Disable text selection

July 6, 2012

My first date with snow!

பனிப்பொழிவு என்றால் எல்லாருக்குமே ஒரு உற்சாகம் தானே. அதுவும் நல்ல சூடான நமது சீதோஷ்ண நிலையில் பனியை ஃப்ரிட்ஜில் தான் பார்த்து இருப்போம். கொடுத்து வைத்த சிலர் ஊட்டியில் பார்த்து இருப்பார்கள். அல்லது வட நாட்டில் மலைப்பாங்கான இமாலயப்ப்ரதேசங்களில் பார்த்து இருப்பார்கள். நமக்கு அவ்வளவெல்லாம் கொடுத்து வைக்கவில்லை.

வளர்ந்தது பெங்களூரில், முதுகலைக்காக படித்த இடமோ வெய்யில் நகரமான வேலூர்.

பணிக்காக சில வருஷங்கள் வட அமெரிக்காவுக்கு (கனடாவுக்கு) போன போது தான் முதல் முதலில் பனிமழையை தரிசிக்கும் ஸ்பரிசிக்கும் அனுபவிக்கும் பாக்கியம் கிட்டியது.

நான் அங்கு போன காலம் இலையுதிர் காலம். இன்னும் மூன்று மாத காலம் கழித்து தான் பனி விழும் என்று சொல்லி விட்டார்கள். நான் ஏதோ கனடா பனிக்காடாக இருக்கும் என ஏகத்துக்கு கற்பனை எல்லாம் பண்ணி வைத்துக்கொண்டு போய் ஒரு சுபயோக சுபதினத்தில் எனது வலது காலை முன் வைத்து எனது காலடியை டொரோண்டோ நகரில் வைத்தேன். அங்கிருந்து சில மணி நேரப்பயணம் எனது ஊருக்கு.

போய் பார்த்தால் முப்பது டிகிரி வெய்யில் வைத்து வெளுத்து வாங்கியது. பெங்களூரில் வளர்ந்த சொகுசு பையனான எனக்கு அதுவே ஜாஸ்தியாக பட, எனது பனிக்கனவு அப்போதைக்கு புஸ்ஸானது.

நான்கு மாதங்கள் கழித்து குளிரத்தொடங்கியது. அங்கே எல்லாம் ஏதோ இயற்கை அன்னை ஒரு பொத்தானை தட்டி விட்டது போல காலங்கள் மாறுகின்றன. ஒரு வாரத்துக்குள் நன்றாக குளிர ஆரம்பித்தது.

ஒரு நாள் காலையில் எழுந்து வெளியே வந்து பார்க்கிறேன், தரை முழுதும் வெண்மையாக உறைபனி. (See photo - Left side) கையில் எடுத்து பார்த்தேன், நம்ம ஐஸ் போல தான் இருந்தது. கொஞ்ச நேரம் அதை வைத்து விளையாடி விட்டு அலுவலகம் போனேனா, அங்கும் இதை பற்றி மிக்க மகிழ்ச்சியுடன் பிரஸ்தாபித்தேன். ஆனால் அது பனி இல்லை, frost என்று கூறிஅவர்கள் எனது உற்சாக பலூனில் ஒரு ஓட்டையை போட்டார்கள். சரி ஏதோ ஒன்று என்று சமாதானப்படுத்தி கொண்டு சில வாரங்கள் காத்து இருந்தேன்.

இந்த இடைவெளியில் கடைகண்ணிக்கு சென்று பனிக்கு வேண்டிய ஆயத்தங்களை பண்ணி வைத்தேன். (Purchasing Snow jacket, snow shoes, gloves, mittens, wools etc.)

சில வாரங்களுக்கு பின், ஒரு நாள் காலையில் சூரியக்காதலன் பூமிக்காதலிக்கு ஊதி விட்ட பஞ்சுமுத்தம் போல, அவளுக்காக கொட்டிய அன்னத்தூவியைப்போல வெண் பனி மழை! புது பொம்மை கைக்கு கிடைக்கப்பெற்ற சிறு குழந்தையைப்போல உணர்ந்தேன் அப்போது! விழும் பனியை பிடிப்பதும் உருட்டி விளையாடி பார்ப்பதும் வாயில் போட்டு பார்ப்பதும் (!!). என்னைப்பார்த்து பக்கத்தில் இருந்த வெள்ளைக்காரர்களும் சேர்ந்து கொள்ள, எல்லாரும் விளையாடி மகிழ்ந்தோம். பின் பேருந்தைப்பிடிக்காமல் நடந்தே (பனியில் நடக்க ஆசை) அலுவலகம் போய் சேர்ந்தேன் (See photo).


[caption id="attachment_612" align="alignright" width="225"] First snow![/caption]

அதன் பின்னரும் சில நாட்கள் பனி விழுவதும் பின் அடுத்த சில நாட்கள் வெய்யில் அடிப்பதுவுமாக இருந்தது. பூமி நன்கு உறைந்த பின் தான் பனி விழத்தொடங்கியது. விழுந்த பனி நிலைத்து அப்படியே நிற்க பூமி உறைய வேண்டுமாம். முதல் சில நாட்களில் பூமி உறைய, பின் விழுந்த பனி இடுப்பளவுக்கு வந்து நின்றது.

அதில் விளையாடி மகிழ்ந்தது, வட அமெரிக்காவின் முப்பெரும் ஏரிகளுக்கு பனிக்காலத்தில் போய் வந்தது, ஊளையிடும் பனிப்புயலில் தன்னந்தனியாக மாட்டிக்கொண்டு உயிரோடு திரும்புவோமா என முழித்த திகில் அனுபவங்கள் பற்றி இன்னொரு பதிவில் சொல்லுகிறேன், சரியா?
 

 

2 comments:

narayanan said...

வணக்கம். உங்கள் பனி அனுபவத்தை அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்.
மார்கழிப் பனிப் புகையையும், நெல்பயிரில் உள்ள நீர்த்துளிகளையுமே ரசித்த நமக்கு இனிமையாகவே இருக்கும். நான் ஆறுமாதங்கள் தென்னமரிக்காவில் உள்ள சிலி நாட்டில் இருந்த போது பனிக்காலத்தை அனுபவித்தேன். இரவில் தங்கியிருந்த வீட்டையே கண்டுபிடிக்கமுடியவில்லை. அப்புறம் நண்பர் குடும்பத்துடன் மலை உச்சிக்கு சென்று பனியில் விளையாடியது புது அனுபவமாக இருந்தது.

bdharmal said...

தங்கள் பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி, ஐயா.