Disable text selection

July 31, 2012

காலத்தில் தேயாத இசை......

இந்த தொகுப்பில்........ எனக்கு நெஞ்சில் நிலைத்த சில பல பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கிறேன்......
பக்திப்பாடல்கள் தனி ரகம்..... அவற்றிற்கு தனி தொகுப்பு..... இவை திரைப்பாடல்களுக்காக........

முதல் பாடல்.......

பேசுவது கிளியா.........
படம்: பணத்தோட்டம்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா


July 30, 2012

In God We trust

In as much as the timeless science of Astrology is true, one must bear in his mind that the planets themselves are as powerless as the persons that we are. By that I mean to say, they are but mere dispensers of what is allotted to a person - good and bad, at the appointed time.

Many a person goes to various temples to perform parihaaram - conciliatory rites or prayers - and those temples are usually associated with a planet.

Those help but only to the extent as to make the person stronger to bear the yoke. Nay, they do not absolve anyone of the Karma.

There is no point in blaming a planet for what it causes in your life - or apparently does so - those are but fruits of our own action.

There no point in blaming the postman that delivers a court notice to a robber for a crime he did! He may of course plead clemency and make a turn for the better. But that plea should be addressed to the Head of State, not the post man.

On the same lines of thought, the right Parihaaram is to make a conscious effort to redeem oneself from at least this moment, and to not consciously perform a negative act to add to the already heavy bag of the such and an earnest prayer to the Almighty, for forgiveness, and guidance.

An earnest prayer is never turned away, every sinner has his redemption ready, if only he would actively seek it.

I do not mean discard Astrology - it is credible; I mean, there is no point in cribbing about what has happened or is set to happen and blaming the planets for that when in fact they are but neutral postmen delivering the results of what we have made ourselves to deserve. Poor planets, leave them alone.

As the American would say, as would any true believer say, In God We Trust!

நம்பினோர் கெடுவதில்லை, நம்புவதைத்தவிர வேறு வழியும் இல்லை!

PS:

The so called evil planets are after all, not that bad, I surmise. They are the ones that make one realize the real truth and make him seek God. So are they bad? I don't think so. There at all is no such thing as a bad planet, if so.

July 29, 2012

தனுசு கவிதை - தூரப்போய்விடும் நிலவு!

வகுப்பறை மூலம் எனக்கு அறிமுகமான ஒரு நண்பர் மற்றும் ஆற்றல் மிக்க கவிஞர் திரு. தனுசு அவர்கள்.

அவரது கவிதையை இங்கு குறிஞ்சித்திணையில் ஞாயிறு மலராக வெளியிடுவதில் உவகை அடைகிறேன்.

இனி மேடை, நண்பர் தனுசு வசம்!  

_____

தூரப்போய்விடும் நிலவு!  

இன்று ஒரு கவிதை எழுத வேண்டும்

எதைப்பற்றி எழுதலாம்?

"வழக்கம்போல்
என்னைப்பற்றியே எழுதிவிடு"
நிலா சொன்னாள்!

குளத்து நீரின்
அசையும் அலையில்
தெரியும் உன் முகம்
என்னை முத்தம் இட அழைக்கும்.
நானும்
நித்தம் ஒரு முத்தம் தருவேன்-ஆனால்

நேற்று வந்தேன்
நீ
கானவில்லை
எங்கே சென்றாய்?

சென்ற மாதமும்
ஒருமுறை
நீ
வரவில்லை
எங்கே சென்றாய்?

வானுலக நாகம் போல்
ஊர்ந்துக்கொன்டே இருக்கும் நீ
மாதம் ஒரு முறை
தோலுரிக்க போய்விடுகிறாயா?

இந்திர லோக
சுந்தரிகளோடு
நீ தினம் தினம் நடத்தும்
அழகிப்போட்டியால்
அசந்து
ஓய்வெடுக்கப் போய்விடுகிறாயா?

பதில் சொன்னாள்

நானும் பெண்தானே
அதனால்
மாதம் ஒருமுறை..........
தூரப்போய்விடுவேன் உனை விட்டு.

-தனுசு

July 27, 2012

திருவுக்கும் திருவாகிய செல்வா!


இன்று வரலக்ஷ்மி விரதம்; நன்னாள்; இன்று ஸ்திரீகள் வரலக்ஷ்மி பூஜை எல்லாம் பண்ணுவார்கள்; தேவியை பிரார்த்தித்து மகிழ்வார்கள்;


நல்லது. பண்ணட்டும். நானோ பிரம்மசாரிப்பையன். நமக்கு அவர்கள் பாடு ஒன்றும் தெரியாது. இருந்தாலும் நானும் என் பங்குக்கு ஏதாவது பண்ணனும் என்று மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு. இந்த ஸ்த்ரீஜனங்கள் - {அம்மா, அக்கா, பாட்டி, அத்தைப்பாட்டி, மாமி, ஒன்று விட்ட மாமி + [அவர்கள் குழாம்]} எல்லாரும் நேராக ஏதேதோ ஸ்தோத்ரம் பாடுவார்கள். நமக்கு வருவதில்லை. அந்த வ்ரதமும் நமக்கில்லை காணும். சரி, நாம் என்ன பண்ணலாம்? என்ன இருந்தாலும் நம் பங்குக்கு எதையாவது பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டால் என்ன பண்ணுவது? இவர்கள் பண்ணுவதையே நாமும் பண்ணலாம். என்னடா என்கிறீர்களா? ஸ்திரீகள் பண்ணுகிற அத்தனை பூஜைகளும் தேவிக்கு ப்ரீதியை உண்டு பண்ணத்தானே? அதை நாமும் பண்ணி விடுவோம்!

நமக்கு நாள் முழுக்க உட்கார்ந்து பண்ண வேண்டாம் என இருக்கிறது. ஏதாவது குறுக்கு வழி இருக்கிறதா என பார்ப்போம் என்றால் இருக்கிறதே! 

என்ன அது?

அவளுக்கு ப்ரீதி உண்டு பண்ணுவது எது? எந்த பதிவ்ரதைக்கும் தனது பர்த்தாவின் புகழை பாடினால் இணையற்ற ப்ரீதி உண்டாகும் அல்லவா? அதை பண்ணுவோம்.

சரி பண்ணலாம். 

எந்த பதிவ்ரதைக்கும் தனது பர்த்தாவின் புகழை பாடினால் இணையற்ற ப்ரீதி உண்டாகும் - மானுஷ்ய பதிவ்ரதைகளுக்கே அப்படி என்றால் தனது பர்த்தாவின் புகழை பாடினால் பதிவ்ரதைகளுக்கேல்லாம் தலைவியான திருமகளான  ஸ்ரீதேவி நாச்சியாருக்கு எத்தனை ப்ரீதியாய் இருக்கும்? சாதாரணமாக அவளைத் துதித்தாலே குளிர்ந்து நோக்குவள். அவள் பதியை சரணடைந்து விட்டால்?

சொல்லுவதற்கெல்லாம் நல்லதாக தான் தெரிகிறது. ஆனால் அங்கே போனாலோ ஸ்ரீயை சரண் அடையாமல் என்னிடம் வருவோனை நான் அங்கீகரிப்பதில்லை என முரண்டு பிடிக்கிறார். என்ன பண்ணலாம்? அங்கே போக வேண்டுமெனில் இங்கே சரண் அடைய வேண்டும். இவளிடம் சரணடைய அவன் புகழை பாடினால்?

ஆஹா, நன்றாக இருக்கிறதே...... பண்ணி விடுவோம்.... என்ன குறைந்து விடப்போகிறது? 

ஒரு அற்புதமான ஸ்லோகம்: கவி நயத்துக்காக மட்டுமே கூட இந்த ஸ்லோகத்தை சொல்லி சொல்லி மகிழலாம்.

இந்த ஸ்லோகம் மகா பாகவதரான ஸ்ரீ கூரத்தாழ்வான் அவர்கள், காஞ்சி தேவப்பெருமாளை (படம் காண்க) நோக்கி இயற்றிய ஸ்ரீ வரதராஜஸ்தவம் எனும் அதி அற்புதமான நூலில் இரண்டாவது ஸ்லோகம். 

ஸ்ரீநிதிம் நிதிமபாரமர்த்தினா மர்த்திதார்த்த பரிதான தீக்ஷிதம்|

சர்வபூதசுஹ்ருதம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே|| 

பதம் பிரித்துப்போட்டால்:
ஸ்ரீநிதிம் நிதிமபாரம் அர்த்தினாம் அர்த்தித-அர்த்த பரிதான தீக்ஷிதம்|

சர்வபூத-சுஹ்ருதம் தயாநிதிம் தேவராஜம் அதிராஜம் ஆஸ்ரயே||

ஸ்ரீநிதிம், தேவராஜன், அதிராஜன்: "திருவுக்கும் திருவாகிய செல்வா, தெய்வத்துக்கரசே" என கலியனார் (7 - 7 - 1) அருளியபடி, "வைத்தமாநிதியாம் மதுசூதனனை" என ஆழ்வாரும் (6 - 7 - 11) அருளிச்செய்த வண்ணம், திருவாகிய தாயாருக்கும் செல்வமாகி விளங்கும் தலைவன்; "தத் யதா ஹிரண்யநிதிம் அக்ஷேத்ரஞ்யா:" என உபநிஷத்தும் சொல்வதை நினைவில் கொள்ள வேண்டும்;

நிதிமபாரமர்த்தினா மர்த்திதார்த்த பரிதான தீக்ஷிதம்: யாசிப்பவர்களுக்கு இல்லையென இயம்பாது வாரி வழங்கும் வள்ளன்மையை தனது சங்கல்பமாக கொண்ட வள்ளல் - இறையருள் நாடி வருபவர்க்கு இறையருளும் திருவருளும் ஒன்று கூடி வழங்கும் வள்ளல்;

சர்வபூதசுஹ்ருதம் தயாநிதிம்: எல்லா உயிர்களுக்கும் நட்பு பூண்டவரும், கருணையே வடிவானவருமான எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன்; சுவேதாச்வதர உபநிஷத் இதையே "சர்வஸ்ய சரணம் சுஹ்ருதம்" என முழங்கிப்போற்றும், எம்பெருமானை; "சுஹ்ருதம் சர்வ பூதானாம் ஞாத்வா மாம் ஷாந்திம்ருச்சதி" என கிருஷ்ணபரமாத்மாவும் கீதையில் இதையே சொன்னார். 

ஆஸ்ரயே: சரண் எனப்புகுகிறேன் 

"திருவுக்கே திருவான ஸ்ரீமன் நாராயணனை, அருளை யாசித்து வரும் அடியார்க்கு இல்லை எனச் சொல்லாது அருள் பொழியும் வள்ளலை, எல்லா உயிர்கட்கும் நட்புறவு பூண்ட கருணைச்செல்வனான திருமாலை, தேவர்களுக்கும் யாவருக்கும் அரசனான கேசவனை நான் சரணாகதி பண்ணுகிறேன்" என்ற அர்த்தத்தில் அந்த மகாபெரியவர் அருளிச்செய்து இருக்கிறார்.

இந்த ஸ்லோகத்தையும் அன்னையின் திருமுன் சொல்லி, அவளோடு அவள் மணாளனையும் சேர்த்து வழிபட்டால், அந்த தேவி ஆனவள், தன் மணாளர் புகழால் மகிழ்ந்து செல்வம் மட்டுமல்லாது, ஞானத்தையும் முடிந்த முடிபான பரம ஆனந்தமான சத்தியத்தையும் நமக்கு காட்டி அருளுவாள் என்பதில் சந்தேகத்துக்கும் இடமுண்டோ?

இந்தப்பதிவினை படிக்கும் எல்லோருக்கும் ஸ்ரீ பூமாதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ ஒப்பிலியப்பர் அனுக்கிரகம் பூரணமாக கிட்டட்டும் என பிரார்த்தித்து அமைகிறேன்.

வாஸ்தவத்தில் தேவி வேறு மூலப்பரம்பொருள் வேறு அல்ல. நமக்காக ஒரு லீலை அவ்வளவே. "ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி" என்கிற வாக்கியம் சத்தியம். ஒன்றே பலவாய் ஒரு வேஷம் கட்டிக்கொண்டு நமக்காக வருகிறது. வாஸ்தவத்தில் ஆத்ம ஸ்வரூபம் குணம் குறி கடந்த நிர்க்குணப் பிரம்மமே. அதை grasp பண்ணுகிற யோக்யதை நமக்கு வருகிற வரை சகுனப் பிரம்மமாக தானே உபாசிக்க வேண்டும்....... அதற்காக தான் கருணா நிமித்தம் லீலைகள் :) 
 

இன்று வரலக்ஷ்மி விரதம்; நன்னாள்; இன்று ஸ்திரீகள் வரலக்ஷ்மி பூஜை எல்லாம் பண்ணுவார்கள்; தேவியை பிரார்த்தித்து மகிழ்வார்கள்;

நல்லது. பண்ணட்டும்.நானோ பிரம்மசாரிப்பையன். நமக்கு அவர்கள் பாடு ஒன்றும் தெரியாது. இருந்தாலும் நானும் ஏன் பங்குக்கு ஏதாவது பண்ணனும் என்று மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு. இந்த ஸ்த்ரீஜனங்கள் - அம்மா, அக்கா, பாட்டி, அத்தைப்பாட்டி, மாமி, ஒன்று விட்ட மாமி அவர்கள் குழாம் எல்லாரும் நேராக ஏதேதோ ஸ்தோத்ரம் பாடுவார்கள். நமக்கு வருவதில்லை. அந்த வ்ரதமும் நமக்கில்லை காணும். சரி, நாம் என்ன பண்ணலாம்? என்ன இருந்தாலும் நம் பங்குக்கு எதையாவது பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டால் என்ன பண்ணுவது? இவர்கள் பண்ணுவதையே நாமும் பண்ணலாம். என்னடா என்கிறீர்களா? ஸ்திரீகள் பண்ணுகிற அத்தனை பூஜைகளும் தேவிக்கு ப்ரீதியை உண்டு பண்ணத்தானே? அதை நாமும் பண்ணி விடுவோம்!

அவளுக்கு ப்ரீதி உண்டு பண்ணுவது எது? எந்த பதிவ்ரதைக்கும் தனது பர்தாவின் புகழை பாடினால் ப்ரீதி உண்டாகும் அல்லவா? அதை பண்ணுவோம். சரி பண்ணலாம். நமக்கு நாள் முழுக்க உட்கார்ந்து பண்ண வேண்டாம் என இருக்கிறது. ஏதாவது குறுக்கு வழி இருக்கிறதா என பார்ப்போம் என்றால் இருக்கிறதே!

என்ன அது?

ஒரு அற்புதமான ஸ்லோகம்: கவி நயத்துக்காக மட்டுமே கூட இந்த ஸ்லோகத்தை சொல்லி சொல்லி மகிழலாம்.

இந்த ஸ்லோகம் மகா பாகவதரான ஸ்ரீ கூரத்தாழ்வான் அவர்கள், காஞ்சி தேவப்பெருமாளை நோக்கி இயற்றிய ஸ்ரீ வரதராஜஸ்தவம் எனும் அதி அற்புதமான நூலில் இரண்டாவது ஸ்லோகம்.

ஸ்ரீ நிதிம் நிதிமபாரமர்த்தினா மர்த்திதார்த்த பரிதான தீக்ஷிதம்|

சர்வபூதசுஹ்ருதம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே||

ஸ்ரீ நிதிம், தேவராஜன், அதிராஜன் : "திருவுக்கும் திருவாகிய செல்வா, தெய்வதுக்கரசே" என ஆழ்வார் எழாம்பத்தில் அருளிச்செய்த வண்ணம், திருவாகிய தாயாருக்கும் செல்வமாகி விளங்கும் தலைவன்;

நிதிமபாரமர்த்தினா மர்த்திதார்த்த பரிதான தீக்ஷிதம்: யாசிப்பவர்களுக்கு இல்லையென இயம்பாது வாரி வழங்கும் வள்ளன்மையை தனது சங்கல்பமாக கொண்ட வள்ளல் - இறையருள் நாடி வருபவர்க்கு இறையருளும் திருவருளும் ஒன்று கூடி வழங்கும் வள்ளல்;

சர்வபூதசுஹ்ருதம் தயாநிதிம்: எல்லா உயிர்களுக்கும் நட்பு பூண்டவரும், கருணையே வடிவானவருமான எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன்;

ஆஸ்ரயே: சரண் எனப்புகுகிறேன் 

"திருவுக்கே திருவான ஸ்ரீமன் நாராயணனை, அருளை யாசித்து வரும் அடியார்க்கு இல்லை எனச் சொல்லாது அருள் பொழியும் வள்ளலை, எல்லா உயிர்கட்கும் நட்புறவு பூண்ட கருணை ச்செல்வனான திருமாலை, தேவர்களுக்கும் யாவருக்கும் அரசனான கேசவனை நான் சரணாகதி பண்ணுகிறேன்" என்ற அர்த்தத்தில் அந்த மகாபெரியவர் அருளிச்செய்து இருக்கிறார்.

இந்த ஸ்லோகத்தையும் அன்னையின் திருமுன் சொல்லி, அவளோடு அவள் மணாளனையும் சேர்த்து வழிபட்டால், அந்த தேவி ஆனவள், தன மணாளர் புகழால் மகிழ்ந்து செல்வம் மட்டுமல்லாது, ஞானத்தையும் முடிந்த முடிபான பரம ஆனந்தமான சத்தியத்தையும் நமக்கு காட்டி அருளுவாள் என்பதில் சந்தேகத்துக்கும் இடமுண்டோ?

இந்தப்பதிவினை படிக்கும் எல்லோருக்கும் ஸ்ரீ பூமாதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ ஒப்பிலியப்பர் அனுக்கிரகம் பூரணமாக கிட்டட்டும் என பிரார்த்தித்து அமைகிறேன்.

 

 

 

July 26, 2012

பக்தி:(வரலக்ஷ்மி வ்ரதம்-சிறப்புப்பதிவு)

ஒருத்தருக்கு ரொம்ப பக்தி ஒரு மூர்த்தத்தின் மேல். அவருக்கு அந்த ஸ்வரூபம் தவிர வேறு எந்த ரூபமும் என்னவோ பிடிக்கவே மாட்டேன் என்கிறது. அவரிடம் போய் "பகவான் நாம ரூப பேதங்களை கடந்தவனாக்கும், நீரென்ன இப்படி ரூப பேதங்களோடு பக்தி பண்ணுகிறீர்?" என்று கேட்கக்கூடாது. வாஸ்தவம் தான். பகவான் அரூபி. அவன் குணங்களைக் கடந்தவன். அப்படிப்பார்த்தால் அவன் என சொல்லுவதும் பிசகு. அவன் என சொன்னால் நான் என சொல்ல இன்னொரு ஆள் வேண்டுமே. இரண்டாவதாக ஒன்றும் இல்லாத வஸ்து. தான் இருப்பதை கூட நினைக்காத நிலை. மௌனம் அதே சமயம் மௌனம் இல்லாத நிலை. தான் மௌனம் அனுஷ்டிக்கிறோம் என நினைக்க நான் என்ற அஹங்காரம் வேண்டுமே. அது இல்லாத போழ்து எங்கிருந்து மௌனமும் மௌனம் இன்மையும்? 

சரி. இதெல்லாம் இப்போது வேண்டாம். பேசிப்புரிகிற விஷயம் இல்லை. 

அது புரிந்து அனுபவத்தில் பிடிபடுகிற வரையில் ஏதாவது ஒரு மூர்த்தத்தை நன்கு கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதே நமக்கு மனசுக்கு ரொம்பவும் சிலாக்கியமாக இருக்கிறது. அந்த தெய்வத்துக்கு என ஒரு புராணம் இருக்கிறது, அந்த லீலா விநோதங்களை நாம் ரசிக்கிறோம், ஈடுபட்டு லயித்து இருக்கையில் ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. அப்படி ஒருத்தர் பக்தி பண்ணுகிறார் என்றால், அந்த மூர்த்தமே - தேவதையே அவருக்கு அனுக்கிரகம் பண்ணி, முடிந்த முடிபான சத்தியம் எதுவோ அதை நோக்கி அழைத்து கொண்டு போகும். அதற்குத்தான் குணம் குறி கடந்த ஆத்மஸ்வரூபமான பிரம்மம் சங்கல்பித்துக்கொண்டு பல லீலைகளை நம்மை போலவே பிறந்து நடத்திக்காட்டுகிறது. "இன்னின்ன யோனியுமாய் பிறந்தாய்" என ஆழ்வார் பாடுகிறார். 

