Disable text selection

September 23, 2012

கவிஞர் வாலியின் பொருள் பொதிந்த வரிகள்!

கவிஞர் வாலியின் பொருள் பொதிந்த வரிகள்:

"கையேந்தும் ஆட்டுக்குட்டி கன்னிப்பெண்ணா மாறாதோ, மையேந்தும் கண்ணைக்காட்டி மையல் தீரப்பேசாதோ"......

காமப்ப்ரதானமாக கிறுக்கும் இன்றைய பல கவிஞர்கள் கவனிக்க வேண்டிய வரிகள்..... "மையேந்தும் கண்ணைக்காட்டி மையல் தீரப்பேசாதோ"..

என்ன இருக்கு? வாஸ்தவத்திலேயே ஒருத்தனுக்கு ஒரு பெண் மீது பவித்ரமான பிரேமை உண்டாச்சு என்றால் எடுத்தவுடன், அவனுக்கு உடல் இச்சை எழாது......

அவளோடு இருக்க வேண்டும், அந்த கருநீலக்கண்களை பார்க்க வேண்டும், பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும், அவளோடு பேச வேண்டும், பேசிக்கொண்டே இருக்க வேண்டும், தன் மனோராஜ்யங்களை சொல்ல வேண்டும் என்று தான் தோன்றும்...... பிள்ளைத்தனமான பாசமும் சிநேகமும் தான் அங்கு இழையோடுமே தவிர கிராமிய சுகத்துக்கு அவன் மனஸ் ஆசைப்படாது.......

உண்மையான காதலுக்கு லக்ஷனமே ஸ்நேகம் தான்! இதைத்தான் வள்ளுவனும் "மடந்தையோடும் எம்மிடை நட்பு" என முழங்கினான்...... கலியான மந்த்ரங்களிலும் சப்தபதி முடிந்ததும் பத்னியை "சகி" என விளிப்பான் கணவன்.......

அப்படி பாசமும் சிநேகமும் ததும்பும் உறவில் தன்முனைப்புக்கும் சண்டைகளுக்கும் இடமிருக்காது...... பச்சை மரமும் பூத்துக்குலுங்கும் கொடியும் அதை வருடி ஓடும் தென்றலும் போல அந்த உறவு இனிக்கும்.

அவர்தம் உடல்களின் இணைவும் கூட அங்கே அவர்களின் அன்புக்கும், பரிபூரண நம்பிக்கையினாலான பரஸ்பர சரணாகதியாகத்தான் இருக்கும்!

பிரியங்களுடன்
புவனேஷ்
 

September 11, 2012

தலைவர்!

அதோ, போய்க்கொண்டு இருக்கிறார். - அர்த்தமுள்ள இந்து மதம், எட்டாம் பாகம் நிறைவு பகுதியில், கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.

"இப்படிப்பட்ட யோகம் கை வந்த ஒருவர், காஞ்சி பெரியவர்.

அதோ, அவர் எங்கே போகிறார் என்று சொல்லாமலேயே போய் கொண்டு இருக்கிறார்.  இந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க்கொண்டிருக்கிறார்.

கைப்பிடி அவலில் காலமெல்லாம் வாழும் அந்த மகாயோகி தள்ளாத வயதிலும் வாலிபனை போல் புனித யாத்திரை தொடங்கி  இருக்கிறார்.  தெய்வ நம்பிக்கை உச்சத்துக்கு போய் விட்டால் வயது தோன்றாது, பசி தோன்றாது.

உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது.  அதோ, அந்த ஒளியோடு அந்த மகாயோகி போய்க்கொண்டு இருக்கிறார்.  அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரை அன்று. அது ஆன்ம யாத்திரை.

லோகாதய சுகத்தை முற்றும் துறந்துவிட்டு தார்மீக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது தர்மம் நடைபாதை விரிக்கிறது.  மகா யோகம் மலர்கள் தூவுகிறது. மகாராஜாக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்கு கிடைக்கிறது.

ஆந்திராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப் படவில்லை. அங்கே போய் காஞ்சி பெரியவர் ஓரிரவு தங்கினாராம். சிலை பிரதிஷ்டை ஆகி விட்டது என்று ஆந்திர மக்கள் எல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்களாம்.

அவர் பிராமண ஜாதியின் தலைவரல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்க கூடாது.

