இன்றைக்கு ஹனுமான்
ஜெயந்தி!
எனக்கு சின்ன வயசில்
இருந்தே ரொம்பப்பிடித்தமான ஹீரோக்களில் ஹனுமான் ஒருத்தர். குழந்தைகளின் கற்பனையை
தூண்டி விடுவதில் அவருக்கு நிகர் அவரே தான். அப்புறம் வளர வளர அவரை ஒரு சாமியாக்கி
கும்பிட வைத்தாகி விட்டது. குழந்தைத்தனமான சிநேக பாவம் தான் எனக்கு என்னமோ மிகவும்
ருசியாக இருக்கிறது.
ஒருத்தன்
கஷ்டப்படுகிறான், துயரத்தில் துடிக்கிறான், புலம்புகிறான் என்றால், “அவனும் மனுஷன்
தானே, மனுஷ இயற்கை” என்று சப்புக்கொட்டி ஆறுதல் சொல்லுகிறோம். அவனை நம்மில்
ஒருவனாக பார்க்கிறோம். இன்னொருத்தனோ, அல்லது இவனே கூட, ஒரு நாள் பரம சாந்தியாக,
பூர்ணத்த்வத்தை அடைந்து விட்டான் என்றால் அப்போது, “அவர் தெயவாம்சமப்பா, மகா ஞானி,
பரம யோகி, நம்மாலே முடியுமா?” என்று கும்பிடு போட்டு விட்டு போகிறோம். துயரமும்
கண்ணீரும் தான் மனுஷ இயற்கையா? எல்லையில்லாத பரம நிலை, சிநேக பாவம் மனுஷ இயற்கை
இல்லையா? பெரும்பான்மை நிலையை வைத்து எப்படி அது மனுஷ இயற்கை இல்லை என்று
சொல்லலாம்?
நல்ல விஷயங்களை உசந்த
மனுஷர்களை நாம் அவதார புருஷர்களாக்கி கோயிலில் அடைத்து விட்டு, நம் குட்டையில் ஊறும்
மட்டைகளை மட்டுமே நம்மவர்கள், சக மனுஷர்கள் என்று வைத்துக்கொள்வது சின்னத்தனம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், நம் குட்டையில் ஊறிய மட்டை ஒன்று இனியும் ஊற
வேண்டாம் என்று கரையேற நினைத்தால், எள்ளி நகையாடுவோம். அடித்துப்பிடித்து கரையேறி
விட்டால், அதே மட்டை மகான் ஆகிறது! அப்புறம் அந்த மட்டை “நம் மனுஷாள்” அல்ல. “அடடா,
ஒருத்தன் பூர்ணனாக முயற்சி பண்ணுகிறானே, முடிந்தால் நாமும் கூட்டு சேருவோம், இல்லையா
அவனுக்கு உதவுவோம், அதுவும் இல்லையா, சும்மா இருப்போம்” என்று அநேகம் பேர்
இருப்பது இல்லை.
பணம் காட்டி ஆசை
காட்டி பள்ளிக்கூடம் கட்டுகிறேன், சோறு போடுகிறேன் என்று சொல்லி ஆள் சேர்க்க தூண்டில்
போடும் மதம் அல்ல நம் மதம். கத்தியை காட்டி மிரட்டி கூட்டம் சேர்க்கிற, இருக்கிற
கூட்டத்தை தக்க வைக்கிற மதம் அல்ல நம் மதம். நம் மதத்திற்கு ஜீவநாடி ஒவ்வொருத்தரும்
தன்னை பூர்ணனாக்கிக்கொள்ள முயல வேண்டும். லக்ஷம் பேர், கோடி பேர் முயன்றால் அதில்
ஒருத்தர் பூர்ணரானால், அவர் அணுக்கிரகத்தாலே, நாமும் ஆவோம்.
அவர் ஆத்மசாதகம்
பண்ணும் நாட்களில் உதவாமல், அவர் மகானான பின் ஆசி மட்டும் கேட்டால் அது
நியாயமாகாது.
சாதுக்களையும், சாதகர்களையும், வேத-வித்யார்த்திகளையும் ரட்சிக்க
வேண்டும், பணம் என்றில்லை – அன்னம், வஸ்த்ரம், தாங்கும் இடம், நம்மால் இயன்றதை
செய்யத்தான் வேண்டும்......
அப்போது தான் அவர்களில் ஒருத்தர் பூர்ணத்வத்தை அடையும்
பொழுது, அவரிடம் நமக்கு அருள் பெற அருகதை உண்டு. சேவையும் தான தருமமும் பிறருக்கு
அல்லவே அல்ல.
நீ என்ன சேவை செய்தாலும் பூரணன் ஆகாதவன் அழுவான். பூர்ணனுக்கு உன்
உதவி தேவை இல்லை. உன் சேவையும் தானமும் தருமமும் உன்னை சுத்தி செய்யவே!
இப்படி எல்லாம் சேவை
செய்து கொஞ்சம் கொஞ்சமாக பக்வியானால், ஒரு நாள் உள்ளே இருக்குமாத்ம ஜ்யோதியானது ஒரு
நாள் பளீரென்று பிரகாசிக்கும். பட்டப்பகல் என்ன திடீரென்றா வருகிறது? கொஞ்சம்
கொஞ்சமாக சித்தம் சுத்தமாகி, கீற்று போல ஆத்மா பிரகாசித்து, ஒரு நாள் பூர்ண
ஜோதியாக நமக்கு அடிக்கும். அது என்றுமே பூர்ணம் தான். மனசு நசியும். அப்போது அஹங்காரம் இல்லாமல், தனி மனசு இல்லாமல், பரப்பிரம்மம்
தான் மிச்சம் இருக்கும்.
எத்தனை தான் ஆற்றல்
உடையவராய் இருப்பினும், ஆத்மா ஸ்வரூபியான ராமனுக்கு தான் தாசன் என்று கட்டுப்பட்டுக்கிடந்தார்
ஹனுமான். மற்ற சக்திசாலிகள் துராத்மாக்களாக அழிந்தார்கள் அஹங்காரத்தால். இவரோ தனது
மனசை ராமனுக்கு அர்ப்பணித்தார். இன்றளவும் அருள்பாலிக்கிறார், ராமனருளால்.
அவர் தாள் வணங்கி,
நாமும் நமது சித்தத்தை ராமன் பாதங்களில் சமர்ப்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக அஹங்காரத்தை,
தனி மனசை நசிப்போமாக.
+++++
No comments:
Post a Comment