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்ப்பவதி பாரத:|

அப்யுத்தானம் அதர்மஸ்ய தத் ஆத்மானம் ஸ்ருஜாம்யஹம்||

என்று கீதையில் கிருஷ்ணர் சொல்லுகிறார். அவர் சொன்னால் நாம் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும். ஜகத்குரு பட்டத்தினை முதன் முதலில் கட்டிக்கொண்டவர் அவர் தான். "க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்" என்று தானே சொல்லுகிறோம்? அப்போ அவர் சொன்னதை கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம் இல்லையா? 

எந்த சிவன் பிரளயத்தில் கோர பயங்கர காலாந்த ருத்திரனாக இருக்கிறாரோ அவரே பரம சாத்வியாக அஹிம்சை கைக்கொண்ட சந்யாசியாக சங்கரராக வந்தார். ஞான உபதேசம் பண்ணி வைத்தார். அதையே கிருஷ்ணனும் பண்ணினான். யுத்த பூமியில் பண்ணினான்.  

எல்லாம் ஒருவரே. ஆரம்பத்தில் பேதங்கள் எல்லாம் இருந்தாலும் போகப்போக அவை எல்லாம் அடிபட்டு போய், எல்லாம் ஒன்று தான், ஒரே வஸ்து தான் இப்படி பலவாக தெரிகிறது என அனுபவத்தில் மனத்திலேயே தோன்றி புரிந்து விடும்.

அது அந்த உபாசனா மூர்த்தியின் அனுக்கிரகதினால் தான் நடக்கும். நாம் சொல்லக்கூடாது. 

நாம் பண்ண கூடியது என்ன? 

ஒருத்தர் வாஸ்தவமான பக்தி பண்ணுகிறார் எனில் அவரை அவர் வழியிலேயே இருக்க ஊக்கம் தர வேண்டும். எந்த சித்தாந்தத்தில் அவர் இருக்கிறாரோ அதிலேயே அவருக்கு ஒரு பிடிப்பு ஏற்படும் படி நாம் உதவி பண்ணினோமானால் போதும். அந்த ஸ்ரத்தையை வளர்த்து விட்டால், அதற்க்கு முடிந்ததை பண்ணினால் போதும்.மற்றதை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. 

சித்தாந்த சண்டைகள் பண்ணுவதோ தர்க்கம் பண்ணுவதோ குழப்பத்தில் தான் கொண்டு போய் விடும். பக்தியின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களிடம் போய் சித்தாந்த தர்க்கம் பண்ணுவது அபாயமான வேலை. 

நாளை வரலக்ஷ்மி வ்ரதம்:

பிரதி வருஷமும் ஆடி/ஆவணி மாசம் பூர்நிமைக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை (வளர்பிறை வெள்ளிக்கிழமை) இந்த பவித்தரமான வ்ரதம் கடைப்பிடிக்கப்பெற்று வருகின்றது. இந்த வ்ரததினை பற்றி ஆழமான தகவல்கள் வேண்டுவோர் இங்கே சொடுக்கவும். எனது மதிப்பிற்கு உரிய சகோதரி ஸ்ரீமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள் தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

அவருக்கு எனது பணிவான வணக்கங்களை உரித்தாக்குவதோடு இப்பதிவினை நிறைவு செய்கிறேன். அனைவரும் சகல சௌபாக்யங்களும் மங்களங்களும் நிறைந்து வையத்துள் வாழ்வாங்கு வாழ பரமேஸ்வரனை வேண்டுகிறேன். 

எல்லாம் சரி. மேலே படத்தில் ஏன் ராதையும் கண்ணனும் இருக்கிற மாதிரி ஒரு படத்தை போட்டு இருக்கிறேன்?

அது வேறு ஒன்றும் இல்லை. ராதைக்கு கண்ணன் தான் எல்லாமே. 

ஒரு கவலையும் இல்லாமல் கண்ணன் தோள் மீது அவர் சாய்ந்து இருப்பதை பார்த்தீர்களா?

அவளுக்கு சாஸ்திரம் பற்றி, உபநிஷத் பற்றி எல்லாம் கவலையே இல்லை. கண்ணன் மேல் ஆசையும் பக்தியும் தான் அவளுக்கு எல்லாமே. 

அவளுடைய அன்புக்கு தான் முழுதும் அடிமைப்பட்டு போனான் கண்ணன். 

ஸ்மர கரல கண்டனம், மம சிரசி மண்டனம், தேஹி பத பல்லவ முதாரம் (ஹே ராதே, உன் தளிர் போன்ற பாதங்களை எனது தலை மேல் வைத்து நீ அருள் புரிவாய்") என அவனே எழுதினான். பரம யோகீஸ்வரர்களுக்கும் அகப்படாத பகவான் அவளுக்கு கட்டுப்பட்டு போனான். அவள் பக்திக்கு கட்டுப்பட்டு போனான். 
அது தான் பக்தி. அதற்குத்தான் இந்தப்படம். 

-----

பிரியங்களுடன்

புவனேஷ்  
 

 

 

 

 

 

 

 

July 17, 2012

முறையீடு

சேல்விழியின் சத்தியமும் பேதலித்த புத்திகளும்

ஒருநி லையும்  கண்டதிலை யே;

வேலையற்ற வன்பேச்சும் ஆண்மையற்ற வன்பாட்டும்

ஆழ மெனக் கொள்வதிலை யே;

வணங்குவார் வார்த்தைக்கு வழிவிட்ட தெய்வமென்

வாழ்வில் விளை யாடியது மேன்?

மூலப்பொரு ளானவுமை பாகனொரு நாதமொடு

கோலனட மாடுஞ் சிவ னே;

சோலைகுயில் கூவுமிடம் மான்களிடை நாய்நரியை

ஊளை யிட வைத்தபர னே;

 

 

 

உயிர்க்காதல்

மனித வாழ்வில் ஒருத்தர் ரொம்பவும் உணர்ச்சிபூர்வமாக உயிரை வருடும் அளவுக்கு உணரும் ஒரு விஷயம் உண்டென்றால், அது உயிருக்கு உயிராக நேசிக்கிற துணையின் மீது கொண்ட காதல். 

தாய்ப்பாசம் இல்லையா என கேட்டால் அது வேறு ரகம். எந்த தாயும் தன் பிள்ளை உயிரோடு இருக்கிற பொழுது கஷ்டப்படுவாளே ஒழிய பிள்ளை போனதும் கூட வரமாட்டாள். இது தாயன்பை குறைத்து மதிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. குழந்தைப்பருவத்தில் இன்றியமையாததாக இருக்கும் தாய்ப்பாசம் வளர்ந்த பின்பும் உண்டு தான்,  ஆனால் அது ஒரு நன்றி மற்றும் கடமை கலந்த அன்பாக மாறி விடும். அதையும் தாண்டிய, உயிருக்கு உறவான தன்னோடு ஒன்றிப்போன துணையின் அன்பு தான் உண்மையில் தேவை ஒரு மனிதனுக்கு/மனுஷிக்கு. இது யதார்த்தம். இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்ட வீடுகளில் மாமி-மருமகள், நாத்தி-அண்ணி பிரச்சினைகள் இருப்பதில்லை.

சரி. விஷயத்துக்கு வருவோம். ஒருத்தரிடத்திலே மனத்தை செலுத்தி விட்ட பின், அவரையே கதியாக நினைத்து மனசை அர்ப்பணம் பண்ணி சரீரத்தையும் அவருக்கே அர்ப்பணம் பண்ணி விடுவது தான் இன்றைய சூழலில் ஆத்மலாபத்துக்கு உறுதுணையாக இருக்கும். அன்றைய நாட்களில் பெண்களுக்கு மட்டும் பாதிவ்ரத்யம் என கற்பு நெறியை வைத்து இருந்தனர். ஏனெனின் ஆணுக்கு அவன் சரணாகதி பண்ண குரு இருந்தார், சின்ன வயசிலேயே அவரிடம் இவன் போய் விட்டான் (சன்யாச குரு வேறு - அவர் அப்புறம் வருவார்). இன்று நாமாக குருவை தேடி போனால் அது அனர்த்தத்தில் முடியும் அபாயம் உள்ளது. தானாக சன்யாச குரு வரும் போது வரட்டும். ஆனால் மனசை அர்ப்பணம் பண்ண வேண்டுமே. நமக்கென்று தனி ஆசை தனி ப்ளான் இல்லாமல் இருக்கணுமே, அதற்கு ஒருத்தர் வேண்டுமே - யார் கிடைப்பார்கள்? தூய துணை தேடிக்கொள்ளுங்கள் என்பதே விடை. கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் அப்படி சமர்ப்பணம் பண்ணி விட்டால் மோக்ஷம் சமீபத்தில் தான். அத்தகைய உண்மையான அர்ப்பணம் - மனம், வாக்கு உடலால் - அஃதே கற்பென்னும் திண்மை. கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை.

இதெல்லாம் சாத்தியமா? அப்படி பிராணனையே ஒருத்தரிடம் நாட்டி வைக்க இயலுமா? ஏன் இயலாது? புருஷன் பிராணன் போனவுடன் தானாகவே பட்டென்று தனது உயிரை விட்ட மகா பவித்ரமான பதிவ்ரதைகள் இருந்து இருக்கிறார்கள், இருக்கிறார்கள். ராவணன் பத்நீ மண்டோதரி முதல், கௌரவர்களின் பத்தினிகள், ஸ்ரீ ஜெயதேவரின் பத்நீ பத்மாவதி அம்மையார்....... சிலப்பதிகாரத்தில் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி...... தனது உயிர் நிலையை பதியிடம் நாட்டி விட்டதால் அவர் போன பின் முயற்சி இல்லாமலேயே இவர்கள் பிராணன் போயிருக்கிறது என்பது விசேஷம். 

டேய்..... இதெல்லாம் புராணம்....... ரெகார்ட் இருக்கிறதா? என கேட்பீர்கள். அதனால் தான் தென்னாட்டு உதாரணத்தையே காட்டுகிறேன். 

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் (புறநானூறு பாடல் 71 இவர் இயற்றியதே) இறைவனடி சேர்ந்தான். அவன் மனைவி பெருங்கோப்பெண்டு அவனோடு உடன்கட்டை ஏறினாள். அவளை சான்றோர் தடுத்தனர். தடுத்த சான்றோரை அவள் நன்றாக திட்டி விட்டு தீயில் குதித்தாள். அவள் திட்டிய திட்டை புறநானூற்று பாடலாக (புறநானூறு பாடல் 246) நமது இலக்கியம் சேமித்து வைத்து இருக்கிறது. 

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். பலரும் (பெண்ணியவாதிகள்) கூறுவது போல கணவன் இறந்ததும் சுற்றத்தார் அந்த பெண்ணை தீயில் இட்டனர் என கூறுவது பொய் என இப்பாடல் நிரூபிக்கிறது. சுற்றத்தார் தடுத்தும் கேளாமல் கணவன் வழி சென்றால் அம்மாதரசி. இதை கவனிக்க வேண்டும். கணவன் மீது கொண்ட அதீத பாசத்தால், அவன் இன்றி க்ஷணமும் ஜீவனை வைத்துக்கொண்டிருக்க இயலாது என்ற அன்பின் உயர் நிலையில், யார் தடுத்தும் கேளாமல், கட்டாயமின்றி தானே உயிர்விட்டது தான் உடன்கட்டை.  அவளுடைய சேலை எரியாமல் தாலி எரியாமல் இருக்கும். இன்றைக்கும் பல குடும்பங்களில் அப்படி மிஞ்சிய அந்த பதிவிரதையின் சேலை மற்றும் கருகமணி தாலியை பெட்டியில் வைத்து வழிபடுவதை காணலாம். 

பெண்கள் தான் என்று இல்லை. துணை மேல் அளவிட முடியாத காதல் வைத்த ஆண்களும், மனைவி இறந்த பின்  இதை பண்ண தலைப்பட்டு இருக்கிறார்கள், சங்கப்பாடலில் சான்றுகளும் உள்ளன. (அடடே!!!). அவை பின்னொரு பதிவில். 

இக்காலத்திலும் பாட்டி இறந்துபட்ட சில நாட்களில் தாத்தாவும் போய் விடுவதை கண்கூடாக பார்க்கிறோம் அல்லவா? எனது வீட்டிலும் அப்படித்தான் நிகழ்ந்தது. அறுபதாண்டு காலம் கூட வாழ்க்கையை பங்கு போட்டு இழைந்து வாழ்ந்த துணை இறந்ததும் அடுத்த சில நாட்கள் ஏதும் சாப்பிடாமல் தூங்காமல் தண்ணீர் குடிக்காமல் தானும் கூட போய் விட்டார் தாத்தா. 

பிடிக்கலைனா டைவர்ஸ் பண்ணிடு என்று கூவும் இன்றைய "முன்னேறிய" வர்க்கத்துக்கு என்று இதெல்லாம் புரியும்!

சரி பாடலும் விளக்கமும் கீழே.

பல்சான் றீரே! பல்சான் றீரே!


செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்

பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!

அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட

காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது

அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்

வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட

வேளை வெந்தை வல்சி ஆகப்

பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்

உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்

நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்

பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற

வள்இதழ் அவிழ்ந்த தாமரை

நள்இரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே!

உரை:

பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! ”உன் மணாளன் மாண்ட பின் அவன் ஈமத்தீஇடை வீழ்ந்து நீ இறந்து படுவாயாக” என்று கூறாது, நான் என் கணவரோடு ஈமத்தீயில் மூழ்கி இறப்பதைத் தவிர்க என்று கூறும் தீய மதி கொண்ட பெரியோர்களே! அணிலினது முதுகின்  மேலுள்ளது போன்ற வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்தால் தோன்றும் விதைகளைப் போன்ற, வெண்மை பொருந்திய, மணமுள்ள நெய் கலவாத, சோற்றுப்பானையின் அடிப்பகுதியில் நீருடன் கலந்த சோற்றைப் பிழிந்தெடுத்து, அத்துடன் வெள்ளை நிறமுள்ள எள்ளை அரைத்து ஆக்கிய துவைலோடு, புளியிட்டுச் வேக வைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு, சிறு பரல்  கற்களால் ஆன படுக்கையில் பாயில்லாமல் படுத்து வருந்தும் இழிந்த வாழ்வினை உடைய கைம்பெண்களில் நான் ஒருத்தி அல்லள். பெரிய பாழ் நிலக்காடாகிய சுடுகாட்டில் கரிய மரக்கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்கு ஏறுதற்கு அரியதாக இருக்கலாம்; எனக்கோ, பெரிய தோள்களையுடைய என் கணவர் இறந்ததால், அந்த ஈமத் தீயிலுள்ள பிணப்படுக்கையும் அரும்புகளே இல்லாமல், மலர்ந்த தாமரைகளை மட்டுமே உடைய நீர் செறிந்த பெரிய குளமும் ஒரே தன்மை கொண்டது ஆகும்..


உடன்கட்டை ஏறுவது சரி என்றோ அது இன்னமும் வேண்டும் என்றோ நான் கூற வரவில்லை. கட்டாயப்படுத்தி செய்தால் அது மகா பாபமே. சந்தேஹமே இல்லை. ஆனால் ஒரு பெண் தன் பதி மீது கொண்ட அளவிட முடியாத காதலினால் பதி இறந்த பின்னர் உயிர் தரிக்க இயலாது எல்லாரும் தடுத்தும் கேளாமல் தானும் பிராணத்த்யாகம் பண்ணினாள் என்றால், அத்தகைய உன்னதமான காதலை வணங்குவதே முறை. யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்பதற்கு இப்பாடல் சான்று!

July 16, 2012

காந்தர்வமணம்

காந்தர்வ மணம் என்பது நமது பண்பாட்டில் அனுமதிக்கப்பட்ட எண்வகை மணங்களுள் ஒன்றாகும். திருமணத்துக்கு உரிய எல்லா கட்டுப்பாடுகளும் அதற்கும் உண்டு. ஐயமில்லை. காரியம் முடிந்ததும் கழட்டி விட கணையாழி மாட்டும் முறை அது என பகுத்து பார்த்து பொருள் அறிந்து சிலர் சொல்லுவர். அஃது அவ்வாறல்ல. இது வடநாட்டு சரக்கும் அன்று.

அதற்கு சான்றாக இதோ ஒரு பாடல் - குறுந்தொகை -25.

யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால்
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.

-கபிலர்

சட்டெனப்பார்த்தால் ஒன்றும் விளங்காது பாடலில்; சற்று உன்னிப்பாகப்பார்ப்போம்;

தலைவனோடு காதல் கொண்ட தலைவி பெற்றோரும் ஊராரும் அறியாது தலைவனை இரவில் கண்டு மகிழ்கிறாள்....... இதற்கு அவள் தோழி உதவுவாள்;

தலைவனோடு இன்புற்றிருந்து விட்டு, யாருமறியாமல் வீடு வந்த தலைவி, தோழியிடம் உரைப்பதாக அமைந்த பாடல்; "அந்தக்கள்வன் என்னை மயக்கிக்கூடிய அத்தினம் யான் அவனை மணந்தேன்...... ஆனால் அந்த நேரம் யாரும் அங்கு இல்லை....... நேற்றிரவு எனை அவன் துய்த்த பின் இன்று எனை அவன் அறியேன் என உரைப்பானாயின் யான் என் செய்வேன்? ஆற்றின் நீரில் வரும் மீனுக்காகக்காத்திருக்கும் தினையின் தாள் (இலை) அன்ன பசிய கால்களை உடைய நாரை மட்டுமே அன்றோ கண்டது எங்கள் சங்கமத்தை!"

இது தலைவி புலம்புவது போலத்தோன்றினாலும், தலைவி அவன் பால் கொண்ட காதலும், நம்பிக்கையும், களவில் கூடியதையே திருமணமாக எண்ணும்கற்பின் மாண்பும் தெள்ளென விளங்கும்! (இந்தக்காலத்தில் காதலனை திருட்டுப்பயலே என செல்லமாக அழைக்கும் தொனி இவள் கள்வன் எனத்தலைவனை விளிப்பதில் தெரிகிறது அன்றோ!)

குறிஞ்சிக்கோர் கபிலன் காண்! பொருந்துமிப்புகழுரை!

நெஞ்சுக்கறிவுறுத்தல்

ஒண்ணுதல் நிலையாது  நன்னெஞ்சே கன்னிமுலை

இன்றிருக்கும் நாளைவெந்து நீறாகும் - யாண்டும்நீ

வென்றைந்தை  நாளும கிழ்ந்திருக்கக் கன்னியுமை

தண்ணடியே மண்ணிற் றுணை;   

உரை:


ஒளிபொருந்திய நெற்றி கொண்ட பொது மகளிரை நாடாதிரு நன்னெஞ்சே, கன்னியரின் உடல் இன்று இருக்கும் இறந்தபின்னர் சாம்பலாகும், ஐந்து புலன்களையும் வென்று நீ நாளும் மகிழ்ந்திரு, அதற்கு (புலனடக்கத்திற்கு) உனக்கு உண்மையான துணை நித்திய கன்னிகையான அம்பிகையின் குளிர்ச்சி பொருந்திய திருப்பாதங்களே ஆவன. 

ஒண்ணுதல் என்னும் சொல் அழகிய நெற்றியை உடைய பெண் எனும் பொதுவான பொருளை தரினும், இந்த இடத்தில் பொது மகளிரையே குறிக்கும். காரணம் இல்லறத்தில் உள்ள (துறவறம் பூணாத) மக்கள் பெண்ணையே நாடாது இருக்க இயலாது. அவரவர் துணைவியை ஆதரித்து வாழ்வது நன்றேயாகும். கற்பு நெறி தவறி காமமே கண்ணாக பரத்தையரை நாடும் தகாத செயலையே இச்செய்யுள் சாடுகிறது.

July 13, 2012

இன்சொல்

இனியன கூறல் நம் பண்பாட்டுக்கு இசைந்த ஒன்று.

வள்ளுவர் கூறுவார் 

"இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று"

எத்துணை உண்மையான வார்த்தைகள்! மனத்தில் அன்பு இருந்தால் வார்த்தையில் கனிவு இருக்கும். வார்த்தையில் கனிவு இருந்தால் இனிய பேச்சு அமையும். அப்படி அமைந்தவனுக்கு எதிரிகள் தான் யார்? யாரும் இருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் அவனை ஒன்றும் பண்ண முடியாது. எல்லாரிடமும் குணவான் என பெயர் எடுத்த ஒரு பண்பாளனை ஓரிரு எதிரிகள் என்ன புரட்டி விட முடியும்? 

சொற்கள் நம் வசம் உள்ள கருவிகள். எந்த நேரத்தில் எப்படி உபயோகிக்க வேண்டும் என தீர்மானிப்பது ஒருத்தனின் PR skills பொறுத்த விஷயம்.

எந்நேரமும் இனிமையாக பேசுவதும் கூடாது - சில இடங்களில் கோபம் போல காட்டினால் தான் கார்யம் நடக்கும். சிவ பெருமான் முருகனை கோபித்தது போல நடித்தார் - "மைந்தனை வெகுள்வான் போல" என்று என சொல்லும் இலக்கியம். மயிலே மயிலே என்றால் இறகு போடாது!

அதே சமயம் எந்நேரமும் சிடு சிடு என்று இருந்தால் அவன் கோபத்துக்கு மதிப்பு இல்லாமல் போய் விடும். அவன் கோபமும் இயல்பான ஒன்றாக ஆகி, யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். சாது கோபித்தால் ஏதோ விஷயம் இருக்கு போலயே என என்னும் மக்கள் முன் கோபி கோபித்தால், "அதுக்கு அது தான் வேலை, புத்தி அப்படி தான் அதுக்கு விட்டு தள்ளு" என்று சொல்லுவார்கள் அல்லவா?

நீதி சாஸ்திரத்தில் ஒப்பற்ற நிபுணர் அசுர குரு சுக்ராச்சார்யார். அவர் ஒரு சந்தர்ப்பத்தில், கோபம் கொண்ட தன் மகள் (சிறு குழந்தை) தேவயானிக்கு பின்வருமாறு உபதேசிக்கிறார்:

"எவன் ஒருவன் பாம்பு சட்டையை உரிப்பது போல கோபத்தை உரித்து அகற்றுகிறானோ, அனவே தீரன். கோபத்தை அடக்கியாளுபவனே தீரன். கோபத்தை அடக்கி ஆளுபவனே கார்ய சித்தி அடைகிறான். கோபம் உடையவனை பெற்றோரும், கட்டிய மனையாளும், குழந்தைகளும், பணியாட்களும், நண்பர்களும் உறவினர்களும் வெறுத்து விலகுவர்" என்று சொல்லுகிறார்.

ரிக், யஜுர், சாம உபாகர்மாக்களில் ஒரு மந்தரப் பிரயோகம் வரும்:  

कामो अकार्षीन्नमो नमः  कामो कार्षीत् कामः करोति नाहं करोमि   कामःकर्त्ता नाहं कर्त्ता कामः कारयिता नाहं कारयिता एष ते काम कामाय स्वाहा|    
मन्युरकार्षीन्नमो नमः  मन्युरकार्षीन्मन्युः  करोति नाहं करोमि मन्युःकर्त्ता नाहं कर्त्ता मन्युः कारयिता नाहं कारयिता एष ते मन्यो मन्यवे स्वाहा||

காமோ அகார்ஷீன்னமோ நம: காமோ கார்ஷீத் காம: கரோதி நாஹம் கரோமி காம: கர்த்தா நாஹம் கர்த்தா காம: காரயிதா நாஹம் காரயிதா ஏஷ தே காம காமாய ஸ்வாஹா|

மன்யுரகார்ஷீன்னமோ நம: மன்யுரகார்ஷீன்மன்யு: கரோதி நாஹம் கரோமி மன்யு: கர்த்தா நாஹம் கர்த்தா மன்யு: காரயிதா நாஹம் காரயிதா ஏஷ தே மன்யோ மன்யவே ஸ்வாஹா||

சுருக்கமாக சொல்வதென்றால் இதன் பொருள் "காமம் தான் பாபம் பண்ணியது, கோபம் தான் பாபம் பண்ணியது" என்று வரும்.

இதையே இன்னும் பலருக்கும் தெரிந்த பழமொழியாக சொல்லுவதென்றால் "கோபம் பாபம் சண்டாளம்" என்போம்.

 

 

 

 

 

 

 

 

 

 

July 12, 2012

பிரசாதம்

மகான்கள் மற்றும் பெரியவர்கள் சந்நிதிக்கு போகிறோம். அவர் தீர்த்தம் கொடுக்கிறார். இல்லை ஒரு புஷ்பத்தையோ மாலையையோ கொடுக்கிறார். அல்லது ஏதோ ஒரு பண்டத்தை தருகிறார். (அவர் எதை வேண்டுமானாலும் கொடுப்பார், அவருக்கு தான் தெரியும் என்ன என்று); நாமும் வாங்கிக்கொள்கிறோம். இதில் விசேஷம் என்ன?

ஒருத்தர் எப்பவும் சுவாமியை நினைத்துக்கொண்டும் அவருடைய நாமத்தை ஜபம் பண்ணிக்கொண்டும் இருப்பாரேயானால் அவருக்கு மந்த்ர சித்தி ஏற்படுகிறது. மனித உடலில் ஓடுவன 72000 நாடிகள். அத்துணை நாடிகளிலும் சித்தி அடைந்த மகானுக்கு அந்த பகவத் நாமாவே அதிரும் பொழுது, அவர் தொட்ட எந்த வஸ்துவும் அந்த சித்தியை/அதிர்வலைகளை ஏற்றுக்கொள்ளும். காந்தத்தால் தேய்க்கப்பட்ட/ஈர்க்கப்பட்டு பிடிக்கப்பட்ட இரும்பும் காந்த சக்தி பெறுகிறது இல்லையா. அது போல. அதை நமக்கு அந்த மகான் தரும் போது அதை நாமும் பெற்றுக்கொள்கிறோம். நேரடியாக நம்மைத் தொடும் பொழுது அந்த intensityயை தாங்கிக்கொள்ளும் சக்தி நமக்கு சாதாரணமாக கிடையாது. அதனால் தான் பிரசாதமாக துளித்துளியாக குழந்தைக்கு பால் கொடுப்பது போல தருகிறார்கள். இவற்றை பெற்று பெற்றே, நமது சொந்த முயற்சியான அனுஷ்டானங்களால், நாம் கொஞ்சம் கொஞ்சமாக பக்வியாக ஆகிறோம். உண்மையாகவே பக்வியான ஒருத்தருக்கு வேறு விதமான தீட்சைகள் கிடைக்கும். அதற்கு தயார் பண்ணுவது போல தான் மகான்களின் பிரசாதம். 

இதனால் தான் அதீத சக்தி உடைய மூர்த்தங்கள் உடைய கோயில் தீர்த்தம் கூட நமக்கு ஆத்ம லாபத்தையும் தோஷ நிவாரணத்தையும் அளிக்கிறது.

பரிகாரம் என்று சில பல கோயில்களுக்கு போவதும் இதனால் தான். மகான்களிடம் போவதும் இதனால் தான். இது அனுபவ உண்மை.

நம் தேசத்தில் என்று இல்லை. எல்லா தேசத்திலும் மகான்கள் இருந்து இதை பண்ணி இருக்கிறார்கள். இயேசு நாதர் குருடனுக்கு பார்வை கொடுத்ததும் முடவருக்கு நடக்க அருள் செய்ததும் வியப்பில்லை. அத்தனையையும் செய்த அவர் தனக்கென்று எதையும் பண்ணிக்கொள்ளவில்லை.  தமது பாவங்களை அடுத்தவர் மேல் பழி போட நினைக்கும் மக்கள் இடையே,  உலகத்தோரின் பாபங்களை தானே ஏற்று பிராணத்யாகம் பண்ணின மகான் இல்லையா அவர்?  அவர் நினைத்து இருந்தால் தன்னை காத்துக்கொண்டு இருக்க முடியும். ஆனாலும் தனக்கென எதையும் செய்யாமல் பிறர்க்கென மட்டும் தனது அனுக்ரக சக்தியை உபயோகப் படுத்தினார். தன்னை கொல்ல வந்தவர்களையும் மன்னிக்குமாறு பிரார்த்தனை பண்ணினார். மகான்களின் லக்ஷணம் இது.

டிஸ்கி: நான் மகான்கள் என்று சொன்னது உண்மையான மகான்களை. அவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. புகழுக்கும் இகழுக்கும் அசைந்து கொடுப்பதில்லை. தம்மை யாரும் வணங்க வேண்டும் என ஆசைப்படுவதும் இல்லை.

எந்த தேசத்தில் உதித்த மகான்களும் தங்களை விளம்பரம் பண்ணிக்கொள்ளவில்லை. குருடனுக்கு பார்வை அளித்த வள்ளல் ஏசுநாதர் அவனிடம் என்ன சொன்னார்? ஊருக்குள் போய் தண்டோரா போடாதே என்றார். நமது தேசத்தில் வந்த மகான்களும் அப்படித்தான்.

சரி.... விளம்பரம் பண்ணவே மாட்டார்களா? அப்புறம் எப்படி மக்கள் அவர்களிடம் சென்று அருள் பெறுவது? ரொம்ப ரொம்ப சிம்பிள். அவர்களுக்கு இறையருள் அப்படி கிட்ட வேண்டும் என விதி இருந்தால் தான் மகான்களை சந்திக்கவோ, சந்தித்தாலும் அவரை அடையாளம் காணவோ முடியும். பல பேர் மகான்களின் அருகிலேயே இருந்தும் அவரை பற்றி உணராமல் போவார்கள், அது இதனால் தான். அர்ஜுனன் கண்ணனிடம் இதை தானே சொன்னான். இயேசு நாதரும் சொன்னார் – A prophet is never honoured in his own nation!

-----

With Love,

Bhuvaneshwar D

 

அன்புக்களவுண்டோ?

படித்ததில் பிடித்தது: 
மருமகள்: அத்தை, உங்கள் அன்புக்கு அளவே இல்லை!

அத்தை: அடியே, அளந்து கொடுத்தால் அதற்குப்பெயர் அன்பில்லை!


++++++++


July 6, 2012

My first date with snow!

பனிப்பொழிவு என்றால் எல்லாருக்குமே ஒரு உற்சாகம் தானே. அதுவும் நல்ல சூடான நமது சீதோஷ்ண நிலையில் பனியை ஃப்ரிட்ஜில் தான் பார்த்து இருப்போம். கொடுத்து வைத்த சிலர் ஊட்டியில் பார்த்து இருப்பார்கள். அல்லது வட நாட்டில் மலைப்பாங்கான இமாலயப்ப்ரதேசங்களில் பார்த்து இருப்பார்கள். நமக்கு அவ்வளவெல்லாம் கொடுத்து வைக்கவில்லை.

வளர்ந்தது பெங்களூரில், முதுகலைக்காக படித்த இடமோ வெய்யில் நகரமான வேலூர்.

பணிக்காக சில வருஷங்கள் வட அமெரிக்காவுக்கு (கனடாவுக்கு) போன போது தான் முதல் முதலில் பனிமழையை தரிசிக்கும் ஸ்பரிசிக்கும் அனுபவிக்கும் பாக்கியம் கிட்டியது.

நான் அங்கு போன காலம் இலையுதிர் காலம். இன்னும் மூன்று மாத காலம் கழித்து தான் பனி விழும் என்று சொல்லி விட்டார்கள். நான் ஏதோ கனடா பனிக்காடாக இருக்கும் என ஏகத்துக்கு கற்பனை எல்லாம் பண்ணி வைத்துக்கொண்டு போய் ஒரு சுபயோக சுபதினத்தில் எனது வலது காலை முன் வைத்து எனது காலடியை டொரோண்டோ நகரில் வைத்தேன். அங்கிருந்து சில மணி நேரப்பயணம் எனது ஊருக்கு.

போய் பார்த்தால் முப்பது டிகிரி வெய்யில் வைத்து வெளுத்து வாங்கியது. பெங்களூரில் வளர்ந்த சொகுசு பையனான எனக்கு அதுவே ஜாஸ்தியாக பட, எனது பனிக்கனவு அப்போதைக்கு புஸ்ஸானது.

நான்கு மாதங்கள் கழித்து குளிரத்தொடங்கியது. அங்கே எல்லாம் ஏதோ இயற்கை அன்னை ஒரு பொத்தானை தட்டி விட்டது போல காலங்கள் மாறுகின்றன. ஒரு வாரத்துக்குள் நன்றாக குளிர ஆரம்பித்தது.

ஒரு நாள் காலையில் எழுந்து வெளியே வந்து பார்க்கிறேன், தரை முழுதும் வெண்மையாக உறைபனி. (See photo - Left side) கையில் எடுத்து பார்த்தேன், நம்ம ஐஸ் போல தான் இருந்தது. கொஞ்ச நேரம் அதை வைத்து விளையாடி விட்டு அலுவலகம் போனேனா, அங்கும் இதை பற்றி மிக்க மகிழ்ச்சியுடன் பிரஸ்தாபித்தேன். ஆனால் அது பனி இல்லை, frost என்று கூறிஅவர்கள் எனது உற்சாக பலூனில் ஒரு ஓட்டையை போட்டார்கள். சரி ஏதோ ஒன்று என்று சமாதானப்படுத்தி கொண்டு சில வாரங்கள் காத்து இருந்தேன்.

இந்த இடைவெளியில் கடைகண்ணிக்கு சென்று பனிக்கு வேண்டிய ஆயத்தங்களை பண்ணி வைத்தேன். (Purchasing Snow jacket, snow shoes, gloves, mittens, wools etc.)

சில வாரங்களுக்கு பின், ஒரு நாள் காலையில் சூரியக்காதலன் பூமிக்காதலிக்கு ஊதி விட்ட பஞ்சுமுத்தம் போல, அவளுக்காக கொட்டிய அன்னத்தூவியைப்போல வெண் பனி மழை! புது பொம்மை கைக்கு கிடைக்கப்பெற்ற சிறு குழந்தையைப்போல உணர்ந்தேன் அப்போது! விழும் பனியை பிடிப்பதும் உருட்டி விளையாடி பார்ப்பதும் வாயில் போட்டு பார்ப்பதும் (!!). என்னைப்பார்த்து பக்கத்தில் இருந்த வெள்ளைக்காரர்களும் சேர்ந்து கொள்ள, எல்லாரும் விளையாடி மகிழ்ந்தோம். பின் பேருந்தைப்பிடிக்காமல் நடந்தே (பனியில் நடக்க ஆசை) அலுவலகம் போய் சேர்ந்தேன் (See photo).


[caption id="attachment_612" align="alignright" width="225"] First snow![/caption]

அதன் பின்னரும் சில நாட்கள் பனி விழுவதும் பின் அடுத்த சில நாட்கள் வெய்யில் அடிப்பதுவுமாக இருந்தது. பூமி நன்கு உறைந்த பின் தான் பனி விழத்தொடங்கியது. விழுந்த பனி நிலைத்து அப்படியே நிற்க பூமி உறைய வேண்டுமாம். முதல் சில நாட்களில் பூமி உறைய, பின் விழுந்த பனி இடுப்பளவுக்கு வந்து நின்றது.

அதில் விளையாடி மகிழ்ந்தது, வட அமெரிக்காவின் முப்பெரும் ஏரிகளுக்கு பனிக்காலத்தில் போய் வந்தது, ஊளையிடும் பனிப்புயலில் தன்னந்தனியாக மாட்டிக்கொண்டு உயிரோடு திரும்புவோமா என முழித்த திகில் அனுபவங்கள் பற்றி இன்னொரு பதிவில் சொல்லுகிறேன், சரியா?
 

 

வால்பையன்!

என் வீட்டிற்கு பக்கத்தில் எல்லாரும் குடும்பஸ்தர்கள். நான் மட்டும் தான் ஒண்டிக்கட்டை. நல்ல பையன் என்ற பேர் வேறா, சுத்தி முத்தி இருக்கற அத்தனை அறுந்த வால்களுக்கும் மாலை வேளைகளில் என் வீட்டு முற்றத்தில் தான் டேரா.

அவர்கள் அப்பாக்காரர்கள் எல்லாம் கடமையே கண்ணாக துபாயிலும் மஸ்கட்டிலும் இருப்பதால் கண்டிக்க ஆளின்றி இதுகள் கொஞ்சம் வால்தனம் ஜாஸ்தியாகவே பண்ணும். (அதில் அவர்கள் அம்மாக்களுக்கு ஏகப்பெருமை வேறு - "அப்படிதான் தம்பி, அடங்கவே மாட்டான், பயப்படவே மாட்டான்" என வாயெல்லாம் பல்லாக அதே சமயம் வெள்ளந்தியாக பையன் புராணம் படிப்பார்கள்).

"நான் இந்தா கோயிலுக்கு போய்ட்டு வர்றேன், அது வரைக்கும் இவனை பாத்துகோங்க தம்பி" என்று சொல்லி விட்டு அதனை பேரும் குட்டீஸ் பட்டாளத்தை என் மடியில் கட்டி விட்டு கிளம்பி விடுவார்கள். சரி அவர்கள் அம்மாக்களுக்கு ஒரு ஓய்வாக இருக்கட்டுமே என்று, அவர்கள் கோயிலுக்கு போய், சாமி கும்பிட்டு, அவர்களுக்குள் கதை பேசி முடித்து விட்டு வரும் வரையில் நானும் இந்த வாண்டுகளை மேய்ப்பதுண்டு.

அதனாலேயே அக்கம் பக்கத்தில் அவர்கள் வீடுகளில் விளைந்த தேங்காய், மாங்காய், சக்கப்பழம் (பலாப்பழம்) இன்ன பிற வகையறாக்கள் நமக்கும் கொடுத்து அந்த அக்காக்கள் அவ்வப்போது அன்புடன் அருள் புரிவார்கள். "எப்ப வேணாலும் வந்து பறிச்சுகிடலாம் தம்பி" என்று சொல்லுவார்கள். நாள் கிழமை ஆனால் பலகாரம் பட்சணமும் அவ்வப்போது கிட்டும்.

இப்படித்தான் நேற்று ஒரு பயலை விட்டு விட்டு போனார்கள். ஒன்றாம் கிளாஸ் படிக்கிறான். "குட்டிப்பையா, இருடா அண்ணன் உனக்கு திங்க எதையாவது கொண்டு வர்றேன்" என்று சொல்லி விட்டு, அவனை முற்றத்தில் விட்டு விட்டு நானும் உள்ளே போனேன்.

அவனுக்கு தீனியோடு வந்து பார்க்கையில் பயல் என் வண்டி சக்கரத்தின் மேல் "ஒன்றுக்கு" அடித்து கொண்டு நின்றான். என்னைப்பார்த்ததும் வாயெல்லாம் இளிப்பு. "ஏண்டா உனக்கு வேற இடமே கிடைக்கலியா?" என கொஞ்சம் சூடாக கேட்டேன். அதற்கு அது சொன்னது: "சக்கரம் அழுக்கா இருக்கில்ல, கழுவரேன்" என்று.........

சரி, பயல் பொழச்சுக்குவான் போலையே, பரவாயில்லை என நினைத்து கொண்டு மேலுக்கு கொஞ்சம் முறைத்து விட்டு இதை அவன் அம்மா கிட்டே அவர் வந்தவுடன் பேசுகையில் சிரித்துக்கொண்டே சீரியசாகாமல் சொன்னேன்.

அதற்கு அவர்கள் கொடுத்த பதில் இருக்கிறதே....... "அவன் அப்படி தான்.... ரொம்ப sharp"..... :-)

அப்புறம் அவர்கள் "தம்பி நான் வேணுமானால் வண்டியை கழுவி கொடுத்து விடுகிறேன்" என வாளியை எடுக்கக்கிளம்ப, நான் தடுக்க இப்படி ஒரே களேபரம் தான் போங்க.

சரியென்று ஒரு வழியாக குட் நைட் சொல்லி வழியனுப்புகையில் "இனிமே அப்படி பண்ணக்கூடாது என்ன?" என்று அவன் அம்மா சொல்ல, அவனோ "நாளைக்கும் பண்ணுவேன்" என்று இளித்துக்கொண்டு சிட்டாய்ப் பறந்தானே பார்க்கலாம்.

அதை விட அக்கா முகத்தில் 10 Litres original அசடு வழிந்ததை ரசித்து விட்டு "Doesn't matter; It’s all in the game” என சொல்லி விட்டு வந்தேன்!


July 5, 2012

நாகரிகம்

நாகரிகம் என்று சொல்லிக்கொண்டு நாம் என்ன என்னவோ பண்ணத்துவங்கி விட்டோம். trendy ஆக உடுப்பதும், பளபளக்கும் கண்ணாடி குவளைகளில் இருந்து அருந்தவும், முள் கரண்டியால் சாப்பிடுவதும் பெருமைக்குரிய விஷயங்கள் ஆகி விட்டன. மேற்கத்திய உடைகளும் நுனி நாக்கில் புரளும் அந்நிய பாஷைகளும் (சீன ஜப்பானிய ஜெர்மன் மொழிகளும் அடக்கம்) பெருமைக்குரிய விஷயங்களாக எண்ண துவங்கி விட்ட சமூகம். இளைய தலைமுறை.

ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சியும் பகட்டும். மறுபக்கம் நாம் மனிதத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு இருக்கிறோமோ என தோன்றுகிறது.

நாகரிகம் என தான் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு அளவுகோலை வைத்தே மனிதர்களின் மரியாதையையும் நிர்ணயிக்கிறது இன்றைய இளைய சமூகம்.

வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை சில வருஷங்களுக்கு முன்னால் "அக்கா" என்றோ "அம்மா" என்றோ வயது கருதி பண்புடன் அழைத்த பாங்கு மாறிப்போய் இன்று சிறுவர்கள் கூட "ஏய்" என்றும் பெயர் சொல்லியும் விளிக்கும் நிலையை நாகரிக வளர்ச்சி என கொள்வதா பண்பாட்டு சீரழிவு எனக்கொள்வதா என தெரியவில்லை.

இன்னொரு உதாரணம்:

முதுகலை படிப்பில் ஒன்றாக படித்த ஒரே நேரத்தில் ஒரு வகுப்பில் படித்த மாணவனும் மாணவியும் வேறு வேறு இடங்களில் PhD படிப்பை தொடங்கினர்.

மாணவி எதிர்பார்த்த நேரத்தில் முடித்து விட்டாள், எதிர்பாராத குடும்ப சூழ்நிலை தடங்கல்களினால் மாணவனால் அவ்வளவு சீக்கிரம் முடிக்க இயலாமல் காலம் தாழ்ந்தது. பட்டம் வாங்கி விட்ட மாணவி அவன் படிக்கும் பல்கலைக்கழகத்திலேயே அவனுக்கு ஒரு படி மேலாக பணியில் சேர்ந்தாள். அவன் நிலைமை நன்கு தெரிந்தும், நட்புடன் ஆதரவாக இருக்காமல், ஈகோவுடன் "நான் உன்னை விட மேலானவள்" என்கிற ரீதியில் அதிகார தோரணையில் சில சமயம் அவமானப்படுத்தும் விதமாகவும் (belittling manner) நடந்து கொண்டாள். இது தனது முன்னாள் (???) நண்பனை புண்படுத்தும் என தெரிந்து பண்ணினாளா இல்லை தெரியாமல் பண்ணினாளா இல்லை இப்படி பண்ணுவதால் அவளுக்கு ஒரு கிக்கா புரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். பண்புள்ள மனிதர் செய்யும் செயலல்ல அது.

வாழ்ந்து கெட்ட மனிதர்களை நாம் நடத்தும் விதமே அலாதி தான். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல வயதுக்கும் அனுபவத்துக்கும் மரியாதை தராமல் ஏகவசனத்தில் பேசுவதும் ஏசுவதும்........ அதட்டுவதும் அறிவுரை (?) கூறுவதும்........ 

வயதான பெற்றோர், விதவை அம்மா, அத்தைப்பாட்டி, ஆதரவற்ற தங்கை, காலத்தின் கோலத்தால் வீட்டில் வேலை செய்யும் வாழ்ந்து கெட்ட மனிதர்...... கைவிடப்பட்ட கிழவிகள், கிழவர்கள், அனாதைப்பிள்ளைகள்........ பட்டியல் நீளுகிறது........

ஏதோ அவர்கள் நிலைமை ஆண்டவன் இப்படி வைத்து விட்டான், நம்மால் இயன்றதை செய்வோம், ஆறுதலாக இருப்போம் என்று எண்ணாமல் தலைகால் புரியாமல் ஆடுவது எங்கு கொண்டு போய் விடுமோ தெரியவில்லை.

வாழ்க்கை ஒரு சக்கரம் போல. Life's full of ups and downs. அவர்கள் நிலைமை நாளைக்கு நமக்கும் வரலாம். வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

முடிந்தால் ஆறுதலாக இருப்போம், முடிந்ததை பண்ணுவோம். உதவியாக அல்ல. நாம் பண்ணியிருக்கிற பாவங்களுக்கு கழுவாயாக. இன்னொரு இதயம் புண்படுமாறு, அதுவும் ஏற்கனவே புண்பட்ட நெஞ்சம் மேலும் புண்படுமாறு நடப்பது நாகரிகமல்ல. பண்பாடும் அல்ல. செத்த பாம்பை அடிப்பது வீரம் அல்ல.

காசுபணம் வேண்டாம். கனிவான வார்த்தைகளையாவது தரலாமே. ஆறுதலும் ஊக்கமும் தரலாமே. முடியாவிட்டால் சும்மா இருக்கலாம். பிறர் மனம் குளிர வைக்க வேண்டாம், at least மனம் புண்ணாக்காமல் இருக்கலாம்.

சமூகத்தில் ஒரு அங்கமாக இருந்து அவர்களுக்கு இதை தர நாம் கடமைப்பட்டுள்ளோம். நமக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்த ஆண்டவருக்கு தேவாலயத்திலும் கோவிலிலும் நன்றி சொல்லுவதை விட, நம்மை விட துர்த்தசையில் கஷ்டப்படுபவனுக்கு ஒரு ஆறுதலாக இருந்தால் அது சிறந்தது. அது தான் அந்த கருணை உள்ள கர்த்தருக்கும் பிடிக்கும்; நமக்கு அவர் தந்துள்ள அருளுக்கு உண்மையில் அப்போது தான் நாம் தகுந்த பாத்திரமாவோம் என்பது என் humble opinion.

 

July 4, 2012

எதிர்பார்ப்பென்ன?

சென்ற பதிவின் தொடர்ச்சியாக வருவது தான் இந்த பதிவு.

இந்த கேள்வியை முன் காலத்தில் பெண் வீட்டார் பையன் வீட்டாரிடம் கேட்பார்கள். இன்று நிலைமை தலைகீழாகி இருக்கிறது போலயே!

matrimonial தளங்களுக்கு போய் பார்த்தால் looking at the long list of sometimes surreal expectations, தலை சுற்றுகிறது, to say the least.

எனது வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என ஒவ்வொரு மனிதனும் மனுஷியும் நினைப்பது இயல்பு தான்.

வருகிற வாழ்க்கை துணை எவ்விதம் அமைய வேண்டும் என கனவுகளும் எதிர்பார்ப்புகளும் இருப்பது இந்த வயதில் வெகு இயல்பு தான்.

ஆனால். காதல் என்பதும் அன்பு என்பதும் இதை எல்லாம் தாண்டிய ஒன்று.

commitment எனும் சொல்லை நாம் அளவுக்கு மீறி glorify பண்ணிவிட்டோம்.

ஆரம்ப காலத்தில் அது சுகமாக இருக்கும், அன்புடன் காதலுடன் சேர்ந்து சரியான அணுகுமுறையில் தான் இருக்கும். ஆனால் அதை மட்டுமே பிடித்து கொண்டு விட்டால் தான் பிரச்சினை.

அன்பும் காதலும் இருந்தால் commitment இயல்பாகவே இருக்கும். அதை தனியாக emphasize பண்ணவேண்டிய தேவை இல்லை.

நாட்பட அன்பும் காதலும் தேய தொடங்கும் போது, அதே commitment உயிரற்ற எலும்புக்கூடாகி, கட்டாயமான ஒரு ritual ஆகி விடுகிறது.

commitment வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை. (அதை தான் living together பிரசாரகர்கள் சொல்லுகிறார்கள். நான் அவன் இல்லை)

கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால் இவர்கள் வேண்டாம் என்பது, அன்பற்ற சூழ்நிலையிலும் கட்டாயம் அந்த உறவில் இருக்க வேண்டும் என்ற நிலைமை வேண்டாம் என்பது தான்.

ஆனால் இவர்கள் பண்ணும் தப்பு, அந்த கமிட்மென்ட்டை பாரமாக்கியது எதுவோ அதை சரி பண்ண முயலாமல் கமிட்மெண்டே வேண்டாம் என்பது தான்.

ஆரம்பத்தில் இருந்த அன்பு later on ஏன் இல்லாமல் போனது என ஆராய்வது இல்லை.

கரையான் புற்று வைத்தால் உடைத்து போடுகிறோம். ஒரு வாரம் கழித்து வந்து பார்த்தால் அதே இடத்தில் மீண்டும் புற்று வைத்து இருக்கிறது. புற்றை உடைத்தால் போதாது. ராணி பூச்சியை தேடி சம்ஹாரம் பண்ணினால் தான் புற்று நீங்கும்.

இங்கே பிரச்சினையின் மூலம் தான் ராணி பூச்சி.

அது என்ன? எதிர்பார்ப்புகளுடன் கூடிய அன்பு. நீ இதை செய், நீ இப்படி இருந்தால் தான் உன்னை எனக்கு பிடிக்கும், நீ இதை இதை எல்லாம் செய்து கொடுத்தால் தான் எனக்கு உன்னை பிடிக்கும், அப்போது தான் உன் மீது எனக்கு அன்பு வரும், அன்பு வந்தால் உனக்கு பிடித்ததை நான் பண்ணுவேன் என்று ஆகி விட்ட நிலை.

அந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகாத போது கோபம், விரக்தி. அதை துணையிடம் காட்டுவது. அதன் எதிர்வினை நிச்சயம் அன்பாக இருக்காது. இது ஒரு முடிவில்லா கொடுவட்டம் - A vicious cycle. 

கவிதைக்காக சொல்லவில்லை. எதிர்பார்ப்பு இல்லாமல், துணையை/அடுத்தவரை நேசிப்பது தான் அன்பு. அது உன்னதமான காதல் என்று சொல்ல மாட்டேன். அது தான் காதலே. உன்னதமான காதல் என்றால் சாதாரணமான காதல் என்று வேறு உள்ளதோ? காதலின் லக்ஷனமே அடுத்தவரை அப்படியே ஏற்று கொள்வது தான்.

That kind of true love never diminishes. It, like old wine, only gets better with age, reaching a stage where it transcends the mundane physical aspects. Slowly the body and form and name lose their significance, and hearts commune. And that's only possible with acceptance and unconditional giving of love. Then the relationship would be an expression of joy, not means of joy!

இந்த மனம் உடையவர்களைப்பார்த்தீர்கள் என்றால் - உன்னிப்பாக பார்த்தீர்கள் என்றால், அவர்கள் (வரப்போகும்) துணை மீது மட்டும் அல்ல எல்லார் மீதும் கட்டுப்பாடுகள் இல்லாத அன்பும் பாசமும் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களின் அன்பு அவர்களின் சுயமாக வெளிப்படும்.

மனித சமூகம் மீதும், இயற்கையின் மீதும் பொங்கிய அன்பினை வெளிப்படுத்தும், ஏற்றுக்கொள்ளும் இவர்கள் desparate ஆக ஒரு துணையை வேண்டி, தேடி போவதில்லை. துணை அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என scrutinize பண்ணி விளம்பரம் பண்ணுவதில்லை. உன்னதமான இவர்களுக்கு தகுந்த நல்ல துணை தேடாமலேயே இவர்கள் கையை பிடிக்கிறது. ஆண்டவனின் பரிசு போல, தேடாமலேயே தெய்வீகமான இவர்களுக்கு ஏற்ற துணைவரோ துணைவியோ இவர்கள் மடியில் விழுவார்கள்.

மட்டமா?

சமீபமாக ஒரு திருமண/வரன் தேடும் தளத்துக்கு சென்று பார்த்த பொழுது மனதில் எழுந்த எண்ணங்களின் பிரதிபலிப்பே இந்த குறும்பதிவு.

பையன் நக்ஷத்திரத்துக்கு ஏற்ற பெண் பிள்ளை கிடைப்பதே தேடோ தேடென்று தேடிய பின்பு தான் ஒன்றோ இரண்டோ கிடைக்கிறது. அதன் பின் தான் ஜாதகம் பொருத்தி, அதுவும் பொருந்தினால் தான் Alliance பேச்சே நடக்கும், முக்கால்வாசி குடும்பங்களில்.

அந்த பெண்களின் profile இல் பார்த்தால், Prospective groom பொறியியல் படித்தவராக இருக்க வேண்டும், மாதம் இவ்வளவு (5 லக்ஷத்துக்கு மேல்) சம்பாதிக்க வேண்டும், வயதும் இருபத்தி எட்டுக்கு உள் தான் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டு இருக்கும்.

அப்போ அறிவியல் படித்தவன், இலக்கியம் படித்தவன் எல்லாம் மட்டமா? எல்லாருக்கும் பொறியாளரோ மருத்துவரோ தான் வேண்டும் என்றால் மற்றவர்கள் என்ன பண்ணுவது?

கொஞ்சம் சராசரியாக சம்பாதித்தால் என்ன குறைச்சல்? முப்பது வயதுக்கு முன்பே வருஷம் ஐந்தாறு லக்ஷம் சம்பாதிப்பவர்கள் உள்ளார்கள் தான், ஆனால் குறைவு. சராசரியாக இரண்டில் இருந்து நான்கு லக்ஷம் ரூபாய் தான் பெறுவார்கள் முக்கால்வாசி பையன்கள்.

திறமைக்கும் குணத்துக்கும் குடும்ப பின்னணிக்கும் மதிப்பு கொடுத்து கலியாணம் பண்ணி வாழ்ந்து வளர்ந்து உயர்ந்த காலம் மலையேறி போய் விட்டதோ என பயமாக உள்ளது.

நல்ல குணமும் ஒழுக்கமும் உள்ள ஆண்மகன் நிச்சயம் நல்ல ஊதியம் வரும் நாட்களில் பெறுவான். அதை fast food கலாசாரம் போலவே எல்லாம் இப்பவே வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

அதே போல அறிவியல் மற்றும் இலக்கிய துறை சார்ந்தவர்கள் என்றால் என்ன மட்டமா? அவர்களில் மனைவியை வைத்து காப்பாற்ற (???) கூடிய ஆண்மக்கள் இல்லை என எதை வைத்து முடிவு கட்டுகிறார்கள்?

முதலில், கலியாணத்துக்கும் தாம்பத்தியத்துக்கும் படித்த படிப்புக்கும் என்ன சம்பந்தம்? வாழ பொருள் ஈட்ட தொழில் தேவை, அதற்கு படிப்பு தேவை. அவ்வளவு தானே. நேர்மையாக உழைக்க என்ன துறை ஆனால் என்ன? இப்போதெல்லாம் அறிவியல் மற்றும் கலை துறையினரும் ஓரளவுக்கு நன்றாகவே சம்பாதிக்கின்றனர். முன் போல இல்லை.

பெண்களே, குணத்தை பாருங்கள். குடும்ப பிண்ணணியை பாருங்கள். நேர்மையான உழைப்பை பாருங்கள்.

(ஆண்களுக்கும் இது பொருந்தும்)

இது திட்டல்ல. மன வேதனை, ஆற்றாமையின் வெளிப்பாடு.

 

 

 

 

 

 

 

 

 

 

July 3, 2012

கண்ணனென்-மனைவி

கரம்பிடித் தாளென்னை காணோர் தெய்வம்

வரமென்னத் தகுமென்றன் வண்ணமயி லாள்;

அறம்வளர் நெஞ்சுடை யாளென தாவிக்

குரமனை யாள்திரு மகளனை யாள்;
யதுகுலத் தேயுதித் தாளென் றேவி

மதுகை டபர்தமை தொடைக்களித் தாள்;

வஞ்சகர் தமைவெறுப் பாளிவள் மட்டும்

நஞ்சிலா யெண்ணிலாப் பொய்யுரைப் பாள்;

 

கண்ணிலே மணிபோல் வாளிவ ளேயான்

பண்ணிய தவப்பயத் துணைவி யென்றன்

னெண்ணிலாத் துயரழித் தேயோர் காதற்

பண்ணிலே பணிந்தெனக் கருள் தருவாள்;

 

எண்ணிலாக் குறும்பிழைப் பாள்காண் பிள்ளை

தண்ணிலாப் போல்நகை யுதிர்த்திடு வாள்;

கண்ணினாற்க் காவியங் கள்குழை ப்பாள் முழு

எண்ணமும் நாட்பட அவள்பதம் தான்.

 

பந்தள வில்வெண் ணெய்யது வேண்டி

மந்திப ழித்திடும் சேட்டிதஞ் செய்தாள்

முந்தைய நாள்கதை நம்புவ தாற்றேன்

அந்தமி லாநிலை தந்தனள் கூடி;

 

கண்மணி கண்ணனி வள்கரம் கொண்டதும்

நண்ணிய நன்மைகள் எண்ணவும் ஆற்றேன்

சின்னவன் என்றெனை எள்ளிய தறியேன்

மண்ணெனை பொன்னெனப் பண்ணினள் பைந்தொடி.

 

பண்டம் சிறியது யான்பகிர்ந் தாலும்

அண்டத் துண்மைகள் அன்புடன் காட்டுவள்

கண்டறி யாதன காட்டுவள் கான்முனி

விண்டறி யாதன மெய்பல சொல்வாள்;

 

தின்னற் கரியபொ ருள்மருந் தாகிலும்

கன்னற் பாகினில் போல் - வேதாந்தம்

சின்னக் குழவிம திபுரிந் துய்திட

கண்ணனி வள்தந் தாளில் லறமதில்;

 

பண்ணிய புண்ணியம் யாதோ அறியேன்

திண்ணிய மேன்மகள் கண்ணனை பற்றிட;

கன்னற் றேமொழி காதலி யென்னைப்

பின்னற் பிறவிக ளின்னலிற் காத்தனள்;
என்னத வம்செய் தேன்யா னிவளை

வன்னமு டன்வாழ் வில்மணந்தி டகாண்;

மண்ணும்மு லைமணி பொன்னும் விரும்பிய

சின்னவ னென்னையும் சிந்தையில் மாற்றினள்;

 

கண்மணி இவளை கைக்கொண்டது முதல்

பண்ணிய சீர்மைகள் திண்ணிய பலபல;

அன்றவள் பணிந்தனள் இன்றுயென் முறையாம்

இல்லறம் கண்ணனி வள்செய நல்லறம்;
கைப்பிடித்தாள் எனை காதலிற் கட்டினாள்

மெய்ப்பிடித் தேனது காந்தா சம்மிதம்;

தைப்பிறந்தா லெழும் ஞாயிறு கண்ணனெம்

மைப்பிடித்தா ளிருள் மாயை மருண்டது;

+++++++++++++++++++++++++++++++

கான் முனி: காட்டில் தவம் இயற்றும் முனிவர்; கன்னற்றேமொழி : கன்னல் தேமொழி = கரும்பின் சாறு போல், தேன் போல் இனிய மொழி பேசும் மனைவி; மெய்ப்பிடித்தேன்: உண்மை (முடிவான உண்மையினை) பிடித்தேன்;

காந்தா சம்மிதம்:

உபதேசத்தில், வணங்குதற்கு உரிய குரு ரூபத்தில் வந்து உபதேசிப்பது ஒரு வகை (பிரபு சம்மிதம்). நண்பனாக வந்து உபதேசிப்பது இன்னொரு முறை (சுஹ்ருத் சம்மிதம்/மித்ர பாவம்). மனைவியாக/கணவனாக/காதலியாக/காதலனாக வந்து உபதேசிப்பது மேலும் ஒரு முறை (காந்தா சம்மிதம்/காந்தா பாவம்)