வரமென்னத் தகுமென்றன் வண்ணமயி லாள்;
அறம்வளர் நெஞ்சுடை யாளென தாவிக்
குரமனை யாள்திரு மகளனை யாள்;
யதுகுலத் தேயுதித் தாளென் றேவி
மதுகை டபர்தமை தொடைக்களித் தாள்;
வஞ்சகர் தமைவெறுப் பாளிவள் மட்டும்
நஞ்சிலா யெண்ணிலாப் பொய்யுரைப் பாள்;
கண்ணிலே மணிபோல் வாளிவ ளேயான்
பண்ணிய தவப்பயத் துணைவி யென்றன்
னெண்ணிலாத் துயரழித் தேயோர் காதற்
பண்ணிலே பணிந்தெனக் கருள் தருவாள்;
எண்ணிலாக் குறும்பிழைப் பாள்காண் பிள்ளை
தண்ணிலாப் போல்நகை யுதிர்த்திடு வாள்;
கண்ணினாற்க் காவியங் கள்குழை ப்பாள் முழு
எண்ணமும் நாட்பட அவள்பதம் தான்.
பந்தள வில்வெண் ணெய்யது வேண்டி
மந்திப ழித்திடும் சேட்டிதஞ் செய்தாள்
முந்தைய நாள்கதை நம்புவ தாற்றேன்
அந்தமி லாநிலை தந்தனள் கூடி;
கண்மணி கண்ணனி வள்கரம் கொண்டதும்
நண்ணிய நன்மைகள் எண்ணவும் ஆற்றேன்
சின்னவன் என்றெனை எள்ளிய தறியேன்
மண்ணெனை பொன்னெனப் பண்ணினள் பைந்தொடி.
பண்டம் சிறியது யான்பகிர்ந் தாலும்
அண்டத் துண்மைகள் அன்புடன் காட்டுவள்
கண்டறி யாதன காட்டுவள் கான்முனி
விண்டறி யாதன மெய்பல சொல்வாள்;
தின்னற் கரியபொ ருள்மருந் தாகிலும்
கன்னற் பாகினில் போல் - வேதாந்தம்
சின்னக் குழவிம திபுரிந் துய்திட
கண்ணனி வள்தந் தாளில் லறமதில்;
பண்ணிய புண்ணியம் யாதோ அறியேன்
திண்ணிய மேன்மகள் கண்ணனை பற்றிட;
கன்னற் றேமொழி காதலி யென்னைப்
பின்னற் பிறவிக ளின்னலிற் காத்தனள்;
என்னத வம்செய் தேன்யா னிவளை
வன்னமு டன்வாழ் வில்மணந்தி டகாண்;
மண்ணும்மு லைமணி பொன்னும் விரும்பிய
சின்னவ னென்னையும் சிந்தையில் மாற்றினள்;
கண்மணி இவளை கைக்கொண்டது முதல்
பண்ணிய சீர்மைகள் திண்ணிய பலபல;
அன்றவள் பணிந்தனள் இன்றுயென் முறையாம்
இல்லறம் கண்ணனி வள்செய நல்லறம்;
கைப்பிடித்தாள் எனை காதலிற் கட்டினாள்
மெய்ப்பிடித் தேனது காந்தா சம்மிதம்;
தைப்பிறந்தா லெழும் ஞாயிறு கண்ணனெம்
மைப்பிடித்தா ளிருள் மாயை மருண்டது;
+++++++++++++++++++++++++++++++
கான் முனி: காட்டில் தவம் இயற்றும் முனிவர்; கன்னற்றேமொழி : கன்னல் தேமொழி = கரும்பின் சாறு போல், தேன் போல் இனிய மொழி பேசும் மனைவி; மெய்ப்பிடித்தேன்: உண்மை (முடிவான உண்மையினை) பிடித்தேன்;
காந்தா சம்மிதம்:
உபதேசத்தில், வணங்குதற்கு உரிய குரு ரூபத்தில் வந்து உபதேசிப்பது ஒரு வகை (பிரபு சம்மிதம்). நண்பனாக வந்து உபதேசிப்பது இன்னொரு முறை (சுஹ்ருத் சம்மிதம்/மித்ர பாவம்). மனைவியாக/கணவனாக/காதலியாக/காதலனாக வந்து உபதேசிப்பது மேலும் ஒரு முறை (காந்தா சம்மிதம்/காந்தா பாவம்)
2 comments:
அருமையான சொல்லாட்சி. மிக அருமையான கவிதை. நன்றி.
தங்கள் பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி, சகோதரி :)
Post a Comment