நிலவுல கம்மற மேபயிர்

செயவிசை மயிலிற கோன்.

நோக்குமி டந்தொறும் நீக்கமி லாதுயாம்

தாக்கும் பெரும்பகை யாவும றைந்தன

தேக்கும றைபொரு ளாக்குமு றைபொரு

ளேக்கந்த விர்த்தெனை நோக்கிய நாள்முதல்;

May 25, 2012

Useless wife

மட்டி லாதபொருள் மனைவிகண் வாய்த்தாலும்

கட்டியவன் கைத்தாரா ளாயின் - குஞ்சுடைத்த

முட்டையவள் வெட்டியகை கண்டீரோர் காஞ்சிரந்தான் 

காய்த்தா லென் காய்தராக்கா லென்?

உரை:

அளவிட முடியாத செல்வம் மனையாளுக்கு சம்பளமாக வாய்த்தாலும், அவள் அதை கணவனுடைய கையில் தந்து பகிர்ந்து வாழும் குணமில்லாதவளாயின், அத்தகைய சுயநலமிக்க பெண், குஞ்சு பொரிந்து வெளியே வந்த பின் எஞ்சும் முட்டை ஓடு குஞ்சுக்கு பயன் தராதது போலவும், வெட்டப்பட்ட அழகிய கை உடலுக்கு உதவாதது போலவும், கணவனும் மனைவியும் மனமொத்து இயைந்து நடத்தும் இல்வாழ்வுக்கு பயன் இல்லாதவளே ஆவாள்.

கண்டோர் வெறுக்கும், பசிக்கு உதவாத காஞ்சிர மரம் காய்த்தால் என்ன காய்க்காவிட்டால் என்ன?

கண்ணனென் காதலன் - 1

பல்லவி:

காதலெ னும்மது வுண்டோம் - கோதையர்

மாதவ னாஞ்சிறு மாமல ரான்மிசை

காதலெ னும்மது வுண்டோம்;

அனுபல்லவி:

ஆதியி லாதியெம் மாயனவ் வேய்துளை

யூதிவ ருங்குழ லாயன ருந்தவர்

ஓதும றைபொரு ளானமு குந்தனின்

கோடிநி லாவொளி சோதிப தம்மிசை

(காதலெனும்)

சரணம்:

போதல்ம றந்தவன் காதலி னால்தரு

போதிநி ழல்துற வோனிகர் ஞானியர்

காதலு டன்னுற வாடிம கிழ்திரு

மாதவ னில்கலந் தேகிடவே யொரு

(காதலெனும்)

May 24, 2012

கடமை!

ஆழிப் பேரலை அடங்கா துயர்ந்து
ஊழித் தாண்டவ மாடிய வேளை
அக்கினிக் கொழுந்து பட்டினி கிடந்தது
புக்கிடஞ் சுட்டுப்பொ சுக்கிய வேளை
கற்றவர் வற்றா கேள்வியு ரைத்திட
உற்றவர் செற்றவர் பற்றறு வேளை
நல்லோர் தீயவர் வல்லார் இல்லார்
கல்லார் பொல்லார் பேதங் கொள்ளார்!

உரை:

ஆழிப்பேரலை ஊழிக்காலத்தே வருவது போல உயர்ந்து ஆடி ஊரை அழிக்க நிலம் புகும் காலமும், செவ்விய நாக்குகளை உடைய அக்கினி பசிகொண்டது போல சென்ற இடமெல்லாம் சினந்து சுட்டுப் பொசுக்கும் வேளையிலும், கற்றவர் தமது உயர்ந்த அறிவினை உரைக்கும் பொழுது, வேண்டியவர் வேண்டாதவர் என நினைக்காத வேளையிலும், இந்த மூவர் (கடல், நெருப்பு, சான்றோர்) நல்லவர், தீயவர், வலியவர், மேலியவர், கற்றவர், பொல்லாதவர் என்ற பாகுபாடின்றி, தமது கடமையை முடிப்பர் (அதாவது கடல் எல்லாரையும் மூழ்கடிக்கும், தீ எல்லாவற்றையும் எரிக்கும், சான்றோர் யாவர்க்கும் அமுதம் போன்ற இன்னுரைகளை நவில்வர்!)

Discretion

சேர்தலும் பொருதலும் சிற்றிடம் தவிர்மின்

சிற்றிடம் சேர சீரறும் - வாதில்

சிற்றிடம் பொருதார் சிறுசுரை விதைபோல்

பற்களும் நற்கையில் உற்றிடல் ஆதலின் 

சேர்தலும் பொருதலும் சிற்றிடம் தவிர்மின்!

உரை:

சிறந்த புகழுடைய மக்களே! இதை கேளுங்கள். உறவென மகிழ்ந்து சேர்வதற்கும், வாதப்போரில் மோதுவதற்கும் சிறுமதி படைத்த மூடர்களை தவிர்த்து விடுங்கள்;

சிறியோரிடம் நெருங்கி உறவாடுவதால் உனது புகழாகிய சீர் அறும் (அற்று அழிந்து போகும்);

சிறுமதி படைத்த கல்லாத, அடக்கமில்லாத புல்லனுடன் வாதப்போர் புரிவீராயின், சுரையினது வெள்ளிய விதைகள் போல உமது பற்கள் உமது கைகளில் வீழக் காண்பீர் (மூடனான அவன், வாதம் புரியும் மதி அற்றமையால், தனது கைவன்மையால் அடித்து துன்பம் தருவான்).

ஆதலால் கல்வி எனும் அழகு படைத்த மக்களே, உறவென மகிழ்ந்து சேர்வதற்கும், வாதப்போரில் மோதுவதற்கும் சிறுமதி படைத்த மூடர்களை தவிர்த்து விடுங்கள்...


அன்புக்கு-பேதமுண்டோ?

குன்றின்மீ தகலேற்றி வைத்தா லங்கு
சென்றிடும் யாவர்க்கு மொளிகாட்டு மன்றோ;
அன்பெனும் குன்றேறி நின்றுவிட் டாரவர்
கண்களில் பண்புசெய் பேதங்க ளுண்டோ?

உரை:

உயர்ந்து பலரும் காணுமாறு விளங்கும் பெருமை பொருந்திய குன்றின் முகட்டில் அன்பு பொருந்திய அறிஞர் ஒரு பெரும் அகல் விளக்கினை ஏற்றுவாராயின், ஒளி பொருந்திய அழகிய அவ்விளக்கு, காண்போருக்கு அச்சத்தை விளைவிக்கும் இயல்பினை உடைய அந்த காட்டு வழியே செல்லும் மாந்தர்க்கு ஒளியினை நல்கும்.

இவன் நல்லவன், இவன் பொல்லான் என்று வேறுபாடு பார்த்தா அவ்விளக்கு சிறந்த ஒளியினை வழங்கும்? யாவர்க்கும் அன்றோ?

அங்ஙனம், தம் நெஞ்சகத்தே அன்பெனும் அமுதத்தை கொண்ட பண்புடைய கற்றவர், அவ்வன்பினை பேதம் பார்க்காது அனைவர்க்கும் அளித்து தாமும் இனிது மகிழ்ந்திருப்பர்.