Disable text selection

July 5, 2012

நாகரிகம்

நாகரிகம் என்று சொல்லிக்கொண்டு நாம் என்ன என்னவோ பண்ணத்துவங்கி விட்டோம். trendy ஆக உடுப்பதும், பளபளக்கும் கண்ணாடி குவளைகளில் இருந்து அருந்தவும், முள் கரண்டியால் சாப்பிடுவதும் பெருமைக்குரிய விஷயங்கள் ஆகி விட்டன. மேற்கத்திய உடைகளும் நுனி நாக்கில் புரளும் அந்நிய பாஷைகளும் (சீன ஜப்பானிய ஜெர்மன் மொழிகளும் அடக்கம்) பெருமைக்குரிய விஷயங்களாக எண்ண துவங்கி விட்ட சமூகம். இளைய தலைமுறை.

ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சியும் பகட்டும். மறுபக்கம் நாம் மனிதத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு இருக்கிறோமோ என தோன்றுகிறது.

நாகரிகம் என தான் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு அளவுகோலை வைத்தே மனிதர்களின் மரியாதையையும் நிர்ணயிக்கிறது இன்றைய இளைய சமூகம்.

வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை சில வருஷங்களுக்கு முன்னால் "அக்கா" என்றோ "அம்மா" என்றோ வயது கருதி பண்புடன் அழைத்த பாங்கு மாறிப்போய் இன்று சிறுவர்கள் கூட "ஏய்" என்றும் பெயர் சொல்லியும் விளிக்கும் நிலையை நாகரிக வளர்ச்சி என கொள்வதா பண்பாட்டு சீரழிவு எனக்கொள்வதா என தெரியவில்லை.

இன்னொரு உதாரணம்:

முதுகலை படிப்பில் ஒன்றாக படித்த ஒரே நேரத்தில் ஒரு வகுப்பில் படித்த மாணவனும் மாணவியும் வேறு வேறு இடங்களில் PhD படிப்பை தொடங்கினர்.

மாணவி எதிர்பார்த்த நேரத்தில் முடித்து விட்டாள், எதிர்பாராத குடும்ப சூழ்நிலை தடங்கல்களினால் மாணவனால் அவ்வளவு சீக்கிரம் முடிக்க இயலாமல் காலம் தாழ்ந்தது. பட்டம் வாங்கி விட்ட மாணவி அவன் படிக்கும் பல்கலைக்கழகத்திலேயே அவனுக்கு ஒரு படி மேலாக பணியில் சேர்ந்தாள். அவன் நிலைமை நன்கு தெரிந்தும், நட்புடன் ஆதரவாக இருக்காமல், ஈகோவுடன் "நான் உன்னை விட மேலானவள்" என்கிற ரீதியில் அதிகார தோரணையில் சில சமயம் அவமானப்படுத்தும் விதமாகவும் (belittling manner) நடந்து கொண்டாள். இது தனது முன்னாள் (???) நண்பனை புண்படுத்தும் என தெரிந்து பண்ணினாளா இல்லை தெரியாமல் பண்ணினாளா இல்லை இப்படி பண்ணுவதால் அவளுக்கு ஒரு கிக்கா புரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். பண்புள்ள மனிதர் செய்யும் செயலல்ல அது.

வாழ்ந்து கெட்ட மனிதர்களை நாம் நடத்தும் விதமே அலாதி தான். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல வயதுக்கும் அனுபவத்துக்கும் மரியாதை தராமல் ஏகவசனத்தில் பேசுவதும் ஏசுவதும்........ அதட்டுவதும் அறிவுரை (?) கூறுவதும்........ 

வயதான பெற்றோர், விதவை அம்மா, அத்தைப்பாட்டி, ஆதரவற்ற தங்கை, காலத்தின் கோலத்தால் வீட்டில் வேலை செய்யும் வாழ்ந்து கெட்ட மனிதர்...... கைவிடப்பட்ட கிழவிகள், கிழவர்கள், அனாதைப்பிள்ளைகள்........ பட்டியல் நீளுகிறது........

ஏதோ அவர்கள் நிலைமை ஆண்டவன் இப்படி வைத்து விட்டான், நம்மால் இயன்றதை செய்வோம், ஆறுதலாக இருப்போம் என்று எண்ணாமல் தலைகால் புரியாமல் ஆடுவது எங்கு கொண்டு போய் விடுமோ தெரியவில்லை.

வாழ்க்கை ஒரு சக்கரம் போல. Life's full of ups and downs. அவர்கள் நிலைமை நாளைக்கு நமக்கும் வரலாம். வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

முடிந்தால் ஆறுதலாக இருப்போம், முடிந்ததை பண்ணுவோம். உதவியாக அல்ல. நாம் பண்ணியிருக்கிற பாவங்களுக்கு கழுவாயாக. இன்னொரு இதயம் புண்படுமாறு, அதுவும் ஏற்கனவே புண்பட்ட நெஞ்சம் மேலும் புண்படுமாறு நடப்பது நாகரிகமல்ல. பண்பாடும் அல்ல. செத்த பாம்பை அடிப்பது வீரம் அல்ல.

காசுபணம் வேண்டாம். கனிவான வார்த்தைகளையாவது தரலாமே. ஆறுதலும் ஊக்கமும் தரலாமே. முடியாவிட்டால் சும்மா இருக்கலாம். பிறர் மனம் குளிர வைக்க வேண்டாம், at least மனம் புண்ணாக்காமல் இருக்கலாம்.

சமூகத்தில் ஒரு அங்கமாக இருந்து அவர்களுக்கு இதை தர நாம் கடமைப்பட்டுள்ளோம். நமக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்த ஆண்டவருக்கு தேவாலயத்திலும் கோவிலிலும் நன்றி சொல்லுவதை விட, நம்மை விட துர்த்தசையில் கஷ்டப்படுபவனுக்கு ஒரு ஆறுதலாக இருந்தால் அது சிறந்தது. அது தான் அந்த கருணை உள்ள கர்த்தருக்கும் பிடிக்கும்; நமக்கு அவர் தந்துள்ள அருளுக்கு உண்மையில் அப்போது தான் நாம் தகுந்த பாத்திரமாவோம் என்பது என் humble opinion.

 

No comments: