காந்தர்வ மணம் என்பது நமது பண்பாட்டில் அனுமதிக்கப்பட்ட எண்வகை மணங்களுள் ஒன்றாகும். திருமணத்துக்கு உரிய எல்லா கட்டுப்பாடுகளும் அதற்கும் உண்டு. ஐயமில்லை. காரியம் முடிந்ததும் கழட்டி விட கணையாழி மாட்டும் முறை அது என பகுத்து பார்த்து பொருள் அறிந்து சிலர் சொல்லுவர். அஃது அவ்வாறல்ல. இது வடநாட்டு சரக்கும் அன்று.
அதற்கு சான்றாக இதோ ஒரு பாடல் - குறுந்தொகை -25.
யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால்
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.
-கபிலர்
சட்டெனப்பார்த்தால் ஒன்றும் விளங்காது பாடலில்; சற்று உன்னிப்பாகப்பார்ப்போம்;
தலைவனோடு காதல் கொண்ட தலைவி பெற்றோரும் ஊராரும் அறியாது தலைவனை இரவில் கண்டு மகிழ்கிறாள்....... இதற்கு அவள் தோழி உதவுவாள்;
தலைவனோடு இன்புற்றிருந்து விட்டு, யாருமறியாமல் வீடு வந்த தலைவி, தோழியிடம் உரைப்பதாக அமைந்த பாடல்; "அந்தக்கள்வன் என்னை மயக்கிக்கூடிய அத்தினம் யான் அவனை மணந்தேன்...... ஆனால் அந்த நேரம் யாரும் அங்கு இல்லை....... நேற்றிரவு எனை அவன் துய்த்த பின் இன்று எனை அவன் அறியேன் என உரைப்பானாயின் யான் என் செய்வேன்? ஆற்றின் நீரில் வரும் மீனுக்காகக்காத்திருக்கும் தினையின் தாள் (இலை) அன்ன பசிய கால்களை உடைய நாரை மட்டுமே அன்றோ கண்டது எங்கள் சங்கமத்தை!"
இது தலைவி புலம்புவது போலத்தோன்றினாலும், தலைவி அவன் பால் கொண்ட காதலும், நம்பிக்கையும், களவில் கூடியதையே திருமணமாக எண்ணும்கற்பின் மாண்பும் தெள்ளென விளங்கும்! (இந்தக்காலத்தில் காதலனை திருட்டுப்பயலே என செல்லமாக அழைக்கும் தொனி இவள் கள்வன் எனத்தலைவனை விளிப்பதில் தெரிகிறது அன்றோ!)
குறிஞ்சிக்கோர் கபிலன் காண்! பொருந்துமிப்புகழுரை!
No comments:
Post a Comment