ஆழிப் பேரலை அடங்கா துயர்ந்து
ஊழித் தாண்டவ மாடிய வேளை
அக்கினிக் கொழுந்து பட்டினி கிடந்தது
புக்கிடஞ் சுட்டுப்பொ சுக்கிய வேளை
கற்றவர் வற்றா கேள்வியு ரைத்திட
உற்றவர் செற்றவர் பற்றறு வேளை
நல்லோர் தீயவர் வல்லார் இல்லார்
கல்லார் பொல்லார் பேதங் கொள்ளார்!
உரை:
ஆழிப்பேரலை ஊழிக்காலத்தே வருவது போல உயர்ந்து ஆடி ஊரை அழிக்க நிலம் புகும் காலமும், செவ்விய நாக்குகளை உடைய அக்கினி பசிகொண்டது போல சென்ற இடமெல்லாம் சினந்து சுட்டுப் பொசுக்கும் வேளையிலும், கற்றவர் தமது உயர்ந்த அறிவினை உரைக்கும் பொழுது, வேண்டியவர் வேண்டாதவர் என நினைக்காத வேளையிலும், இந்த மூவர் (கடல், நெருப்பு, சான்றோர்) நல்லவர், தீயவர், வலியவர், மேலியவர், கற்றவர், பொல்லாதவர் என்ற பாகுபாடின்றி, தமது கடமையை முடிப்பர் (அதாவது கடல் எல்லாரையும் மூழ்கடிக்கும், தீ எல்லாவற்றையும் எரிக்கும், சான்றோர் யாவர்க்கும் அமுதம் போன்ற இன்னுரைகளை நவில்வர்!)
No comments:
Post a Comment