Disable text selection

July 13, 2012

இன்சொல்

இனியன கூறல் நம் பண்பாட்டுக்கு இசைந்த ஒன்று.

வள்ளுவர் கூறுவார் 

"இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று"

எத்துணை உண்மையான வார்த்தைகள்! மனத்தில் அன்பு இருந்தால் வார்த்தையில் கனிவு இருக்கும். வார்த்தையில் கனிவு இருந்தால் இனிய பேச்சு அமையும். அப்படி அமைந்தவனுக்கு எதிரிகள் தான் யார்? யாரும் இருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் அவனை ஒன்றும் பண்ண முடியாது. எல்லாரிடமும் குணவான் என பெயர் எடுத்த ஒரு பண்பாளனை ஓரிரு எதிரிகள் என்ன புரட்டி விட முடியும்? 

சொற்கள் நம் வசம் உள்ள கருவிகள். எந்த நேரத்தில் எப்படி உபயோகிக்க வேண்டும் என தீர்மானிப்பது ஒருத்தனின் PR skills பொறுத்த விஷயம்.

எந்நேரமும் இனிமையாக பேசுவதும் கூடாது - சில இடங்களில் கோபம் போல காட்டினால் தான் கார்யம் நடக்கும். சிவ பெருமான் முருகனை கோபித்தது போல நடித்தார் - "மைந்தனை வெகுள்வான் போல" என்று என சொல்லும் இலக்கியம். மயிலே மயிலே என்றால் இறகு போடாது!

அதே சமயம் எந்நேரமும் சிடு சிடு என்று இருந்தால் அவன் கோபத்துக்கு மதிப்பு இல்லாமல் போய் விடும். அவன் கோபமும் இயல்பான ஒன்றாக ஆகி, யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். சாது கோபித்தால் ஏதோ விஷயம் இருக்கு போலயே என என்னும் மக்கள் முன் கோபி கோபித்தால், "அதுக்கு அது தான் வேலை, புத்தி அப்படி தான் அதுக்கு விட்டு தள்ளு" என்று சொல்லுவார்கள் அல்லவா?

நீதி சாஸ்திரத்தில் ஒப்பற்ற நிபுணர் அசுர குரு சுக்ராச்சார்யார். அவர் ஒரு சந்தர்ப்பத்தில், கோபம் கொண்ட தன் மகள் (சிறு குழந்தை) தேவயானிக்கு பின்வருமாறு உபதேசிக்கிறார்:

"எவன் ஒருவன் பாம்பு சட்டையை உரிப்பது போல கோபத்தை உரித்து அகற்றுகிறானோ, அனவே தீரன். கோபத்தை அடக்கியாளுபவனே தீரன். கோபத்தை அடக்கி ஆளுபவனே கார்ய சித்தி அடைகிறான். கோபம் உடையவனை பெற்றோரும், கட்டிய மனையாளும், குழந்தைகளும், பணியாட்களும், நண்பர்களும் உறவினர்களும் வெறுத்து விலகுவர்" என்று சொல்லுகிறார்.

ரிக், யஜுர், சாம உபாகர்மாக்களில் ஒரு மந்தரப் பிரயோகம் வரும்:  

कामो अकार्षीन्नमो नमः  कामो कार्षीत् कामः करोति नाहं करोमि   कामःकर्त्ता नाहं कर्त्ता कामः कारयिता नाहं कारयिता एष ते काम कामाय स्वाहा|    
मन्युरकार्षीन्नमो नमः  मन्युरकार्षीन्मन्युः  करोति नाहं करोमि मन्युःकर्त्ता नाहं कर्त्ता मन्युः कारयिता नाहं कारयिता एष ते मन्यो मन्यवे स्वाहा||

காமோ அகார்ஷீன்னமோ நம: காமோ கார்ஷீத் காம: கரோதி நாஹம் கரோமி காம: கர்த்தா நாஹம் கர்த்தா காம: காரயிதா நாஹம் காரயிதா ஏஷ தே காம காமாய ஸ்வாஹா|

மன்யுரகார்ஷீன்னமோ நம: மன்யுரகார்ஷீன்மன்யு: கரோதி நாஹம் கரோமி மன்யு: கர்த்தா நாஹம் கர்த்தா மன்யு: காரயிதா நாஹம் காரயிதா ஏஷ தே மன்யோ மன்யவே ஸ்வாஹா||

சுருக்கமாக சொல்வதென்றால் இதன் பொருள் "காமம் தான் பாபம் பண்ணியது, கோபம் தான் பாபம் பண்ணியது" என்று வரும்.

இதையே இன்னும் பலருக்கும் தெரிந்த பழமொழியாக சொல்லுவதென்றால் "கோபம் பாபம் சண்டாளம்" என்போம்.

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: