கேவலமான, இழிவான இந்த நடத்தை உதாரணம் காட்டுவது போல தண்டிக்கப்பட வேண்டியது தான். சந்தேகமில்லை.
ஆனால் தண்டனை தற்காலிகமான, இருக்கிற தீயவர்களை கட்டுக்குள் வைக்கவே உதவும். இன்றைய சின்னஞ்சிறிய பிள்ளைகள் நாளைய ஆண்மக்கள் (பெண்களும்). அவர்களாவது இம்மாதிரி கனவிலும் கருதாது மனைவி தவிர மாற்றாரை தாயாக, தமக்கையாக, தங்கையாக, மகளாக பார்க்க என்ன செய்கிறோம்?
எது உதவாது என சொல்லவா? கண்டிப்பாக மெகா சீரியல்களும், காமத்தை தூண்டும் சினிமாக்களும், பெண்ணை போகப்பொருளாக சித்தரிக்கும் ஊடகங்களும், காமக்களஞ்சியங்களும் இதற்கு உதவாது. மதிப்பெண் சார்ந்த குழந்தைப்பருவமும், பணம் சார்ந்த வாழ்க்கையும், பிறர் சார்ந்த முதுமையும் உள்ளவரை மனிதம் உருப்படுமா?
நமது கலாச்சாரங்களை, "பிறன்மனை விழைதல் பாவம்" என்ற கோட்பாடுகளை சொல்லி வளர்க்கிறோமா? இன்றைய பிள்ளைகளுக்கு Michael Jackson, Ricky Martin, Bryan Adams, J Archer தெரியும். தப்பில்லை. ஆனால் அதே சமயம் அவ்வையாரை, கபிலரை, நற்கிள்ளியை, சேரனை, நற்சோனையை, கிள்ளி வளவனை, கண்ணகியை தெரியுமா? பட்டினத்தாரை தெரியுமா?
ஆங்கிலேயன் தனது கலாசார மகிமையை அவன் பிள்ளைக்கு சொல்லி கொடுக்கிறான். அவன் பிள்ளைக்கு ஷேக்ஸ்பியரை, ஷேல்லீயை, கீட்சை தெரியும். நம் பிள்ளைக்கு நமது கம்பனை, கபிலரை, சங்கத்தமிழை தெரியுமா? ஜப்பானியன், ஜெர்மானியன், பிரஞ்சுக்காரன் தனது மொழியை இலக்கணம் தவறாமல் சொல்லிக்கொடுக்கிறான். பிறகே ஆங்கிலம். இங்கே? எத்தனை தமிழ் பிள்ளைகளுக்கு தேமாங்காய் புளிமாங்காய் கூவிளங்காய் என்னவென்று தெரியும்? அது எந்த அண்ணாச்சி கடையில் கிடைக்கும் என பலர் கேட்பார்கள்.
மேற்கத்திய மோகத்தால், பணம் மேல் ஆசை கொண்டு, போலி கௌரவத்துக்கு ஆசைப்பட்டு மதிப்பெண்களையும் பொறியியல், மருத்துவமும், கார் பங்களா மட்டுமே நல்ல வாழ்க்கை என பெற்றோர் நினைத்து, நூறு சதவிகித ரிசல்ட் மற்றுமே பள்ளிக்கு முக்கியம் என பள்ளிகள் நினைத்து, நம் பண்பாட்டை கற்றுத்தர விரும்பாமல், அன்று விதைத்தோம். இன்று அறுக்கிறோம்.
இனியாவது விழித்துக்கொள்வோம். காவல் துறையே தேவை அற்ற (குற்றமே இல்லாத) உலகத்தை படைக்க விழைவோம். சிரிக்க வேண்டாம். நட்சத்திரத்தை பறிக்க ஆசைப்பட்டால் தான் கொய்யாக்காயாவது கிடைக்கும். இன்றாவது விழிப்போம்
பிரியங்களுடன்
புவனேஷ்
No comments:
Post a Comment