Disable text selection

August 23, 2012

வாசுகியும் வள்ளுவரும்

வள்ளுவர் எழுதியது திருக்குறள் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் திருக்குறள் மட்டும் தான் எழுதினார் என்று அனைவரும் எண்ணிக்கொண்டு இருக்கிறோம். அதாவது ஒன்றே முக்கால் அடி கொண்ட குறள் வெண்பாவை தவிர அவர் வேறு எதையும் எழுதினாரா என நாம் அறியோம் அல்லவா?

உண்டு. ஒன்றே ஒன்று. அப்பாடல் ஒருவருக்காக அர்ப்பணமாக வடிக்கப்பட்டது. யார் அந்த அதிர்ஷ்டக்காரர்? ஆதரித்த வள்ளலா? அரசரா? அவர் குருவா? இல்லை. அதிர்ஷ்டக்காரர் அல்ல, அதிர்ஷ்டக்காரி என்று தான் சொல்ல வேண்டும். ஆம். அவர் ஒரு பெண். வள்ளுவரின் மனைவி. ஸ்ரீமதி. வாசுகி அம்மையார்.

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதாய் என் தூங்கும் என்கண் இரவு?

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார். "அடியேனுக்கு இனியவளே, அன்புடையவளே, எனது  சொல்லை என்றும் மதித்து நடந்த என் பாவையே (கண்மணியே), களைத்து வந்த எனது பாதங்களை பிடித்து விட்டு தூங்கச்செய்து பின் உறங்கி, நான் எழு முன் எழுந்து என்னை எழுப்பும் இளமை உடையவளே, அப்படி உன்னால் தூங்க வைக்கப்பட்டு உன் அன்பில் உறங்கிய என் கண்கள், இனி நீ இன்றி எவ்வாறு உறங்கும்?"என கதறுகிறார் வள்ளுவர்.

அதில் பாருங்கள், நான் எவ்வாறு உறங்குவேன்? என்று கூறவில்லை. என் கண் எவ்வாறு உறங்கும்? என்கிறார். அதற்கு முன் "பாவையே" என்கிறார். அதாவது பாவை இல்லாத கண் பயனற்றது. இனி நான் உறங்க நினைத்தாலும் அந்த கண்ணானது பாவையை பிரிந்த ஆற்றாமையால் இனி உறங்காது என்கிறார்.
 
“நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”

என்று உண்மையின் அடி ஆழத்தினை கண்டு எழுதிய அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி கையறு நிலையில் பாட்டெழுதி விட்டார். (நேற்று இருந்தான் இன்று இல்லை என்று ஆனான் என்னும் இயல்பினை உடையது நிலையற்ற தன்மையை உடைய இவ்வுலகு என்பது இக்குறளின் பொருள்).....

அதற்கு முற்றிலும் தகுதியானவர் அந்த அம்மையார்.

"வாசுகி, பழையது சுடுகிறது, விசிறி விடம்மா" என்றார் வள்ளுவர், தன் நண்பர் முன்; பழையது சுடுமா என யோசிக்காமல், அன்புக்கணவரின் வார்த்தைக்கு இணங்கி விசிறி விட்டாராம் வாசுகி அம்மையார். பார்த்த நண்பர், தன் மனைவியுடனான தனது பூசலுக்கு விடை கிட்டி விட்டது என விடை பெற்று சென்றாராம். இது பெண்ணடித்தனமல்ல. அன்பு. தூய அன்பு, துணையை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளல், அர்ப்பணிப்பு. அதில் தனி சுகம் உண்டு.

வள்ளுவர் பெருமான் சாப்பிடும் போது, ஒரு சிறு கலத்தில் தூய நீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏனென அம்மையாருக்கு விளங்கவே இல்லையாம். ஆனாலும் கேட்கவில்லையாம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார், தான் இறக்கும் தருவாயில், கணவரின் (வள்ளுவரின்) மடியில் கிடந்தபடி அவரிடம்  கேட்டாராம். அன்னப்ப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி எடுத்து கலத்தில் உள்ள தெள்ளிய நீரில் அலம்பி, மீண்டும் அன்னத்தில் கலந்து  உண்ணவே அவை இரண்டும் என்றாராம். "மான் போன்ற மருண்ட கண்ணினையுடைய என் அன்புடையவளே, நீ அன்னமிடுகையில் அன்னம் சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு இந்நாள் வரை தெரியவில்லை" என்று உருகி விளக்கினாராம்.

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட, பிரிவினை வேண்டி நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர்(???) நினைத்துப்பார்ப்பார்களா? 

பழைய பதிவுகளில் நான் சொன்ன எனது கருத்துக்களை தான் நான் இங்கும் சொல்லி முடிக்கிறேன். துணைக்காக கஷ்டப்பட தயாராக இல்லாதவர்கள் கலியாணத்துக்கு லாயக்கில்லாதவர்கள். அனுசரிப்பதும் விட்டுக்கொடுப்பதும் கெட்டவார்த்தைகள் அல்ல.

பெண்ணியம், உரிமைபேச்சுக்கள் பேச தெருக்கோடி மேடை தான் சரியான இடம். வீடும் குடும்பமும் அல்ல.

இப்பாடலை படித்த பிறகு தான் வள்ளுவரின் மீது ஒரு தனி மரியாதை பிறந்தது.

பிரியங்களுடன்
புவனேஷ்
 

 

1 comment:

thanusu said...

வள்ளுவரைப்பற்றி புதிய செய்தி. முதலில் அதற்கு நன்றி.

திருமணம்,குடும்பம் இதன் ஒற்றுமையையும். ஆழத்தையும் ஒரு திருமணமாகா இளைஞன் எழுதுகிறார்.படிக்க சந்தோஷமாக இருக்கிறது.

////........உன்னால் தூங்க வைக்கப்பட்டு உன் அன்பில் உறங்கிய என் கண்கள், இனி நீ இன்றி எவ்வாறு உறங்கும்?”என கதறுகிறார் வள்ளுவர்.////

இந்த வார்த்தைகளில் உள்ள அன்பின் ஆதிக்கத்தை பார்த்து புல்லரிக்கிறது.

எல்லா ஆண்களும் மகளிடம் விட்டுக்கொடுத்தும், மனைவியிடம் இறுக்கிப்பிடித்தும் வாழ்கிறார்கள். அதை மனைவி அனுமதித்து அனுபவிக்க பழகிவிட்டால் அந்த இல்லறம் நல்லறமாகிவிடும். குடும்பமும் ஒரு பல்கலை கழகம் தான்.

இந்த மனைவியின் நிலையை கணவன் உணர்ந்து கொள்ளும்போது அவன் அவள் மீது காட்டும் அன்பானது இருக்கிறதே அது அவன் பிள்ளைகளிடம் காட்டியதை விட, அவன் தாய்யிடம் காட்டியதை விட பன் மடங்காக பெருகி இருக்கும். குடும்பமும் பல்கலை கழகமாக மாறிவிடுகிறது. ஆனால் இந்த இரண்டு நிலையும் செட்டாக எடுத்துக்கொள்ளும் காலத்திற்குள் புரிந்துணர்வு இல்லாமல் போவதால் புவனேஷ்வர் அவர்கள் சொல்வது போல் பிரிவினை வேண்டி நீதி மன்றம் ஏறிவிடுகிறார்கள் சில தம்பதிகள்.

கணவன் மனைவி இருவரிடமும் உள்ள பெரும் குறை ஒரு கட்டத்துக்கு பின் மனதிற்குள் நிறைய அன்பிருந்தும் அதை வெளிக்காட்ட வேண்டிய நேரத்தில் வெளிகாட்ட தவறிவிடுகிறார்கள்.

வள்ளுவன் வாசுகி போல் அன்பை வெளிக்காட்ட தெரிந்துவிட்டால் எல்லா இல்லறமும் நல்லறமாகவே இருக்கும்.

புத்திசாலிக்கு அடையாளம் தன் முட்டாள் தனத்தை காட்டாமல் இருப்பது. நல் இல்லறத்துக்கு அடையாளம் குடும்பத்துக்காக கஷ்டப்படுவது.

நல்ல பதிவு ,இன்னும் இதைபோல தொடரவும்.