உலகெங்கிலும் உள்ள அக்ஞாநிகளுக்கு ஞான கண் வழங்கும் பேரொளி.  அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால் 'இந்து மதம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு 'ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சுவாமிகள் என்ற சங்கராச்சாரிய சுவாமிகள்' என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.

அந்த ஞான பழத்தை தரிசித்தபோது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது. கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும். செஞ்சி கோட்டைக்கு போகிறவன் எல்லாம் தேசிங்கு ராஜா அல்ல. காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகள் அல்ல.  ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார்.

அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். இறைவன் கருணையினால் நமக்கு கிடைத்த அந்த வரம், இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும். தாய், குழந்தைக்கு தாலாட்டு பாடும் போது அவரை பற்றி பாட வேண்டும். பள்ளிக்கூட பாட புத்தகங்களில் அவரை பற்றி குறிக்க வேண்டும்.  ஒரு உத்தமமான யோகியை 'பிராமணன்' என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது. மேதைகளும் கற்பு அரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம். யோகிகளில் ஒரு சாதாரண யோகியை கூட ஒதுக்க கூடாது என்றால், இந்த மகா யோகியை பிராமணர் அல்லாதார் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்?
அதோ அவர், நடந்து போய் கொண்டு இருக்கிறார். புத்தன் சொன்னதை விட, அவர் நமக்கு அதிகமாக சொல்லி இருக்கிறார். இயேசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்து இருக்கிறார்.  அவர் ஜாதி வெறியர் ஆகவோ, மத வெறியர் ஆகவோ, ஒரு நாளும் இருந்தது இல்லை.
அரசியல் வில்லங்கங்களில் மாட்டி கொண்டது இல்லை.


பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டு இருப்பவர் அவர் ஒருவரே.
அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள்.

அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்......"

September 7, 2012

படித்ததில் பிடித்தது: துரோணரின் அறிவுரை

அபிமன்யு அநியாய விதமாக ஜெயத்ரதனால் கொல்லப்பட்டதை அறிந்த அருச்சுனன் ரௌத்ராகாரமாக "நாளை மாலைக்குள் ஜயத்ரதனை கொல்வேன்; அவன் உயிருக்கு பயந்து ஓடியோ, அல்லது தரும புத்திரரிடமோ க்ருஷ்ணணிடமோ சரண் அடைந்தாலோ அன்றி, நாளை மாலைக்குள் அவன் உயிரை காண்டீபம் குடிக்கும். இல்லையேல் நான் ஜொலிக்கும் தீயினில் பாய்ந்து மகன் சென்ற உலகுக்கு நானும் செல்வேன், இது சத்தியம்" என கோரமான சபதம் பண்ணினான்.

ஜயத்ரதனை முடிக்க முனைந்து அருச்சுனன் சென்றான். வில்லை இரு கைகளாலும் பிடித்து இடது கையாலும் அம்பெய்யும் திறமையை பெற்றவன் அர்ஜுனன் (சவ்யசாசி) என்று எல்லாரும் அது நாள் வரை கேள்விப்பட்டுத்தான் இருந்தார்கள். அன்று தான் கண்கூடாக பார்த்தார்கள்.

இது வரை பதின்மூன்று நாட்கள் யுத்தத்தில் கூட, அருச்சுனன் வந்தால் எவரும் அவன் முன்னால் நிற்க முடியாது என்ற நிலை இருந்தது. வாய் திறந்த அந்தகனை போல அவன் எதிரிகளுக்கு காட்சி தந்தான். ஆனால் அதுவரை கௌரவப்படை கண்ட அருச்சுனன் ஒன்றுமே இல்லை என்று ஆக்குவது போல அன்று காண்டீபம் தன் முழுப்பண்பையும் காட்ட ஆரம்பித்தது. எடுப்பதும் தொடுப்பதும் விடுப்பதும் கண்ணுக்கு தெரியவில்லை. அர்ஜுனனின் வில்வன்மையும் கண்ணனின் சாரத்யமும் சேர்ந்து, பயம் கொண்ட கௌரவப்படைகளுக்கு ஒரு அர்ஜுனன் அல்ல, நூறு நூறு அருச்சுனர்கள் தெரிய ஆரம்பித்தார்கள். "இதோ அருச்சுனன், இதோ விஜயன்" என கத்தி தங்களுக்குள்ளேயே வெட்டி மடிந்து பைத்தியம் கொண்டவர்கள் போல அப்படை குலைய ஆரம்பித்தது.

யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சகாயம் செய்ய சாத்யகி போகிறான். அருச்சுனனின் உயிர் நண்பனும், சீடனும் ஆவான் சாத்யகி. அர்ஜுனனை மிஞ்சும் அளவுக்கு வில் வன்மை கொண்டவன் என வியாசர் அவனை புகழ்வார். துரோணருடன் புரிந்த போரில் அவரிடமே பாராட்டு பத்திரம் வாங்கின வீரன். போரில் அவர் வில்லை ஒரு அம்பால் உடைதான் சாத்யகி. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அடுத்த வில்லை  பிடித்து நின்றார் ஆசாரியர். அடுத்த கணம்  கழுகு இறக்கைகள் பூட்டிய அம்பு ஒன்று அந்த வில்லை கைப்பிடியில் துண்டாக்கியது.  அடுத்த வில்லை நாணேற்றினார் துரோணர். நாணேற்றும் போதே அதுவும் உடைந்தது. அதற்கு அடுத்த வில்லை நாணேற்ற கூட நேரம் தராமல் சாத்யகி ஒரே அம்பால் சேதித்தான். இப்படி தொண்ணூற்றாறு விற்களை ஆசாரியர் எடுக்க எடுக்க எடுத்ததும் உடைத்தான் யாதவ குல வீரன். பின் நடந்த யுத்தம் மயிர்க்கூச்செறியும் படி நடந்தது. இவன் சாதாரணமானவன் அல்ல என திவ்ய அஸ்திரங்களை விடுத்தார் பிராமணர். பயப்படாமல், அவர் பிரயோகித்த ஒவ்வொரு அஸ்திரத்துக்கும் பதிலடி கொடுத்தபடி சளைக்காமல் போரிட்டான் சாத்யகி.  "யுத்தத்தில் இந்த சாத்யகி ஸ்ரீ ராமனையும், பரசுராமனையும், அர்ஜுனனையும், கார்தவீரியார்ச்சுனனியும் போல போர் புரிகிறான்" என்று ஆசாரியார் மகிழ்ந்து பாராட்டினார். சஞ்சயனும் "உலகில் ஸ்ரீ கிருஷ்ணனும்,  அருச்சுனனும் சாத்யகியுமே சிறந்த வில்லாளிகள். நான்காவது யாரும் கிடையாது" என கண்ணிழந்த மன்னனிடம் பாராட்டினான்.

அந்த சாத்யகி யுத்தத்தில் அதாகதம் பண்ணுகையில் அவனை எதிர்க்க கர்ணன் சென்றான். தோற்றான். அர்ஜுனனின் சபதத்தை நினைத்து அவனை கொல்லாமல் அனுப்பினான் சாத்யகி. க்ருதவர்மன் சென்றான். மயங்கி கிடந்தான். சில பல வீரர்கள் சென்றார்கள். சென்ற வேகத்திலேயே யமனுக்கு விருந்தாளியாக சென்றார்கள்.

பின்னர் துச்சாதனன் போனான். கொஞ்ச நேரம் யுத்தம் நடந்தது. கர்ணனையும் துரோணரையும் தோற்கடித்த சாத்யகிக்கு துச்சாதனனை கர்வபங்கம் பண்ண அதிக நேரம் பிடிக்குமா என்ன? தேரிழந்து வில்லிழந்து ஆயுதங்கள் அழிந்து புறங்காட்டினான் துச்சாதனன். பீமனின் சபதத்தை எண்ணி அவனை உயிரோடு விட்டான் சாத்யகி.

ஓடி வந்தவன் நேரே துரோணரிடம் வந்தான். அவனை துரோணர் நன்றாக திட்டி, சமாதானம் பண்ணிக்கொள், இப்போதும் கூட ஒன்றும் பாழாகவில்லை என கூறினார். அந்த பகுதியே இது.

"துச்சாதனா, ஏன் இந்த ரதங்கள் சிதறி ஓடுகின்றன? அரசன் நலம் தானே? சிந்து தேசத்தரசன் ஜெயத்ரதன் நலம் தானே? நீ ஒரு இளவரசன். நீ ஒரு அரசனின் சகோதரன். நீ ஒரு தேர் வீரன் தானே? ஏன் இப்படி யுத்தத்தில் பயந்து புறங்காட்டி பறந்தோடி வருகிறாய்? யுத்தத்தில் ஜெயித்து நீ இளவரசனாக வேண்டியது தானே?

முன்னொரு நாளில் நீ பதிவ்ரதையான குற்றமற்ற திரௌபதியிடம் சொன்னாயே நினைவிருக்கிறதா? "சூதாட்டத்தில் ஜெயிக்கப்பட்ட நீ எங்கள் அடிமை, உன் கணவர்களுக்கு கட்டுப்படாமல், உன் கற்பை கழற்றி வீசி விட்டு துரியோதனனின் ஆடைகளை சுமந்து வா; உன் கணவர்கள் இறந்து விட்டவர்களுக்கு சமம், விதை அற்ற எள்ளுக்கு சமானமான அற்பர்கள் உன் கணவர்கள்" என கூசாமல் தைரியமாக அந்த பெண்ணிடம் சொன்னாயே, இப்போது ஏன் ஓ துச்சாதனா, யுத்தத்தில் தைரியம் கெட்டு மானமில்லாமல் ஓடி வருகிறாய்?

நீ தானே இந்த கொடும் பகையை பாண்டவர்களுடனும் பாஞ்சாலர்களுடனும் மூட்டி விட்டாய்? மூடனே, இப்போது சாத்யகியை கண்டே தொடை நடுங்குகிறாயே? அன்றைக்கு உருட்டிய பகடைகள் சட்டை உரித்த விஷ சர்ப்பங்களை ஒத்த கூரிய அம்புகளாக உருமாறி தாக்கும் என உனக்கு அன்று புரியவில்லையா?

ஒரு குற்றமும் அறியாத பாண்டவர்களை கேவலமான பல வார்த்தைகளால் சகோதரர்கள் எனவும் பாராது திட்டியவன் நீதானே?

பாஞ்சாலியின் துயரங்கள் உன்னையே வேராக கொண்டவை. அன்று காட்டிய உனது மமதையும் கர்வமும் இப்போது எங்கே? அன்று பாண்டவர்களை சீண்டிய நீ இப்போது ஏன் புறங்காட்டி ஓடுகிறாய்?
பயந்து போன இந்த படைகளை காக்காமல் ஏன் நீயே ஓடி வருகிறாய்?

சாதவத குலத்தை சேர்ந்த சாத்யகி ஒருத்தனை கண்டே உன் மனம் கோழைத்தனத்தை அடைந்து விட்டதே, நீயெல்லாம் காண்டீபத்தை கண்டால் என்ன செய்வாய்? பீமசேனனை கண்டால் என்ன செய்வாய்? இரட்டையர்களை (நகுல சகாதேவர்களை) கண்டால் என்ன செய்வாய்?

நீ கண்டு பயந்து ஓடி வந்தாயே, அந்த சாத்யகி எய்த அம்புகள், சூரியனை போல யுத்தத்தில் எரிக்கும் அருச்சுனன் கையில் உள்ள காண்டீபத்தில் இருந்து வெளிப்படும் அம்புகளுக்கு சிறிதும் நிகராக மாட்டா, தெரிந்து கொள். நீயெல்லாம் காண்டீபத்தை கண்டால் என்ன செய்வாய்?

இவ்வளவு பயந்து ஒடுபவனாக இருக்கிறாயே!

உன் நன்மையை கருதி சொல்லுகிறேன், கேள். தருமராஜன் நல்லவன், நீதி தவறாதவன். அனைவருக்கும் இனியவன், எதிரிகளையும் அன்பால் கவர்பவன். அவனை போய் பகைக்கிறாயே. உன் அண்ணன் அவன். அவனுக்கு ராஜ்யத்தை கொடுத்து சமாதானம் பண்ணிக்கொள்.

சட்டை உரித்த விஷ நாகங்கள் புற்றுக்குள்ளே நுழைவது போல போல ஒப்பற்ற பல்குணனின் (அர்ஜுனனின்) அம்புகள் உன் உடலுக்குள் புகும் முன், பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள். மகாத்மாக்கள் பாண்டவர்கள் உன் நூறு சகோதரர்களையும் கொன்று ராஜ்யத்தை அடைவதற்கு முன், நீ அவர்களோடு சமாதானம் செய்து கொள்.

இன்னும் கோபப்படாத யுதிஷ்டிரன் கோபப்படும் முன் சமாதானம் பண்ணிக்கொள். யுத்தத்தில் களிப்பவனான கிருஷ்ணன் ஆத்திரப்ப்படுமுன், தோள்வலியில் நிகரற்ற பீமசேனன் இந்த படைகளுக்குள் புகுந்து உன் சகோதரர்களையும் உன்னையும் யமனுக்கு விருந்தாளிகள் ஆக்குவதற்கு முன் சமாதானம் செய்து கொள்.

பாண்டவர்களை யுத்தத்தில் ஒருத்தராலும் ஜெயிக்க இயலாது என, அவர்களோடு சமாதானம் பண்ணிக்கொள் என  ஒப்பற்ற பேரறிவுடைய பீஷ்மர் உன் அண்ணனுக்கு (துரியோதனுக்கு) சொன்னார். மூடனும் கொடியவனுமான உன் அண்ணன் அவரது நன்மொழிகளை கேட்கவில்லை."

இதையெல்லாம் கேட்டு அப்புறமாவது துச்சாதனன் திருந்தினானா என்றால், அது தான் இல்லை. துரோணர் சொன்னது எதுவுமே தெனக்கு காதில் விழாதது போல, அங்கிருந்து நழுவி சண்டைக்கு சென்றான். அவன் ஆயுள் துரோணர் சொன்னது போல பீமனின் வாளின் முனையில் மூன்று நாட்களில் முடிந்தது என்பது வேறு விஷயம்.

September 6, 2012

சொல்லத்தெரியாத ஆட்டம் (கவிஞர் தனுசு)

அன்றெல்லாம்
அவளை கானும் போது
ஆணந்தத்தில்
மனசுக்குள் குலவை இசை ஒலிக்கும்! இன்று
காணும் போது
உடையும் மனதின்
விம்மும் குரலை
கேட்கிறேன்!

ஒன்றாய்
ஓடியாடி விளையாடியபோது
அவள்
அடிவயிற்றைப் பிடித்து
சரிந்து உட்கார்ந்த நாளில்
ஓரக்கண்ணால் பார்க்க துவங்கிய
கண்ணாமூச்சி ஆட்டம்
இன்று அவளின்
மெட்டி பூட்டு மனவிழாவில்
முடிந்துபோனது!

இந்த ஆட்டம்
விழியில் களம் அமைத்தாலும்
இதய அரங்கம் ஊமையாகி போனதால்
அவளை
நான் மாலைசூட யோகமில்லை!

புதுமன வாழ்வை துவங்க
விடைபெற்றாள்
புது கணவனோடு!
நானும் விடை கொடுத்தேன்
வறண்டு போன விழியோடு!

தலை முடி கீற்றை
தள்ளும்போதும்
முந்தானை ஓரத்தை
பற்றும்போதும்
அந்த விரல் அசைவு
எதையோ சொல்லியது.

அவளின்
ஓரக்கண்ணின் பார்வை
மீண்டும் எட்டிப்பார்க
என் விழியில் ஈரம் முளைக்க
அதை விழிகளுக்குள்ளேயே
அடக்கம் செய்தேன்!

துனிந்தவனுக்கு துக்கமில்லை!
"நீ ஏன் துனியவில்லை"?
துனியாத எனக்கும் விடை கேட்கிறேன்!

வரையாத கோடுகள்
ஓவியம் ஆவதில்லை!
எழுதாத வார்த்தைகள்
கவிதை ஆவதில்லை!

கிள்ளாத பூவை
சூட முடியுமா?
அருந்தாமல் பாலை
சுவைக்க முடியுமா?

செல்லாத காசை
சேர்த்து என்ன பயன்?
சொல்லத்தெரியாத காதல்
செதிக்கி என்ன பயன்?

-தனுசு-

தவறிய அழைப்பு (கவிஞர் தனுசு)

உலகை மறந்து
உறக்கத்தில் இருந்தேன்
அலறி அடங்கியது கைப்பேசி!
துண்டானது
தூக்கம்!

அது
ஒருவரின் நினைவுறுத்தல்.
அது
நிறைவேற்ற மறந்த
நேற்றைய உறுதி மொழியின்
தொடர்சி.

எத்தனை வசதி!
எங்கோ இருக்கும் ஒருவர்
தவறிய செயலை நினைவுறுத்தி
கைபேசியை அலறவிட்டு சொல்கிறார்!

தூக்கத்தில் இருப்பினும்
ஒருவரின் அழைப்பை புரிந்து
விழித்துக்கொண்ட நான்....

விழி நிலையில் இருக்கையில் வரும்
என்
இன்னொருவரின்
என்னற்ற தவறிய அழைப்பை
ஒதுக்கிவிட்டு
ஒதுங்கிவிடுகிறேன்.

எத்தனை அலட்சியம்!
என்னுடனேயே இருக்கும் இன்னொருவர்
தவறிய செயலை நினைவுறுத்தி
சில
செய்திகள் மூலம் சொல்கிறார்.

ஒருவரின்  நினைவுறுத்தலுக்கு
தூக்கத்தை கலைக்கிறேன் ,
இன்னொருவரின் நினைவுறுத்தலை
தூக்கிப்போடுகிறேன்.

ஒருவர்
முக்கியமானவர்.
இன்னொருவர்
அலட்ச்சியத்துக்குள்ளானவர்.
ஏன் என்னிடம் இந்த பாகுபாடு?

ஒருவர் என்பவர்
நண்பர்!
இன்னொருவர் என்பவர்
மனசாட்சி!

நண்பன்
கொடுத்த பணி செய்யதவற
அழைப்பு
கைபேசியில் வந்தபோது துடித்தெழுந்த நான்...
மனசாட்சி விரும்பா
பணி செய்ய
அது
கண்டிக்கும் போதும்
அமைதியில் இருப்பதேன்?

நண்பன்
நேரில் வருவான்
மனசாட்சி
நேரில் வராது என்பதாலா?
-தனுசு-

September 1, 2012

அவல் வடை

வடை என்றால் நமக்கு பருப்பு வடையும் உளுத்தம் வடையும் தான் நினைவுக்கு சட்டென்று வரும் இல்லையா? எத்தனை நாள் தான் அதே வடைகளை சாப்பிடுவது? வேறு எதையாவது பண்ணிப்பார்க்கலாம் என்ற போது, தட்டியது பொறி, சிக்கியது ஐடியா!

இது மிகவும் எளிமையான ஒரு வடை. அரிசி அவலைக்கொண்டு தயாரிப்பது.

தனியாக சமைக்கும் பிரம்மசாரிப்பசங்களுக்கு அவல் ஒரு உற்ற தோழன். கால் மணி நேரம் போல ஊற வைத்தால் போதும். எதையாவது பண்ணலாம். தேங்காய் துருவி, வெல்லம் சேர்த்து இனிப்பு; காரமாக வேண்டுமானால் எரிப்பு சேர்த்து உப்புமா; ரொம்ப versatile பதார்த்தம்.

வித்தியாசமாக எதையாவது சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள், சாப்பிட அடம் பண்ணும் பிள்ளைகள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு பதார்த்தம்.

தேவையான பொருட்கள்:

அவல் - ஒரு ஆழாக்கு
மிளகாய்ப்பொடி - விருப்பம்
மிளகு பொடி- விருப்பம்
உப்பு - தேவைக்கேற்ப
வெங்காயம் (சாப்பிடுபவர்களானால்) - பாதி பெரிய வெங்காயம், சின்னதாக அரிந்தது.
பச்சை மிளகாய் - இரண்டு, சின்ன சின்னதாக வெட்டிக்கொள்ளவும்
சீரகம் - ஒரு சிட்டிகை
மல்லித்தழை - விருப்பமிருப்பின்
எண்ணெய் - வறுக்க
தூய நன்னீர் - அவலை ஊற வைக்க

செய்முறை:
தூய நன்னீரில் அவலை ஊற வைக்கவும். அவலை பொறுத்து ஊற வைக்க தேவையான நீரின் அளவும், நேரமும் வேறுபாடும். ஆதலின் அதை நான் குறிப்பிடவில்லை. உங்களிடம் உள்ள அவலை பொறுத்து நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

நன்கு ஊறிய அவலை கையால் பிசையவும். வடை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். அதில் எண்ணெய் தவிர மற்ற சாமான்களை விட்டு விரவி வைக்கவும்.

சட்டியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், மாவை வடை போல தட்டி போட்டு, சுட்டு எடுக்கவும்.

சுட்டு எடுத்த பின் என்ன செய்ய வேண்டும் என நான் உங்களுக்கு கற்றுத்தரவா வேண்டும்?
:)

பிரியங்களுடன்
புவனேஷ்