Disable text selection

September 1, 2012

அவல் வடை

வடை என்றால் நமக்கு பருப்பு வடையும் உளுத்தம் வடையும் தான் நினைவுக்கு சட்டென்று வரும் இல்லையா? எத்தனை நாள் தான் அதே வடைகளை சாப்பிடுவது? வேறு எதையாவது பண்ணிப்பார்க்கலாம் என்ற போது, தட்டியது பொறி, சிக்கியது ஐடியா!

இது மிகவும் எளிமையான ஒரு வடை. அரிசி அவலைக்கொண்டு தயாரிப்பது.

தனியாக சமைக்கும் பிரம்மசாரிப்பசங்களுக்கு அவல் ஒரு உற்ற தோழன். கால் மணி நேரம் போல ஊற வைத்தால் போதும். எதையாவது பண்ணலாம். தேங்காய் துருவி, வெல்லம் சேர்த்து இனிப்பு; காரமாக வேண்டுமானால் எரிப்பு சேர்த்து உப்புமா; ரொம்ப versatile பதார்த்தம்.

வித்தியாசமாக எதையாவது சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள், சாப்பிட அடம் பண்ணும் பிள்ளைகள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு பதார்த்தம்.

தேவையான பொருட்கள்:

அவல் - ஒரு ஆழாக்கு
மிளகாய்ப்பொடி - விருப்பம்
மிளகு பொடி- விருப்பம்
உப்பு - தேவைக்கேற்ப
வெங்காயம் (சாப்பிடுபவர்களானால்) - பாதி பெரிய வெங்காயம், சின்னதாக அரிந்தது.
பச்சை மிளகாய் - இரண்டு, சின்ன சின்னதாக வெட்டிக்கொள்ளவும்
சீரகம் - ஒரு சிட்டிகை
மல்லித்தழை - விருப்பமிருப்பின்
எண்ணெய் - வறுக்க
தூய நன்னீர் - அவலை ஊற வைக்க

செய்முறை:
தூய நன்னீரில் அவலை ஊற வைக்கவும். அவலை பொறுத்து ஊற வைக்க தேவையான நீரின் அளவும், நேரமும் வேறுபாடும். ஆதலின் அதை நான் குறிப்பிடவில்லை. உங்களிடம் உள்ள அவலை பொறுத்து நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

நன்கு ஊறிய அவலை கையால் பிசையவும். வடை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். அதில் எண்ணெய் தவிர மற்ற சாமான்களை விட்டு விரவி வைக்கவும்.

சட்டியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், மாவை வடை போல தட்டி போட்டு, சுட்டு எடுக்கவும்.

சுட்டு எடுத்த பின் என்ன செய்ய வேண்டும் என நான் உங்களுக்கு கற்றுத்தரவா வேண்டும்?
:)

பிரியங்களுடன்
புவனேஷ்

No comments: