சரி. இதெல்லாம் இப்போது வேண்டாம். பேசிப்புரிகிற விஷயம் இல்லை.
அது புரிந்து அனுபவத்தில் பிடிபடுகிற வரையில் ஏதாவது ஒரு மூர்த்தத்தை நன்கு கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதே நமக்கு மனசுக்கு ரொம்பவும் சிலாக்கியமாக இருக்கிறது. அந்த தெய்வத்துக்கு என ஒரு புராணம் இருக்கிறது, அந்த லீலா விநோதங்களை நாம் ரசிக்கிறோம், ஈடுபட்டு லயித்து இருக்கையில் ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. அப்படி ஒருத்தர் பக்தி பண்ணுகிறார் என்றால், அந்த மூர்த்தமே - தேவதையே அவருக்கு அனுக்கிரகம் பண்ணி, முடிந்த முடிபான சத்தியம் எதுவோ அதை நோக்கி அழைத்து கொண்டு போகும். அதற்குத்தான் குணம் குறி கடந்த ஆத்மஸ்வரூபமான பிரம்மம் சங்கல்பித்துக்கொண்டு பல லீலைகளை நம்மை போலவே பிறந்து நடத்திக்காட்டுகிறது. "இன்னின்ன யோனியுமாய் பிறந்தாய்" என ஆழ்வார் பாடுகிறார்.
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்ப்பவதி பாரத:|
அப்யுத்தானம் அதர்மஸ்ய தத் ஆத்மானம் ஸ்ருஜாம்யஹம்||
என்று கீதையில் கிருஷ்ணர் சொல்லுகிறார். அவர் சொன்னால் நாம் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும். ஜகத்குரு பட்டத்தினை முதன் முதலில் கட்டிக்கொண்டவர் அவர் தான். "க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்" என்று தானே சொல்லுகிறோம்? அப்போ அவர் சொன்னதை கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம் இல்லையா?
எந்த சிவன் பிரளயத்தில் கோர பயங்கர காலாந்த ருத்திரனாக இருக்கிறாரோ அவரே பரம சாத்வியாக அஹிம்சை கைக்கொண்ட சந்யாசியாக சங்கரராக வந்தார். ஞான உபதேசம் பண்ணி வைத்தார். அதையே கிருஷ்ணனும் பண்ணினான். யுத்த பூமியில் பண்ணினான்.
எல்லாம் ஒருவரே. ஆரம்பத்தில் பேதங்கள் எல்லாம் இருந்தாலும் போகப்போக அவை எல்லாம் அடிபட்டு போய், எல்லாம் ஒன்று தான், ஒரே வஸ்து தான் இப்படி பலவாக தெரிகிறது என அனுபவத்தில் மனத்திலேயே தோன்றி புரிந்து விடும்.
அது அந்த உபாசனா மூர்த்தியின் அனுக்கிரகதினால் தான் நடக்கும். நாம் சொல்லக்கூடாது.
நாம் பண்ண கூடியது என்ன?
ஒருத்தர் வாஸ்தவமான பக்தி பண்ணுகிறார் எனில் அவரை அவர் வழியிலேயே இருக்க ஊக்கம் தர வேண்டும். எந்த சித்தாந்தத்தில் அவர் இருக்கிறாரோ அதிலேயே அவருக்கு ஒரு பிடிப்பு ஏற்படும் படி நாம் உதவி பண்ணினோமானால் போதும். அந்த ஸ்ரத்தையை வளர்த்து விட்டால், அதற்க்கு முடிந்ததை பண்ணினால் போதும்.மற்றதை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
சித்தாந்த சண்டைகள் பண்ணுவதோ தர்க்கம் பண்ணுவதோ குழப்பத்தில் தான் கொண்டு போய் விடும். பக்தியின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களிடம் போய் சித்தாந்த தர்க்கம் பண்ணுவது அபாயமான வேலை.
நாளை வரலக்ஷ்மி வ்ரதம்:
பிரதி வருஷமும் ஆடி/ஆவணி மாசம் பூர்நிமைக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை (வளர்பிறை வெள்ளிக்கிழமை) இந்த பவித்தரமான வ்ரதம் கடைப்பிடிக்கப்பெற்று வருகின்றது. இந்த வ்ரததினை பற்றி ஆழமான தகவல்கள் வேண்டுவோர் இங்கே சொடுக்கவும். எனது மதிப்பிற்கு உரிய சகோதரி ஸ்ரீமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள் தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவருக்கு எனது பணிவான வணக்கங்களை உரித்தாக்குவதோடு இப்பதிவினை நிறைவு செய்கிறேன். அனைவரும் சகல சௌபாக்யங்களும் மங்களங்களும் நிறைந்து வையத்துள் வாழ்வாங்கு வாழ பரமேஸ்வரனை வேண்டுகிறேன்.
எல்லாம் சரி. மேலே படத்தில் ஏன் ராதையும் கண்ணனும் இருக்கிற மாதிரி ஒரு படத்தை போட்டு இருக்கிறேன்?
அது வேறு ஒன்றும் இல்லை. ராதைக்கு கண்ணன் தான் எல்லாமே.
ஒரு கவலையும் இல்லாமல் கண்ணன் தோள் மீது அவர் சாய்ந்து இருப்பதை பார்த்தீர்களா?
அவளுக்கு சாஸ்திரம் பற்றி, உபநிஷத் பற்றி எல்லாம் கவலையே இல்லை. கண்ணன் மேல் ஆசையும் பக்தியும் தான் அவளுக்கு எல்லாமே.
அவளுடைய அன்புக்கு தான் முழுதும் அடிமைப்பட்டு போனான் கண்ணன்.
ஸ்மர கரல கண்டனம், மம சிரசி மண்டனம், தேஹி பத பல்லவ முதாரம் (ஹே ராதே, உன் தளிர் போன்ற பாதங்களை எனது தலை மேல் வைத்து நீ அருள் புரிவாய்") என அவனே எழுதினான். பரம யோகீஸ்வரர்களுக்கும் அகப்படாத பகவான் அவளுக்கு கட்டுப்பட்டு போனான். அவள் பக்திக்கு கட்டுப்பட்டு போனான்.
அது தான் பக்தி. அதற்குத்தான் இந்தப்படம்.
-----
பிரியங்களுடன்
புவனேஷ்
4 comments:
அருமையான கருத்துக்களை கொண்டப் பதிவு
கண்ணனின் தோளில் சாய்ந்த பிறகுதான்
சாஸ்திரமேது உபநிடதமும் ஏது!
அவைகள் ஏதுவாகச் செய்வது அவனை அடையவே அல்லவா!
அருமை சகோதரரே!
தங்கள் வருகைக்கும் கருதுரையிட்ட மேன்மைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள், சகோதரரே.
உண்மை! அவனையே அடைந்த பின் சாத்திரம் எதற்கு? :-)
நல்ல பதிவு.
அவரவர் நம்பிக்கையைக் குலைக்காமல் அவர்களை அவர்கள் வழியிலேயே ஊக்குவித்தல் என்பதுதான் சரியானதாகும். என்னுடையது மட்டுமே சரியான வழி என்ற பிடிவாதத்தைப் பிறரிடம் காண்பிக்கக்கூடாது.
தன்னுடைய பிரியமான உருவம் தனக்கு மட்டுமே தனித்தன்மை வாய்ந்தது. பிறருக்கு அவர்களுக்குப் பிரியமான வடிவத்தைக்கைக் கொள்ளலாம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.அப்போது வீண்சர்ச்சையைத் தவிர்க்கலாம்.
தங்களுடைய கட்டுரை நன்கு இருக்கிறது. அதிகம் சமஸ்கிருத சொற்களைப் பெய்து எழுதுவது அவற்றிற்கான பொருளை எளிதில் புரிந்து கொள்ளக் கூடியவர்களுக்கு மட்டுமே ரசிக்கும்.
உங்கள் போக்கில் முதலில் எழுதிவிட்டு, பின்னர் வடமொழிக்கு ஏற்ற தனித் தமிழ் சொற்கள் இருந்தால் அவற்றைக் கொண்டு சமஸ்கிருதச் சொற்களை வலி தெரியாமல் அகற்றலாம்.மிகவும் அவசியமான இடங்களில் மட்டும் வடமொழிச் சொற்கள் அப்படியே இருக்கலாம்.
இது ஒரு ஆலோசனை மட்டுமே. மற்றபடி உங்கள் மனோலயம் எப்படியோ அதுபடியே நடந்து கொள்க.
தங்கள் அன்பான வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் அறிவுரை தந்த மேன்மைக்கும் எனது நன்றிகள், ஐயா.
எனது நடையில் கொஞ்சம் வடமொழி இருப்பது உண்மை தான். இனி அதற்கு உறையும் சேர்த்து எழுதி விடலாம் என இருக்கிறேன்.
தங்கள் சொற்களை மனதில் கொண்டு இனி பதிவுகளை எழுதுகிறேன்.
---
அன்புடன்
புவனேஷ்
Post a Comment