Disable text selection

April 18, 2015

ஹிந்து மதத்தின் உயிர்நாடி: (புவனேஷ்வர்)


இன்றைக்கு பலருக்கும் ஒரு பயம் யாதெனின் பிற மதங்களாலும், பிற-மதஸ்தர்களால் நமது ஸனாதன தர்மம் க்ஷீணித்து, ஏதும் ஹானியை அடையுமோ என்பதுவேயாம். அப்பயத்துக்கு ஆதாரம் யாதொன்றும் இல்லை. அஃது நடவாது.

இத்துணை காலம் ஒரு மதம் ஜீவித்து, பலப்பல படையெடுப்புக்களையும் ராஜ்ஜிய மாற்றங்களையும் தாண்டி ஸ்திரமாக நின்றுள்ளது என்றால் அதன் ஆணிவேர் மிகப்பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும்.  

நமது இத்தர்மத்தின் ஜீவநாடி எது?

அனுஷ்டானம். ஒவ்வொருத்தனும் தனது முன்னோர் வழி வந்த அனுஷ்டானங்களையும், பிறப்பால் வந்து பொருந்திய கடமைகளையும் செம்மையாக ஆற்றுவானேயாயின், அந்த ஆத்மபலமானது எதையும் தாங்கி, தாண்டி நிற்கும்.

எப்போதெல்லாம் மேலை நாட்டு மயக்கத்தால், மோஹத்தால் நம்மவர் வழி தவறி அனுஷ்டானத்தையும் ஆத்ம விசாரத்தையும் மறக்கிறார்களோ அப்போதெல்லாம் தான் அதர்மமும் அனாசாரமும் மேலோங்குகிறது.

பிரச்சாரம் பண்ணியோ, ஆசை வார்த்தை பேசியோ, பணம் காட்டி மயக்கியோ, கத்தியைக் காட்டி மிரட்டி உருட்டியோ நமது ஸனாதன வேத தர்மத்தை ரக்ஷிப்பது அல்லது புனருத்தாரணம் பண்ணுகிறேன் என்று கிளம்புவது பயனற்ற வீண்வேலை.ஏனென்றால் இத்தர்மம் அங்ஙனம் வளரவில்லை!

ஒவ்வொருவனும் தனது கடமையை சிறப்புறச் செய்து அனுஷ்டான சீலனாக இருந்தால் ஆயிரத்தில் ஒருத்தன் பரமாத்மாவில் கலந்து முக்தனாகிறான். அப்படி முக்தனானவனின் அருகில் இருப்பவர்களுக்கெல்லாம் அவனருள் கிட்டி அவர்களும் மேம்படுகிறார்கள்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் நான்கு ஐந்து ஞானிகள் நமது அருகில் இருந்துத்தானே இருந்திருக்கிறார்கள்? உறியடி திருவிழாவில் நூறு பேர் சறுக்கினாலும் ஒருத்தன் மட்டும் எப்படியோ ஏறி உறியை அடித்து விடுகிறானல்லவா? அவனால் ஊருக்கே வெற்றி, பெருமை. அது போலத்தான்.

இதைத்தான் கிருஷ்ணரும் கீதையிலே சொல்லியிருக்கிறார்.

அது மட்டுமல்ல, "ஸம்பவாமி யுகே யுகே" என்று ப்ரதிக்ஞை வேறு பண்ணி சத்தியமாக சொல்லி விட்டார். நமக்கு பயப்பட அவஸ்யமே இல்லாதபடிக்கு அவர் பண்ணிவிட்டு போயிருக்கிறார்.

இந்தக் கலியில் நாமசங்கீர்த்தனம் ஒன்றைச் செய்தே, நாமஜபம் ஒன்றைச் செய்தே உய்ந்து விடலாம் என்று இருப்பதால் தான், "கலி சாது:" என்று வ்யாஸ பகவானே அநுக்ரஹித்திருக்கிறார்..

ஆதலால், பிறரை வழிக்கு கொண்டு வருவதை விட்டு விட்டு ஒவ்வொரு வைதிகனும் தனது அனுஷ்டானத்தை தனது வர்ணத்துக்கும் ஆஸ்ரமத்துக்கும் ஏற்றாற்ப்போல செய்து வந்தால் நடக்க வேண்டியதை அந்தப் பரமேஸ்வரன் பார்த்துக்கொள்வான்.

ஆத்மஸ்ரேயஸ் அடைய என்ன வழியோ, அதை ஒவ்வொருவரும் கடைப்பிடித்தாலே, நமது தர்மம், தூண்டிய விளக்காய் பிரகாசமாய் ஒளிரும்.

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி!