Disable text selection

September 6, 2012

தவறிய அழைப்பு (கவிஞர் தனுசு)

உலகை மறந்து
உறக்கத்தில் இருந்தேன்
அலறி அடங்கியது கைப்பேசி!
துண்டானது
தூக்கம்!

அது
ஒருவரின் நினைவுறுத்தல்.
அது
நிறைவேற்ற மறந்த
நேற்றைய உறுதி மொழியின்
தொடர்சி.

எத்தனை வசதி!
எங்கோ இருக்கும் ஒருவர்
தவறிய செயலை நினைவுறுத்தி
கைபேசியை அலறவிட்டு சொல்கிறார்!

தூக்கத்தில் இருப்பினும்
ஒருவரின் அழைப்பை புரிந்து
விழித்துக்கொண்ட நான்....

விழி நிலையில் இருக்கையில் வரும்
என்
இன்னொருவரின்
என்னற்ற தவறிய அழைப்பை
ஒதுக்கிவிட்டு
ஒதுங்கிவிடுகிறேன்.

எத்தனை அலட்சியம்!
என்னுடனேயே இருக்கும் இன்னொருவர்
தவறிய செயலை நினைவுறுத்தி
சில
செய்திகள் மூலம் சொல்கிறார்.

ஒருவரின்  நினைவுறுத்தலுக்கு
தூக்கத்தை கலைக்கிறேன் ,
இன்னொருவரின் நினைவுறுத்தலை
தூக்கிப்போடுகிறேன்.

ஒருவர்
முக்கியமானவர்.
இன்னொருவர்
அலட்ச்சியத்துக்குள்ளானவர்.
ஏன் என்னிடம் இந்த பாகுபாடு?

ஒருவர் என்பவர்
நண்பர்!
இன்னொருவர் என்பவர்
மனசாட்சி!

நண்பன்
கொடுத்த பணி செய்யதவற
அழைப்பு
கைபேசியில் வந்தபோது துடித்தெழுந்த நான்...
மனசாட்சி விரும்பா
பணி செய்ய
அது
கண்டிக்கும் போதும்
அமைதியில் இருப்பதேன்?

நண்பன்
நேரில் வருவான்
மனசாட்சி
நேரில் வராது என்பதாலா?
-தனுசு-

No comments: