Disable text selection

July 27, 2012

 

இன்று வரலக்ஷ்மி விரதம்; நன்னாள்; இன்று ஸ்திரீகள் வரலக்ஷ்மி பூஜை எல்லாம் பண்ணுவார்கள்; தேவியை பிரார்த்தித்து மகிழ்வார்கள்;

நல்லது. பண்ணட்டும்.நானோ பிரம்மசாரிப்பையன். நமக்கு அவர்கள் பாடு ஒன்றும் தெரியாது. இருந்தாலும் நானும் ஏன் பங்குக்கு ஏதாவது பண்ணனும் என்று மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு. இந்த ஸ்த்ரீஜனங்கள் - அம்மா, அக்கா, பாட்டி, அத்தைப்பாட்டி, மாமி, ஒன்று விட்ட மாமி அவர்கள் குழாம் எல்லாரும் நேராக ஏதேதோ ஸ்தோத்ரம் பாடுவார்கள். நமக்கு வருவதில்லை. அந்த வ்ரதமும் நமக்கில்லை காணும். சரி, நாம் என்ன பண்ணலாம்? என்ன இருந்தாலும் நம் பங்குக்கு எதையாவது பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டால் என்ன பண்ணுவது? இவர்கள் பண்ணுவதையே நாமும் பண்ணலாம். என்னடா என்கிறீர்களா? ஸ்திரீகள் பண்ணுகிற அத்தனை பூஜைகளும் தேவிக்கு ப்ரீதியை உண்டு பண்ணத்தானே? அதை நாமும் பண்ணி விடுவோம்!

அவளுக்கு ப்ரீதி உண்டு பண்ணுவது எது? எந்த பதிவ்ரதைக்கும் தனது பர்தாவின் புகழை பாடினால் ப்ரீதி உண்டாகும் அல்லவா? அதை பண்ணுவோம். சரி பண்ணலாம். நமக்கு நாள் முழுக்க உட்கார்ந்து பண்ண வேண்டாம் என இருக்கிறது. ஏதாவது குறுக்கு வழி இருக்கிறதா என பார்ப்போம் என்றால் இருக்கிறதே!

என்ன அது?

ஒரு அற்புதமான ஸ்லோகம்: கவி நயத்துக்காக மட்டுமே கூட இந்த ஸ்லோகத்தை சொல்லி சொல்லி மகிழலாம்.

இந்த ஸ்லோகம் மகா பாகவதரான ஸ்ரீ கூரத்தாழ்வான் அவர்கள், காஞ்சி தேவப்பெருமாளை நோக்கி இயற்றிய ஸ்ரீ வரதராஜஸ்தவம் எனும் அதி அற்புதமான நூலில் இரண்டாவது ஸ்லோகம்.

ஸ்ரீ நிதிம் நிதிமபாரமர்த்தினா மர்த்திதார்த்த பரிதான தீக்ஷிதம்|

சர்வபூதசுஹ்ருதம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே||

ஸ்ரீ நிதிம், தேவராஜன், அதிராஜன் : "திருவுக்கும் திருவாகிய செல்வா, தெய்வதுக்கரசே" என ஆழ்வார் எழாம்பத்தில் அருளிச்செய்த வண்ணம், திருவாகிய தாயாருக்கும் செல்வமாகி விளங்கும் தலைவன்;

நிதிமபாரமர்த்தினா மர்த்திதார்த்த பரிதான தீக்ஷிதம்: யாசிப்பவர்களுக்கு இல்லையென இயம்பாது வாரி வழங்கும் வள்ளன்மையை தனது சங்கல்பமாக கொண்ட வள்ளல் - இறையருள் நாடி வருபவர்க்கு இறையருளும் திருவருளும் ஒன்று கூடி வழங்கும் வள்ளல்;

சர்வபூதசுஹ்ருதம் தயாநிதிம்: எல்லா உயிர்களுக்கும் நட்பு பூண்டவரும், கருணையே வடிவானவருமான எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன்;

ஆஸ்ரயே: சரண் எனப்புகுகிறேன் 

"திருவுக்கே திருவான ஸ்ரீமன் நாராயணனை, அருளை யாசித்து வரும் அடியார்க்கு இல்லை எனச் சொல்லாது அருள் பொழியும் வள்ளலை, எல்லா உயிர்கட்கும் நட்புறவு பூண்ட கருணை ச்செல்வனான திருமாலை, தேவர்களுக்கும் யாவருக்கும் அரசனான கேசவனை நான் சரணாகதி பண்ணுகிறேன்" என்ற அர்த்தத்தில் அந்த மகாபெரியவர் அருளிச்செய்து இருக்கிறார்.

இந்த ஸ்லோகத்தையும் அன்னையின் திருமுன் சொல்லி, அவளோடு அவள் மணாளனையும் சேர்த்து வழிபட்டால், அந்த தேவி ஆனவள், தன மணாளர் புகழால் மகிழ்ந்து செல்வம் மட்டுமல்லாது, ஞானத்தையும் முடிந்த முடிபான பரம ஆனந்தமான சத்தியத்தையும் நமக்கு காட்டி அருளுவாள் என்பதில் சந்தேகத்துக்கும் இடமுண்டோ?

இந்தப்பதிவினை படிக்கும் எல்லோருக்கும் ஸ்ரீ பூமாதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ ஒப்பிலியப்பர் அனுக்கிரகம் பூரணமாக கிட்டட்டும் என பிரார்த்தித்து அமைகிறேன்.

 

 

 

No comments: