Disable text selection

October 29, 2010

யாரிவள்? நெஞ்சே, சொல்வாய்! - தலைவன் தன நெஞ்சொடு உரைத்தலாம்

வானின்று வீழ்ந்த மதி கொலோ? அன்றித்
தானின் றலர்ந்த தாமரை கொலோ முகம்;
காணிற் காரலை காரிகை கூந்தல்
நாணிச் சிவந்த திவ ளிதழ் கண்ட பவளம்,
நாணறு சிலையாம் புருவம்; நுதல் ஒள்பிறை காண்;
யானின்று காணுதும் நெஞ்சே, யார் கொல்? சொல்!
வான் கொண்ட மஞ்சுசேர் தண்பொதிகை வரையும்
தான் கொண்ட தனி மதுரை மகள்!

பொருள்:

தலைவன் உரைத்தல்:

(என்னுடன் இதுகாறும் இருந்த நெஞ்சே கேள்;) வானின்று சாபத்தால் மண்ணுலகின் கண் வீழ்ந்த நிலவோ இல்லை இன்று மலர்ந்த தாமரையோ இவள் முகம்?

அளப்பரிய ஆழமுடைய கடலின் கரிய அலை எழுந்து வீழும் தன்மை உடையதாக இவள்தன் கரிய குழல் எழுந்தும் வீழ்ந்தும் ஆடுகிறது; அக்கடலின் அடியில் பிறந்த பவழம் இவள் இதழ் கண்டு நாணம் கொண்டு சிவந்தது போலும்! நாண் அவிழ்ந்த (பின்னும்) வளைந்த தன்மை உடைய வில்லினை ஒத்தது இவள் தன் புருவம்; ஒளிரும் பிறையை (ஒள் பிறை) ஒத்தது இவள் நெற்றி (நுதல்); இவள் யாரோ? நெஞ்சே, நீ தான் இப்போது என்னோடு இல்லாமல் அவளோடு போய் விட்டாயே, ஆதலால் நீ அறிவாய்! சொல்!
பின் தலைவன் உணர்தல் (நெஞ்சு உரைப்பதாக அமைக்கப்பெற்றது):
வான் கொண்ட: பாண்டியனோடு இந்திரன் பகை கொண்டு மழை பொழியாமல் நிற்க, பாண்டியன் அம்மேகம் தன்னை சிறை செய்து மழை பொழிவித்தான் என்னும் வரலாறு உண்டு: ஆகையால் வான் கொண்ட மதுரை; அந்த வானம் கொண்ட மேகம் சூழ்ந்த குளிர்ச்சி பொருந்திய பொதிகை மலையும் கொண்ட சிறப்பு பொருந்திய மதுரை கண் வாழும் இளவரசி/பெண்.........

No comments: