Disable text selection

June 1, 2012

சீதை, உதாரண பெண்மணி, வீரமங்கை

நமது மக்களுக்கு வெறும் வாயை மெல்ல "அவல்" வேண்டும் அல்லது "அவள்" வேண்டும்... .

சமீபத்தில் ஒரு நீதிமன்றம் அழகிய ஒரு ஆலோசனையை வழங்கியது. பெண்கள் சீதையைப்போல இருக்க வேண்டும் என்பதே அந்த ஆலோசனை. உடனே பொங்கி எழுந்தனர் மங்கையர் திலகங்கள் (அதாங்க, பெண்ணிய வாதிகள், மற்றும் அவர்களுக்கு ஒத்து ஊதுவோர்). ஆஹாவென்றெழுந்தது காண் பெண்ணியக்கூச்சல்!

இவர்கள் எல்லாரும் சீதையை ஒரு ஆணாதிக்கத்தின் பலிகடாவாக பார்க்கிறார்கள். எங்கிருந்து தான் கண்டுபிடித்தார்களோ இந்த ஆணாதிக்கம் என்ற சொல்லை நான் அறியேன். சரி அதை விடுங்கள். விஷயத்துக்கு வருவோம். இந்தப்பதிவின் மூலம் நான் ஒன்றைத்தெளிவு படுத்த விரும்புகிறேன். சீதை ஒரு வீர மங்கை. இவர்கள் எல்லோரும் நினைப்பது போல வேறு வழி இல்லாமல் கணவனால் வற்புறுத்த பட்டோ அல்லது கடமைக்காகவோ காடு செல்லவில்லை. காலமெல்லாம் அழுது வடியவும் இல்லை.

ராமன் காடு சென்றது தகப்பனாருக்காக. ஆனால் சீதை காடு சென்றது ராமனுக்காக. ராமனுக்காக மட்டுமே. கடமைக்காக அல்ல. காதலுக்காக.

கடமைக்காக கணவனைப்பின் தொடர்ந்திருந்தால் அவள் "நீர் இன்றி ஒரு கணமும் நான் உயிர் தரித்திருக்க முடியாது" என சொல்லி இருக்க மாட்டாள். உண்மையில் ராமன் எவ்வளவோ சொல்லிப்ப்பார்த்தான் சீதையிடம். காடு துக்ககரமானது, நந்தவனம் இல்லை, கல்லும் முள்ளும் துஷ்ட விலங்குகளும் நிறைந்தது என்று சொல்லிப்பார்த்தான். ஒன்றும் சீதையின் காதலுக்கு முன்னால் எடுபடவில்லை. அவள் சொல்கிறாள் "கல்லும் முள்ளும் புலன்களை அடக்கும் திறன் இல்லாத மக்களுக்கு பயம் தரும். நீரும் நானும் அவ்வாறான்றே. உமக்கு முன்னால் நான் கல்லையும் முல்லையும் மிதித்துக்கொண்டு உமக்கு மென்மையாக்கிக்கொண்டு போவேன்" என்று. இது கடமைக்காக போகிற மனைவி பேசும் பேச்சா? தானே விரும்பி, கணவனார் தடுத்தும் கேளாது அவரைப்பின் தொடர்ந்தாள் மஹாபதிவ்ரதையான சீதை.

காட்டில் அவளை ராமன் தேடாமல் கால விளம்பம் பண்ணினான் என்று சிலர் குற்றம் கூறுவது வேடிக்கையாக தான் இருக்கிறது. அவர்கள் இருந்தது காட்டில். உயிரை விடப்பிரியமான மனைவி காணவில்லை என்றவுடன், எவன் முன்னால் யாரும் யுத்தத்தில் நின்று உயிருடன் திரும்ப முடியாதோ, அப்பேர்ப்பட்ட மஹா வீரனான ராகவன் உடைந்து தவித்து ஏங்கி கலங்கி கதறி கேவி அழுதான். அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா, விலங்கு தின்றதா, ராக்ஷசர் தின்று விட்டார்களா, ஒளிந்து விளையாட்டு காட்டுகிறாளா ஒன்றும் புரியாமல் அலை மோதி, தேடி திண்டாடி குற்றுயிராக இருந்த ஸ்ரீ ஜடாயு பெருமான் துப்பு சொல்லும் வரைக்கும் அவளுக்கு என்னாயிற்று என அறியாதவன் ஆகத்தானே இருந்தான் ராமன்?

அவன் காதலை கேள்விக்குறியாக்கும் பேதையர் பார்க்க வேண்டியது: யாராலும் ஜெயிக்க முடியாத மஹாவீரனை காதலியின் பிரிவு "மானே கண்டாயா?", "அசோக மரமே கண்டாயா?", "பனை மரமே கண்டாயா?"."யானையே கண்டாயா?", "ஏ புலியே,, உனக்கு தான் பயமே இல்லையே நீயாவது சொல்லேன் என் சீதையைக்கண்டாயா" என புலம்ப வைத்து.

காட்டையும் மேட்டையும் நதிகளையும் தாண்டி துக்கத்தோடு அவர்கள் சுக்ரீவனை அடைந்ததே பெரும் சாதனை. சாமான்ய மனுஷனானால் மரித்துப்போயிருப்பான்.
அதன் பின் மழைக்காலம் வந்தது. சீதையை தேட வானரர்களை அனுப்பி காலம் ஆனது. இதெல்லாம் கணக்கில் வராதா?

இத்தனையையும் தாண்டி அந்த பக்கம் பார்த்தால் சீதையும் கஷ்டம் தானே பட்டாள்?

ராவணன் பண்ணிய பெரிய தப்பு எதிரியை குறைத்து மதிப்பிட்டது. அதை விட பெரிய தப்பு மாற்றான் மனைவி மேல் காமுற்று கைவைத்தது. அவனைப்பொறுத்தவரை தன் தங்கையை மூக்கறுத்த மனிதனுக்கு பொறுக்க முடியாத தண்டனையை தர வேண்டும். அவன் மனைவியை மயக்குவதை விட என்ன தண்டனை பெரிது என நினைத்தான்.

அவன் அவ்வாறு நினைப்பதற்கு அவனுக்கு காரணங்களும் இருந்தன. அந்த நாள் வரை, ராவணன் மஹா பண்டிதன், மஹா வீரன், அழகன்...... அவனுக்கு மயங்கிய பெண்கள் பலர் பலர். அவன் அழகுக்கு சிலரும், வீரத்துக்கு சிலரும், செல்வத்துக்கு சிலரும், அதிகாரத்துக்கு பயந்து சிலரும் அவனுக்கு உடன்பட்டு கிடந்தனர். அவர்களைப்போலத்தான் சீதையும் இருப்பாள், தன்னைப்பார்த்ததும் மயங்கி உடன்படுவாள் என நினைத்தான் தசகண்டன். எந்தப்பெண் தான் தன்னைக்கண்டு மயங்க மாட்டாள் என இறுமாந்தான். ராமனும் அற்ப மனிதப்பூச்சி என எள்ளினான்.......

ஆஹா, எவ்வளவு தப்புக்கணக்கு போட்டு விட்டான்! ராமன் வீரத்தை மதிக்காதது கூட கிடக்கட்டும்.சீதையை சாமானியப்பட்ட பெண் என நினைத்தது அவன் பண்ணிய முதல் தவறு. அதனால் தான் அவளை மயக்கி விடலாம் என எண்ணி அபஹரித்தான். ஆனால் நடந்தது நேர்மாறானது. அவன் எவ்வளவுக்கெவ்வளவு சீதாதேவியை வற்புறுத்தினானோ அவ்வளவுக்கவ்வளவு அவள் ராமன் மேல் கொண்ட காதல் வளர்ந்தது. எவ்வளவுக்கெவ்வளவு அவளை பயமுறுத்த பார்த்தானோ அவ்வளவுக்கவ்வளவு அவள் உறுதி கூடியது. "உயிரை விட்டாலும் விடுவேன், உனக்கு உடன்படேன்" என்றாள்.

அது மட்டும் இல்லை, அவள் ராமன் மீது கொண்ட நம்பிக்கை ஒரு புறம் காதலியாக, மனைவியாக. அதே சமயம் ஒரு அரசியாக அவன் கடமையை அவன் செய்ய வேண்டும் என்ற நோக்கம்.

அவள் நினைத்திருந்தால் இரவோடு இரவாக ஹனுமான் முதுகில் தப்பி இருக்கலாம். வஞ்சகத்தால் கொண்டு வரப்பட்டவள் வஞ்சகத்தால் தப்பினால் தவறில்லை அவள்பால். ஆனால் ராமன் தன் கடமையை செய்ய வேண்டும் என உறுதியோடு அங்கேயே இருந்தாள். அழுது வடியும் பெண்ணாக இருந்திருந்தால் கோழையாக இருந்திருப்பாள். கோழை, தப்பிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் தப்பி இருப்பாள். சீதை வீர மங்கை. அதை செய்யவில்லை. மிகத்தெளிவாக இருந்தாள். அது மட்டும் இல்லை. ராவணன் பண்ணும் அட்டூழியங்களுக்கு, அங்கே ராமன் வந்தால் தானே முடிவு ஏற்படும் என ஒரு மக்கள் நன்மைக்காக  ஒரு அரசியாக யோசித்தாள்..... ராமன் அங்கு வந்தால் போர் புரிய நேரிடும். வஞ்சகர்களோடு போடும் போரில் அவனுக்கு ஆபத்தும் நேரலாம். ஒரு மாதம் தான் உயிர் தரிப்பேன் என்ற கெடு முடிந்தால் தான் இறக்க நேரிடலாம். ராவணன் பலாத்காரம் பண்ண முயன்றாலும் கற்புக்காக உயிர் விட நேரிடலாம். தப்பிக்க வழி கிடைத்தும் அங்கேயே இருந்தாள் இரும்பு இதயத்தோடு, உறைந்த உள்ளத்தோடு.... ஒரு அரசிக்கு உரிய கடமையாலும் கணவன் மீது கொண்ட நம்பிக்கையாலும். கோழையா அவள்? இல்லை...... அவள் வீர மங்கை!

பலரும் சொல்கிறார்கள் ராமன் அவளைக்காட்டுக்கு அனுப்பி விட்டான். அவள் வாழ்நாளெல்லாம் துயரம் தவிர வேறு இல்லை என்று அளப்பார்கள்.

ராமனுக்காகட்டும் சீதைக்காகட்டும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விட அவர்களின் அரசு கடமை தான் முக்கியம். இதில் அவர்கள் இருவருமே மிகத்தெளிவாக இருந்தார்கள். வண்ணான் ஒருவன் குறை சொன்னான் என்பதற்காக ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பினான் என்பதே குற்றச்சாட்டு. ஆனால் ராமன் ஒரு அரசனாக வேறு என்ன செய்திருக்க முடியும்?

"நீ சொல்வதை சொல்லு, நான் கண்டுகொள்ளப்போவதில்லை" என்று நாம் சொல்லலாம். நாடாளும் மன்னன் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் வதந்தி உண்மை என்றே பேசுவார்கள்.

வண்ணானை பிடித்து சிறையில் போடலாமா? இல்லை நாவை அறுக்கலாமா? இல்லை தலையையே வாங்கி விடலாமா? அப்படிப்பண்ணினால் வதந்தி உண்மையாகும், ராமனும் கொடுங்கோலன் என்று தூற்றப்படுவான்.

சரி, பரதனுக்கு ஆட்சியை தந்து விட்டு சீதையோடு காட்டுக்கு பொய் விடலாமா? அப்படியானால், உண்மை வெளிவந்ததால் அவமானப்பட்டு அரசன் ஆட்சி துறந்தான் என்று ஆகி, வதந்தி உண்மையாகும். நல்ல அரசனாக பெயர் எடுத்தாலும் சீதை மேல் கற்பிக்கப்பட்ட களங்கம் உண்மையானது போல தான் ஆகும்

மீதமுள்ள ஒரு வழி என்ன?

சீதையை காட்டுக்கு அனுப்புவது தான். சீதையும் ஒன்றும் அழுது வடிந்து கொண்டு செல்லவில்லை. தன்னிச்சையாக ராமன் எடுத்த ஆணாதிக்க முடிவும் அல்ல.

தன்னிச்சையாக இந்த முடிவை ஒருவேளை யாராவது எடுத்திருக்க முடியும் என்றாள் அது சீதையின் முடிவாக தன் இருந்திருக்க முடியும். (என்னை சந்தேகப்பட்ட நாட்டில் இனி எனக்கு வேலை இல்லை, நீர் வேண்டுமானால் அரசராக கடமைக்காக இரும். நான் வனம் போகிறேன்.... என்று அவளே சொல்லி இருப்பாள்......)

அவர்கள் சொன்னது என்ன? அப்பா, உனக்கு ராணி மீது சந்தேகம் வந்து விட்டதா, அவள் இந்த நாட்டில் இனி இருக்க மாட்டாள். கடமைக்காக ராமன் இருப்பான் ஆட்சி செய்ய. கணவன் என்ற கடமையை விட காவலன் என்ற கடமை பெரிது. என்னை சந்தேகப்பட்ட மக்களுக்கு நானும் இனி ராணியாக இருக்க விரும்பவில்லை, இனி இந்த இடத்தில எனக்கு வேலை இல்லை என்று நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாக தான் சீதை காட்டுக்கு போயிருப்பாள்.

ராமனை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்? அவன் வாழ்க்கையில் சுகம் என்று எதையாவது அனுபவித்தானா? மொத்தம் பன்னிரண்டு ஆண்டுகள் தான் மனைவியோடு அதுவும் கலியாணம் ஆன புதிதில் இருந்தான். பின் பிதாவின் சொல்லைக்காக்க காட்டுக்கு போனான். அங்கும் மனைவியை ஒருத்தன் அபஹரித்தான். யுத்தம் வந்தது. உயிரைப்பணயம் வைத்து போராடி மீட்ட மனைவியை நாட்டுக்கு வந்தவுடன் வேறு வழி இல்லாமல் காட்டுக்கு அனுப்பினான். அவன் இதயம் எவ்வளவு நொறுங்கிப்போயிருக்கும்? அத்த்தனையையும் தாங்கி, கடமை வீரனாக நாட்டுக்கு வாழ்ந்தான்.

அவனைப்பற்றியோ, சீதாதேவியைப்பற்றியோ அவதூறு பேச நமக்கு யோக்யதை இல்லை.

த்யாகிகள் அவர்கள். உலக நன்மைக்காக தங்கள் வாழ்வை தெரிந்தே தொலைத்தவர்கள். எந்த நிலையிலும் பிரஜைகலையே முன்னிறுத்தி, தங்கள் சுகங்களை உறவுகளை மறந்தவர்கள்.

ஒன்றை நினைவில் கொள்க: எந்த நேரத்திலும் ராமன் தன்னை சந்தேகப்பட்டுவிட்டதாக சீதை எண்ணவில்லை. கணவன் - மனைவி என்ற முறையில் ராமனும் சீதையை என்றுமே சந்தேகப்பட்டதில்லை. அவர்களுக்குள் நம்பிக்கை இருக்க வேண்டிய அளவுக்கு அதிகமாகவே இருந்தது.

அரசன் என்ற முறையில், கணவன் என்ற பொறுப்பையும் பின்னுக்கு தள்ளி ராமன் இதயத்தை இரும்பாக்கிக்கொண்டு கடமைக்காக காடு போக சொன்னான் என்றாள் அவன் கடமை இது என உணர்ந்து இவளும் தன மனதை கல்லாக்கிக்கொண்டு அரசனான அவன் கடமைக்கு அரசியாக (பிரஜையாக அல்ல, அரசியாக) ஒத்துழைத்தாள். அவள் சீரிய மனைவி. அதோடு நிகரில்லா அரசி. கற்பின் திண்மை உடைய வீர மங்கை. துன்பப்பட்டு அழுத கோழை அல்ல. எந்த நேரத்திலும் இரும்பு இதயத்தோடு நிமிர்ந்து நடந்த பெண்சிங்கம்.

நான் பெண்ணாக இருந்தாள் நிச்சயம் சீதையைப்போல இருக்க விழைவேன். கணவனை பின்தொடர்வதில் மட்டும் அல்ல, அவள் கற்பில், அவள் திண்மையில், அவள் கடமை உணர்ச்சியில், "காதலன் ஒருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவுக்கும் கை கொடுத்து" என்ற படி கணவனின் கடமைக்கு ஒத்துழைக்க நம்பிக்கையோடு எந்த அளவுக்கும் ஏகியது, எந்த நிலையலும் உயிரே போகும் என்றாலும் பெண் சிங்கம் போல நிமிர்ந்து நடந்த வீரம்.... இத்தனையிலும் சீதை ஒரு உதாரண பெண்மணி....... வீரமங்கை......நிச்சயமாக.......

அந்த சீதையும் ராமனும் எல்லாருக்கும் நல்லபுதியை கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தித்து அமைகிறேன்.

 

 

No comments: