Disable text selection

December 31, 2013

பிராண நாதன் - பகுதி 2 :))

"டீ..... முத்தே...."
"என்னைக்கும் இல்லாத திருநாளா என்ன திடீர்னு முத்தேன்னு கொஞ்சல்?"
"உன்னண்டை நான் ஒன்னு கேப்பேன், டியா?"
"என்னவாம்"
"உன்னைப் பொண் பாக்க வந்தேனோல்லியோ...."
"ஆமாம், வந்தேள்"
"அப்போ, நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்ன்னு சொல்லியிருந்தேன்னா நீ என்ன பண்ணியிருப்பாய்?"
"என்னோடு அப்பா பார்த்த இன்னொரு மாப்பிள்ளையை கலியாணம் கழிச்சுருப்பேன்."
"அடிப்பாவி!"
"ஏன்?"
"உங்களுக்காக, உங்கள் மனம் மாற, மாறி என்னை ஏற்றுக்கொண்டு அருள் புரிய, நாற்பது சதுர் யுகமானாலும் காத்திருந்த்திருப்பேன் நாதா"ன்னு நீ சொல்லுவாய்ன்னு எதிர்பார்த்தேன்."    
"கல்பாத்தி மொளகா பஜ்ஜி நன்னாருக்குன்னு சொல்லி ஒரு டப்பாவிலே அதை பார்சல் பண்ணிகிண்டேளே, அதைப் பன்னாதேக்கி இருந்திருந்தால், நானும் யுக யுகமானாலும் உமக்காக காத்யாயினி விரதம் இருந்து காத்திருந்திருப்பேன்"  
"இது தெரிஞ்சும் ஏன் என்னை கெட்டிகிண்டாய்?"
"கல்பாத்தி பஜ்ஜி நன்னாருக்குன்னதும் சாப்பட்டதை பொறுப்பா பார்சல் பண்ணிக்கறான் புள்ளாண்டான், நாளைக்கு ஹோட்டல்லயும் இதே போல பார்சல் கெட்டிக்குவான், நம்ம பொண்ணுக்கு வேலை சுலபமாக்கும், நம்ம பொண் பாடரத்தே ஒத்தா பாடறானே, நல்ல ரஸிகனாக்கும்"ன்னு பாட்டி சொன்னா. அதனாலயாக்கும் உமக்கு கழுத்தை நீட்டினேன். போறுமா?"
"நேக்கு அப்போவே தெரியும். என்னை உள்ள படி புரிந்து கொள்ளும் சக்தி உன் பாட்டிக்கு மட்டும் தான் உண்டுன்னு. சரி, இன்னைக்கு என்ன? கீரை மொளகூட்டலும், பொரிச்ச சக்கையும், சேனை மசியலுமா? 
"ம்ம்ம்? மொளகுரசமும் சுட்ட பப்படமும்"

----
(புவனேஷ்வர்)

December 30, 2013

தட்டமங்கலத்தில் ஒரு சட்டை வேணும்!

"லக்ஷ்மி, இங்க வா!"
"இங்கேதானே இருக்கேன்? சொல்லுங்கோ."
"இனிமேல் என்னோடு (என்னோட) டீசட்டைல டெண்டுல்கருக்கு போடறாப்புல என்னோடு பேரை வச்சு தைக்கச் சொல்லு. அது டிசைனர் லேபிளா இருக்கட்டும்"
"ஏன் இந்த திடீர் தீர்மானம்?"
"இத பார். எத்தனை ரசிகர்கள் எனக்கு உலகமெல்லாம் இருந்தாலும், இணையத்திலே வல்லமை குழுவிலே ஆயிரம் பேர் என்னோடு இலக்கியப் படைப்புக்களை ரசித்தாலும், இங்கே தட்டமங்கலத்திலே நேரிலே பாக்கறவா எல்லாம் என்னை "லக்ஷ்மி புருஷன்"நு சொல்லறா. அது என்னோடு கௌரவத்துக்கு இழுக்கு. சொன்னதை செய்"
"ஓஹோ...."
"என்ன ஓஹோ? தையல் கூலிக்காக கணக்கு பாக்காதேட்டியா?" 
"இல்லை."
"அப்புறம் என்ன?"
"ஊர்க் காரா உம்ம பெயர்ப் பட்டை பார்த்துத்தான் உம்மை தெரிஞ்சுக்கணும்னா ஏதோ தப்பு நடந்துருக்கு......"
"எங்கேன்னு யோசிச்சியாக்கும்....."
"ம்ம்ம்"
"அத்தற யோசிககண்டா."
"ஏன்?"
"உன்னோடு தோப்பனார் உன்னை கெட்டிக்கச் சொல்லி என்னை கேட்டுண்டப்போ ஒத்துண்டேனே, அதாக்கும் தப்பாச்சு"
"ஹூம். அது ஒன்னைத்தான் சரியாச் சென்சேளு. அல்லாதெக்கி எல்லாம் தப்பாயிருக்கும்"
"சரி. சரி. விட்டுத்தள்ளு, இன்னைக்கு கீரை மொளகூட்டலோ?"
"அப்போ சட்டை? 
"உள்ளது போறும்"

பரிசு

"லக்ஷ்மி"
"ம்ம்ம்...."
"இந்தப் புத்தாண்டுக்கு என்ன பரிசு வேணும் என் அர்த்தாங்கிணிக்கு?"
"ஒ! கெட்டிகிண்டவளுக்கு பரிசு கொடுக்க புத்தாண்டு பிறக்கணுமோ?"
"ப்ச்ச்..... எல்லாம் உனக்கு எதாவது வாங்கிக் கொடுக்கணுமுன்னு ஒரு ஆசை தான். போன மாசம் கல்யாணமான அந்த எதுத்தாத்து குட்டிகளை பார்த்தாயா? அவன் தன் பெண்டாட்டிக்கு ஐபோன் வாங்கிக் குடுக்கறான். கடையிலே பார்த்தேன். உனக்கு என்ன வேணும்? ஐபேடா? கேளக்சியா? சொல்லு"
"தோணினது சந்தோஷம். நேக்கு புதுசா ஒரு அரிக்கரண்டி வாங்கி தரேளா?"
-----
(புவனேஷ்வர்)

எது கவர்ந்தது?

"அன்பே"
"ம்ம்ம்???" 
"பிரிய சகீ..."
"என்ன விஷயம்?"
"என்னை உன் பிராணநாதனாக வரிக்க காரணம் யாது?"
"என்ன இப்போ முப்பது வருஷம் கழிச்சு இந்த கேள்வி?"
"இல்லை, என்னுடைய சந்திரன் போன்ற முகமா, சிம்மநாதம் போன்ற குரலா, கவித்திறனா, தமிழ்ப் புலமையா அல்லது எனது செல்வ வளமான்னு, என்னுடைய பலபட்ட சிறப்புகளில் எது உன் நெஞ்சைக் கவர்ந்ததுன்னு தெரிஞ்சுக்க கேக்கறேன்...."
"நல்லது. இப்போ நான் இந்த வெத்தக்கொழம்பை முடிக்கணும்."
"பரவாயில்லை. அது கிடக்கட்டும். சொல்லு"
"அந்த லிஸ்ட் கொஞ்சம் நீளமாக்கும்......."
"தெரியும் தெரியும். உன் பதியின் பிரதாபங்கள் நிறைய. உனக்கு அன்னைக்கே தெரிஞ்சது பற்றி இறும்பூது அடைகிறேன், கண்ணே"
"பொண் பாக்க வந்த போது, நான் பாடறத்தே உணர்ச்சி வசப்பட்டு நீரும் சேர்ந்து தாளம் போட்டு ஒத்தா பாட ஆரம்பிச்சேளே...."
"சரி. வெத்தக்கொழம்பை பாரு" 
  ---
புவனேஷ்வர்    

December 27, 2013

கண்கள் புரிந்துவிட்ட பாவம் ....

கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க் 
காதலி தென்பட வில்லை; இது 
பண்புடை யோர்செயல் தாமோ? கொலை 
பாதகம் பெண் செய லாமோ?

பண்கள் இசைத்துனைப் போற்றிப்- பல 

சீர்மைகள் செய்திடு வேன்காண்; சிறு 
கண்ணுள் மணியெனக் காவாய்க் கலி 
தீர்த்தெனைக் கண்டருள் பெண்ணே!

முன்னைப் பிறப்பில் செய்த பாவம் உனை 
இன்னமும் யான்பெற வில்லை - அழும் 
பிள்ளையைத் தாய்விட லாமோ நறும் 
தெள்ளமுதே விட மாமோ?

நல்ல பருவமுள போதே ஒரு 
இல்லத்த றம்வளர்த்தல் வேண்டும் - சுடு 
கோடையில் நல்லுயிர் நல்கும் குளிர் 
ஓடை நிலாவொளி யேவா !    

கண்ணில் தெரிவதில்லை தோற்றம் எனில் 
தாய்கரு வைமறப் பாளோ - என 
தாவியி லேவளர் தேவீ! உனைப் 
பேணும் வரம்தரு வாயோ?     

  

(புவனேஷ்வர்)