Disable text selection

Showing posts with label சுண்டல் பதிவுகள். Show all posts
Showing posts with label சுண்டல் பதிவுகள். Show all posts

October 23, 2012

திருமணமும் தீயும் - பெண்ணின் கடமை, வேத மதம்

ஒருத்தனை அவன் இந்த உடலை நீத்த பின் மண்ணில் இட்டு புதைக்கிறார்கள். இன்னொருத்தனை எரிக்கிறார்கள். கேட்டால் கலியாணம் பண்ணி  வாழாதவனை புதைக்கிறோம் விவாஹம் ஆகி வாழ்ந்தவனை எரிக்கிறோம் என்பார்கள். இதன் அர்த்தம் என்ன? பாமரத்தனமாக தெரிந்தாலும். இதற்கு ஆதாரம் வேத மதம் தான்.  அவர்களுக்கு தெரிவதில்லை. சாரத்தை விட்டு விட்டு சம்பிரதாயத்தை மட்டும் பிடித்து கொண்டுள்ளார்கள். கொஞ்சம் பார்ப்போம்.

பிரம்மச்சாரிக்கு அக்னி கார்யம் இல்லை. க்ருஹஸ்தனுக்கு உண்டு. வானப்ரஸ்தனுக்கு உண்டு. சன்யாசிக்கு இல்லை. ஏனெனில் அவன் தான் சன்யாசம் வாங்கும் போது அக்னியை தீர்த்தத்திலே விட்டு விடுகிறானே. நேரே பிரம்மச்சர்யத்தில் இருந்து சன்யாசம் என்றால் அந்த ஸ்பெஷல் கேசுக்கு அதுவும் இல்லை.

விவாக காலத்திலே தானே வளர்த்த அந்த பவித்ரமான அக்னியை ரக்ஷிக்க வேண்டும். அதற்கு வீட்டிலேயே நெல்லை கைகுத்தல் அரிசியாக்கி அந்த உமியை வேத முறைப்படி இட்டு அணையாமல் ரக்ஷிக்க வேண்டும். இந்த கடமை பத்னிக்கு. அதனால் தான் அவளை வீட்டிலேயே வைத்து. பெண்களுக்கு வேத கர்மாக்களில் பங்கில்லை என யார் சொன்னது? வேண்டுமென்றே தவறாக சொன்னது. பத்னி இல்லாமல் யாரும் யாகமோ அக்னி ஹோத்ரமோ பண்ண இயலாது.  இப்போது இவளும் வேலைக்கு போகிறேன் என்று பறக்கிறாள். யார் அக்னியை ரக்ஷிப்பது? யோசிப்போமா?

சன்யாசம் ஏற்காமல் ஒருத்தன் ஜன்மா முடிந்தால், அவன் பண்ணுகிற கடைசி ஆகுதியாக அவனுடைய தேகத்தை அந்த அக்னியில் தான் எரிக்க வேண்டும். எந்த அக்னியை விவாகம் முதல் ஆயுஸ் பர்யந்தம் அவன் ரக்ஷித்தானோ அந்த அக்னியே அவன் தேகத்தை எரித்து தேவர்களிடம் க்ஷேமமாக அவனை சேர்ப்பிக்கும். சிதையில் வைத்த பின் அந்த அக்னியை கொண்டு தான் அவன் பிரேதத்துக்கு - மிருத சரீரத்துக்கு - எரியூட்ட வேண்டும். அதர்வண வேதத்தில் இதற்கான வழிமுறைகள் விரிவாக உண்டு. கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரி அல்லது அக்னியை விட்ட சன்யாசி உடல் விட்ட போது எந்த அக்னியால் அவனை எரிப்பது? அதனால் தான் அவர்களை மண்ணில் புதைப்பது.

அக்னி கார்யம் இல்லாத பிற மதஸ்தர்களும் சரீரத்தினை புதைக்கிறார்கள் என்பது நாம் கவனிக்க வேண்டும். ஆக, உடலை எரிப்பது என்பது வேத பரமான ஒன்று. இதனை நினைவில் கொண்டு நாம் செயல் பட வேண்டும்.

ஸ்ரீ மகா பெரியவா பாதங்களே துணை

October 15, 2012

Character counts!

எத்துணைதான் அன்புசெய்து நட்டாலும் கீழ்மக்கள்
கிட்டுபொருள் தாம்கொண்டு கைவிடுவர் - தொல்லுலகில்
அட்டபாலும் அம்பாகும் வேர்பெய்து வளர்த்திடினும்
எட்டிமரம் காய்க்காது மா!

(Bhuvaneshwar D)


பொருள்:

எத்துணை தான் நாம் அன்பு செய்து நட்பு பாராட்டி இருந்தாலும், கீழ்மக்கள் நம்மிடம் கிடைக்கும் பொருளை சுருட்டிக்கொண்டு, சமயம் நேர்ந்த போழ்து நமக்கு உதவாமல் கைவிடுவர். தொன்மையான இந்த உலகில், சுண்டக்காய்ச்சிய பாலும் இனிய பாகும் (அம்பாகும் = அம + பாகும் = இனிய பாகும்) எட்டி மரத்துக்கு ஊற்றி வளர்த்தாலும் அம்மரம் இனிய மாங்கனியை தராது (கசப்பும் விடமும் உள்ள எட்டிக்காயை தான் தரும்)

October 3, 2012

கப்பலே கவிழ்ந்தாலும்.....

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே - என்று ஒரு பழமொழி உண்டு. பாட்டிகள் கூட பிள்ளைகள் கன்னத்தில் கை வைத்திருந்தால் "ஏண்டா கப்பல் கவிழ்ந்தாற்போல கன்னத்தில் கை வைத்து இருக்கிறாய்?" என்பார்கள். ஆனால் இதன் உண்மையான பொருள்? முகத்தில் கன்னத்தில் கைவைப்பதை தடுக்க ஏற்பட்டதல்ல.

கன்னம் என்பது கடப்பாறையை போன்ற ஒரு சாதனம். கன்னக்கோல் என்பர். திருடுவதற்கு, சுவற்றில் துளையிடவும், பூட்டுகளை உடைக்கவும் கதவுகளை தகர்க்கவும் பயன் படும்.

அந்த காலங்களில் பெறும் வணிகர்கள் தங்கள் பொருட்களை கப்பலின் ஏற்றி பிற நாடுகளுக்கு அனுப்பி, பொருள் ஈட்டி வருவர். அந்த கப்பல்கள் போய் வரும். இவர்கள் வீடுகளில் இருப்பர். செட்டி நாட்டில் இது போல பெரிய வணிகர்கள் உண்டு. பட்டினத்தாரும் அப்படி இருந்து துறவு பூண்டு போனவர் தானே.

அந்த கப்பல்களில் ஏதாவது விதி வசத்தால் கவிழ்ந்தால் தலைமுறைக்கும் ஆக வேண்டிய பொருள் நஷ்டமாகும். பல கப்பல் உடையவருக்கே அப்படி எனில் ஒரு கப்பல் மட்டுமே உடைய வாணிகனுக்கு எப்படி இருக்கும்?

அப்படி கப்பலே கவிழ்ந்து போனாலும், தவறியும் கன்னக்கோலை கையில் எடுத்து திருட்டு தொழிலில் இறங்கி விடாதே என்னும் பொருளில் தான், கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே என்று சொல்லி இருக்க வேண்டும்.

October 2, 2012

Charity begins @ home :)

வீட்டில் உள்ளவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்காமல், அவர்களுடைய நியாயமான அபிலாஷைகளை, எதிர்பார்ப்புகளைக்கூட நிறைவேற்றாமல், ஊருக்குள் என்ன நல்ல பெயர் எடுத்தும், எத்தனை பிரபலமாகியும், ஊருக்கு உபதேசம் பண்ணியும் தம்படி பிரயோஜனம் இல்லை. ஊருக்கு உண்மையாகவே சமூக சேவை செய்தால் கூட வீட்டில் உள்ள உற்றவர்களின் வயிற்றெரிச்சலுக்கும் அதிருப்திக்கும் ஆளானால், சேவையால் கிட்டும் நற்பலனை விட இவர்களுக்கு செய்யும் பாபமே அதிகமாக மிஞ்சும். தன்னை முன்னிலைப்படுத்தி வினையாற்றும் அற்பர்களுக்கு குடும்பம் ஏன்? அவர்களுக்கு குடும்பமும் ஒத்து வராது, துறவும் கிடைக்காது. அதை தான் ஆங்கித்தில் அழகாக நறுக்கு தெறித்ததுபோல Charity begins at home, என்று சொல்லி வைத்தான்!

October 1, 2012

Helpless in love!

"கையில் ஊமன் கண்ணிற்காக்கும் வெண்ணை உணங்கல் போல"  - இரு கைகளும் அற்ற ஒரு ஊமை. அவனிடம், ஒரு பாறை  மீது வெண்ணைக்கட்டியை வைத்து "இதனை காத்து வா" என ஒருவர் ஒப்படைத்து செல்கிறார்.

வெயில் ஏறுகிறது, பாறை சூடாகி, அந்த வெண்ணை உருகத்துவங்குகிறது. அருகில் யாரும் இல்லை. ஊமையாதலால் யாரையும் உதவிக்கு அழைக்கவும் இயலாமல், வெண்ணையை காப்பாற்ற கைகளும் இல்லாத அந்த கையற்ற ஊமை தவிப்பதை போல, அடியே தோழி நானும் காதல் எனும் நோயினால் அல்லற்படுகிறேன்.   என் உள்ளம் கவர்ந்த அவரிடம் சொல்லவும் இயலவில்லை, இந்த பாழாய்ப்போன வெட்கம்  தடுக்கிறதே! அவரும் ஒரு அசடு போல, தானாக புரியவில்லை. நான் என்னடி செய்வேன்?
++++++++++
சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் ஒரு ஆண் மகன் தன் தோழனிடம் தன் காதலின் கையறு நிலையை விவரிக்கும் வரிகள் தான் "கையில் ஊமன் கண்ணிற்காக்கும் வெண்ணை உணங்கல் போல" . இது ஒரு பெண் சொல்லுவது போல இருந்தால் பொருத்தமாக இருக்கும் என தோன்றியதால் நான் இதனை பெண்பாலில் எழுதினேன்.

August 23, 2012

வாசுகியும் வள்ளுவரும்

வள்ளுவர் எழுதியது திருக்குறள் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் திருக்குறள் மட்டும் தான் எழுதினார் என்று அனைவரும் எண்ணிக்கொண்டு இருக்கிறோம். அதாவது ஒன்றே முக்கால் அடி கொண்ட குறள் வெண்பாவை தவிர அவர் வேறு எதையும் எழுதினாரா என நாம் அறியோம் அல்லவா?

உண்டு. ஒன்றே ஒன்று. அப்பாடல் ஒருவருக்காக அர்ப்பணமாக வடிக்கப்பட்டது. யார் அந்த அதிர்ஷ்டக்காரர்? ஆதரித்த வள்ளலா? அரசரா? அவர் குருவா? இல்லை. அதிர்ஷ்டக்காரர் அல்ல, அதிர்ஷ்டக்காரி என்று தான் சொல்ல வேண்டும். ஆம். அவர் ஒரு பெண். வள்ளுவரின் மனைவி. ஸ்ரீமதி. வாசுகி அம்மையார்.

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதாய் என் தூங்கும் என்கண் இரவு?

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார். "அடியேனுக்கு இனியவளே, அன்புடையவளே, எனது  சொல்லை என்றும் மதித்து நடந்த என் பாவையே (கண்மணியே), களைத்து வந்த எனது பாதங்களை பிடித்து விட்டு தூங்கச்செய்து பின் உறங்கி, நான் எழு முன் எழுந்து என்னை எழுப்பும் இளமை உடையவளே, அப்படி உன்னால் தூங்க வைக்கப்பட்டு உன் அன்பில் உறங்கிய என் கண்கள், இனி நீ இன்றி எவ்வாறு உறங்கும்?"என கதறுகிறார் வள்ளுவர்.

அதில் பாருங்கள், நான் எவ்வாறு உறங்குவேன்? என்று கூறவில்லை. என் கண் எவ்வாறு உறங்கும்? என்கிறார். அதற்கு முன் "பாவையே" என்கிறார். அதாவது பாவை இல்லாத கண் பயனற்றது. இனி நான் உறங்க நினைத்தாலும் அந்த கண்ணானது பாவையை பிரிந்த ஆற்றாமையால் இனி உறங்காது என்கிறார்.
 
“நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”

என்று உண்மையின் அடி ஆழத்தினை கண்டு எழுதிய அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி கையறு நிலையில் பாட்டெழுதி விட்டார். (நேற்று இருந்தான் இன்று இல்லை என்று ஆனான் என்னும் இயல்பினை உடையது நிலையற்ற தன்மையை உடைய இவ்வுலகு என்பது இக்குறளின் பொருள்).....

அதற்கு முற்றிலும் தகுதியானவர் அந்த அம்மையார்.

"வாசுகி, பழையது சுடுகிறது, விசிறி விடம்மா" என்றார் வள்ளுவர், தன் நண்பர் முன்; பழையது சுடுமா என யோசிக்காமல், அன்புக்கணவரின் வார்த்தைக்கு இணங்கி விசிறி விட்டாராம் வாசுகி அம்மையார். பார்த்த நண்பர், தன் மனைவியுடனான தனது பூசலுக்கு விடை கிட்டி விட்டது என விடை பெற்று சென்றாராம். இது பெண்ணடித்தனமல்ல. அன்பு. தூய அன்பு, துணையை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளல், அர்ப்பணிப்பு. அதில் தனி சுகம் உண்டு.

வள்ளுவர் பெருமான் சாப்பிடும் போது, ஒரு சிறு கலத்தில் தூய நீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏனென அம்மையாருக்கு விளங்கவே இல்லையாம். ஆனாலும் கேட்கவில்லையாம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார், தான் இறக்கும் தருவாயில், கணவரின் (வள்ளுவரின்) மடியில் கிடந்தபடி அவரிடம்  கேட்டாராம். அன்னப்ப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி எடுத்து கலத்தில் உள்ள தெள்ளிய நீரில் அலம்பி, மீண்டும் அன்னத்தில் கலந்து  உண்ணவே அவை இரண்டும் என்றாராம். "மான் போன்ற மருண்ட கண்ணினையுடைய என் அன்புடையவளே, நீ அன்னமிடுகையில் அன்னம் சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு இந்நாள் வரை தெரியவில்லை" என்று உருகி விளக்கினாராம்.

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட, பிரிவினை வேண்டி நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர்(???) நினைத்துப்பார்ப்பார்களா? 

பழைய பதிவுகளில் நான் சொன்ன எனது கருத்துக்களை தான் நான் இங்கும் சொல்லி முடிக்கிறேன். துணைக்காக கஷ்டப்பட தயாராக இல்லாதவர்கள் கலியாணத்துக்கு லாயக்கில்லாதவர்கள். அனுசரிப்பதும் விட்டுக்கொடுப்பதும் கெட்டவார்த்தைகள் அல்ல.

பெண்ணியம், உரிமைபேச்சுக்கள் பேச தெருக்கோடி மேடை தான் சரியான இடம். வீடும் குடும்பமும் அல்ல.

இப்பாடலை படித்த பிறகு தான் வள்ளுவரின் மீது ஒரு தனி மரியாதை பிறந்தது.

பிரியங்களுடன்
புவனேஷ்