அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
புவனேஷ்வர் உரை:
பொறாமைக் குணம் உடையவனுடைய செல்வம் எப்படி அவனுக்கு இன்பத்தையும் அறத்தையும் தராது பாழ்படுமோ, அது போல, ஒழுக்கம் இலானுடைய உயர்வும், அவனுக்கு புகழைத் தராது போம்.
விளக்கம்:
பொறாமைக் குணம் உடையவன்கண் செல்வம் சேராது என இங்கு பொருள் உரைப்பார் பலர் உளர். அஃது அவ்வாறன்று. பொறாமைக் குணம் உடைய ஒருவனுக்கு எத்துணை செல்வம் கிட்டினும், அதை நினைத்து மனம் நிறையாது பிறர் பொருளையே என்றும் ஏங்கி நோக்குவதால், அவன் தனக்கு கிட்டிய செல்வத்தை நோக்கான். அதனைப் பயன்படுத்தி நல்வாழ்வு வாழவோ, அறம் செய்து நல்வினை ஈட்டவோ அவனுக்கு இயலாது. பிறர் பெற்ற பொருளினும் அதிகம் வேண்டும் என்று எண்ணிக் கருமியாய்ப்போகவே வாய்ப்பு அதிகம். ஆபத்தில் உதவாத கருமியை ஊர் மட்டும் இல்லை, உற்ற உறவும் தூற்றும். ஆதலின் அச்செல்வத்தான் அவனுக்கு இழுக்கேயாம்.
அதே போல், ஒழுக்கம் தவறிய ஒருத்தனுக்கு ஏதோ ஒரு நிமித்தம் ஒரு உயர்வு கிட்டுமாயின் அவன் அவ்வுயர்வையும், அதன்கண் கிட்டிய வாய்ப்புகளையும், தான் இன்னும் ஒழுங்கீனமான கேடு செயல் புரிவதற்கே பயன்படுத்துவான். இறுதியில், ஒழுக்கக்கேட்டிற்கு உதவியாய் இருந்த அவ்வுயர்வினால் தன் பெயர், புகழை இன்னும் அழித்துக்கொள்வானே ஒழிய, உண்மையில் அவ்வுயர்வு அவனுக்கு உயர்வாய் இராது.
தன்னிடம் உள்ளதைக் கொண்டு நல்லறம் புரிந்து மன நிறைவுடன் வாழ்பவனுக்கே செல்வம் பயன்படும். அதே போல் எத்துணை வாய்ப்பு கிடைத்தாலும் ஒழுக்கம் தவறாத பண்பாளனுக்கே, உண்மையான உயர்வும் குன்றாத புகழும் கிட்டும்.
அருச்சுனனுக்கு பீபத்ஸு என்ற ஒரு புகழ்ப்பெயர் உண்டு. அதாவது, எந்த வசதி, எவ்வளவு வாய்ப்பு கிடைத்தாலும் கூட, அதை பயன்படுத்திக்கொண்டு அவன் ஒருநாளும் ஒழுக்கம் தவற மாட்டான், வெட்கப்படத்தக்க செயல்களை கனவிலும் புரியான் என்று அப்பெயர் பொருள்படும்.
வெற்றி பெறுவோம்! புகழுடன் வாழ்வோம்!
பிரியங்களுடன்,
புவனேஷ்வர்!
2 comments:
Good. Write more on Thirukural.-Ganesan.
Good. Write more on Thirukural.-Ganesan.
Post a Comment