மனை துறந்து கான் புக்கு உடல் வளைத்து பரம்பொருளை தியானித்து தவம் செய்வோன் யோகி... கொண்டவள் கைப்பிடித்து, முலைகள் முகம் பதித்து மடியில் தான் கிடந்தது, மனையறம் தான் படந்து வாழ்வோன் போகி.... அதுவும் ஒரு வகையில் யோகமே..... பக்திக்கு இடமிருந்தால் முக்திக்கு வழியுண்டு...... யார் மேல் பக்தி? அடுத்தவனையும் நானாக, எனக்குள் ஓர் அங்கமென பாவனை செய்து சம பாவம் கொண்டு பரிபக்குவம் அடைதல் ஒரு வகை..... அது பாவச்பந்தனம் எனப்படும்...... அதனினும் மேலாம் நிலை ஒன்றுண்டு..... அவனுக்கு/அவளுக்கு உள்ளே இறைவன்.... நான் நீசன்..... அவனுக்கு - இறைவனுக்கு தொண்டு செய்கிறதாய் பாவித்து பிறர்க்கு தொண்டு செய்தல் இவ்வகை..... இது "நைச்சியம்" எனப்படும்.......... முந்தையதில் அகந்தைக்கு இடம் உண்டு..... வரலாம்..... வாய்ப்புண்டு..... பிந்தையதில் அகந்தை என்ற பேச்சே கிடையாது...... மனைவி அணைப்பில் மாயவனை பார்த்தால் என்ன? அங்ஙனம் ஒரு இல்லறத்தான் நினைப்பானேனில், அவனுக்கு கோயில் குளம் தேவையில்லை....... அத்தகைய மேலாம் இல்லறம் முக்திக்கு முதல் படி....... தன் சுகத்துக்காக தன் துணையை பயன்படுத்திக்கொள்ளும் உடல் அனுபவ வெறி இருந்தால் இது நடக்காது..... மனைவியை இவனும், கொண்டவனை அவளும் பக்தியோடு அணைந்தால்? அது பூரண ஒப்புதல்..... ஒப்படைத்தல்..... பரிபூரண நம்பிக்கையும் காதலும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் சங்கம சங்கீதம்..... ஆத்மாவின் ஆனந்த ராகம்...... அதற்கு சரீரம் தாளம் மட்டும் போடும் அனுபவ கச்சேரி..... உள்ளக்குடம் உடைந்த கணம் உணர்வுகள் ஊற்றெடுக்க, அன்பு ஆறாக, நீ - நான் வேற்றுமை நீறாக, பாசம் பிரவகிக்க, அண்மைக்கு அர்த்தமின்றி, அனுபவிப்பவனுமில்லை, அனுபவிக்கப்படுபவளும் இல்லையென்றாகி அனுபவமே மிஞ்சும் நிலை.......
முக்தி என்றால் என்ன? இறைவனும் பக்தனும் இரண்டேன்ற நிலை பொய், ஒரே இறை நிலை தானே முக்தி? முக்திக்கு முதல் படி இங்கே ஆரம்பம்..... துணைக்குள் தேவனை கண்டால், துணையின்றியும் அடையலாம்..... இதிலே இயலாமை- இறைவனை காட்டாது...... உடலெடுத்து வந்த போதே உடனிருந்தும் உணராதவன், உருவமிலாப்பெருநிலையை ஒருநாளும் உணரான்..... இறைவனின் உருவம் இதோ உன்னுடன்..... கோயில் கற்சிலை முன் கும்பிட்டு நின்றவனே! கொண்ட பொற்சிலை பரமாத்மா வாழுமிடம்..... போகமும் யோகமும் ஒருசேர உனக்களித்து இகத்துக்கும் பரத்துக்கும் பெருந்துணையாய் வந்தது - நீ கல்லில் தேடும் இறைவன்........ போகியே, விழித்தெழு..... இன்றிரவே உன் யோக சாதனம் தொடங்கட்டும்..... மனை துறந்து கான் புக்கு உடல் வளைத்து பரம்பொருளை தியானித்து தவம் செய்வோன் யோகி... கவலை கொள்ளாதே...... நீயும் யோகி தான்...... நீ விரும்பினால்...... இன்னும் எதற்காக காத்திருக்கிறாய்? மானிட வர்க்கத்தை வளர்த்து விடு...... நீயும் முக்தி அடை...... :)
No comments:
Post a Comment