Disable text selection

December 31, 2012

பூர்வபுண்ணியமும், சுகவாழ்வும், தவமும் – ஒரு ஜோதிட அலசல்

ஒருத்தன் ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் என்று ஐந்தாம் வீட்டையும், சுகஸ்தானம் என்று நான்காம் வீட்டையும் நிறுவியுள்ளனர் நமது ஜோதிட முன்னோர்கள். இவ்விரு வீடுகளும் சுபத்தன்மை உடையனவாக நாம் கருதி வருகின்றோம். இந்த பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் சுகஸ்தானம் ஒன்றுக்கொன்று எவ்வாறு அமைந்துள்ளன என்பது பற்றி ஒரு சிறு அலசலை இங்கு அடியேன் பண்ணி, தங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

சுகஸ்தானத்திற்கு இரண்டாம் இடம் பூர்வபுண்ணிய ஸ்தானம். சரி, அதற்கு  என்ன இப்போ? அப்படியே ஒரு அடி முன்னால் குதித்து ஐந்தாம் வீட்டில் போய் நின்று பின்னால் நான்காம் வீட்டை பாருங்கள், ஒரு விஷயம் தெரியும். பூர்வபுண்ணியத்திற்கு விரைய ஸ்தானமாக சுகஸ்தானம் அமைந்துள்ளது. ஒருத்தன் பூர்வத்தில் செய்த புண்ணியம் இந்த ஜன்மத்தில் அவனுக்கு சுகத்தை, வண்டி வாகனத்தை, எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல தாயாரை கொடுக்கிறது. இந்த ஜன்மத்தில் தாயாரை நன்றாக கவனித்துக்கொண்டவன் மறு பிறவியில் நல்ல நில புலன், சுகத்தோடும் மீண்டும் நல்ல தாயை அடைவான் என்றும் கொள்ளலாம் (மறுபிறவியில் நல்ல நான்காம் வீடு அமையும்).  இப்படி ஒரு பொருள் கொள்ளலாம்.

எனக்கு அது முக்கியம் இல்லை. பின் என்னடா சொல்ல வருகிறாய், சொல்லித்தொலை என்கிறீர்களா? சொல்கிறேன்.

எந்த அளவுக்கு ஒருத்தன் சுகத்தோடு வாழ்கிறானோ அந்த அளவுக்கு அவன் சேர்த்து வைத்த புண்ணியம் தேய்கிறது. அல்லவா? இவன் பண்ணின எந்த பாவத்துக்கு ஒரு அளவு உண்டு. அதற்கான தண்டனை முடிந்ததும் சுத்தனாகி விடுகிறான் அல்லவா? அது போல புன்னியத்துக்கும் அளவு இருக்கத்தானே வேண்டும்? நீ பண்ணின புண்ணியத்தால் சுகவாழ்வு கிடைக்கிறது. ஒரு நாள் நல்வினைப்பயன் தீர்ந்திடுமே? பண்ணின புண்ணியத்துக்கு இதுவா பலன்?

சுகவாழ்வை குறைத்துக்கொண்டால் அது தவமே. முற்றிலும் குறைக்க வேண்டும் என்பதல்ல. அந்நிலை வருவதற்கு சிறிது சிறிதாக பழகலாமே? வைத்தால் குடிமி அடித்தால் மொட்டை என்று இல்லாமல், அளவுக்கு மீறி சுகவாசியாய் இல்லாமல் இருக்கலாமே? அபரிக்ரஹம் என்று சொல்வார்கள் அஷ்டாங்க யோகத்தின் முதல் யோகமான யமத்தில்.

செய்த புண்ணியம் பலன் தந்தே தீரும். நீயாக சுகம் வேண்டாம் என்று குறைத்துக்கொண்டால் சரி, இவனுக்கு லௌகீகத்தில் தராமல் சித்த சுத்தியை தரும் – நுண்ணறிவு ஐந்தாம் வீட்டின் இலாகா. நான்காம் வீட்டின் பலனாக தராமல் தனது வீட்டின் பலனாக தரலாம். இல்லையா, எந்த வீட்டிற்கு ஐந்தாம் வீடு விரைய ஸ்தானமோ அந்த ஆறாம் வீட்டின் கெடுதலை குறைத்து வைக்கலாம். எந்த வீட்டிற்கு ஐந்தாம் வீடு ஆறாம் வீடோ அந்த பன்னிரண்டாம் வீட்டின் தீமைகளை குறைக்கலாம். எப்படி ஆயினும் வெறும் சுகத்தில் புரள்வதை விட இம்மையில்/மறுமையில் நலம் பயக்கும் வண்ணம் அந்த வீட்டை பயன் படுத்திக்கொள்வது அறிவுடைய செயலாக படுகிறது. அதுவே, தவத்தின் முதல் படி என நினைக்கிறேன். துறவியாக வேண்டாம். சிறிது சிறிதாக பழகலாம். ஒரேயடியாக பத்தாம் மாடிக்கு தாவினால் முடியுமா? எலும்பு முறியும். ஒரேயடியாக துறவினை மேற்கொண்டால் முடியுமா? வாசனைகளால் மகத்தான பாபத்தில் விழக்கூடிய அபாயம் உண்டு. சிறிது சிறிதாக பழகலாமே...... J

அடுத்த கட்டுரையில் வேறு ஒரு அலசல்...... ஒரு ஜோதிட மாணவனாக, சிற்றறிவுடன்......