Disable text selection

July 12, 2012

பிரசாதம்

மகான்கள் மற்றும் பெரியவர்கள் சந்நிதிக்கு போகிறோம். அவர் தீர்த்தம் கொடுக்கிறார். இல்லை ஒரு புஷ்பத்தையோ மாலையையோ கொடுக்கிறார். அல்லது ஏதோ ஒரு பண்டத்தை தருகிறார். (அவர் எதை வேண்டுமானாலும் கொடுப்பார், அவருக்கு தான் தெரியும் என்ன என்று); நாமும் வாங்கிக்கொள்கிறோம். இதில் விசேஷம் என்ன?

ஒருத்தர் எப்பவும் சுவாமியை நினைத்துக்கொண்டும் அவருடைய நாமத்தை ஜபம் பண்ணிக்கொண்டும் இருப்பாரேயானால் அவருக்கு மந்த்ர சித்தி ஏற்படுகிறது. மனித உடலில் ஓடுவன 72000 நாடிகள். அத்துணை நாடிகளிலும் சித்தி அடைந்த மகானுக்கு அந்த பகவத் நாமாவே அதிரும் பொழுது, அவர் தொட்ட எந்த வஸ்துவும் அந்த சித்தியை/அதிர்வலைகளை ஏற்றுக்கொள்ளும். காந்தத்தால் தேய்க்கப்பட்ட/ஈர்க்கப்பட்டு பிடிக்கப்பட்ட இரும்பும் காந்த சக்தி பெறுகிறது இல்லையா. அது போல. அதை நமக்கு அந்த மகான் தரும் போது அதை நாமும் பெற்றுக்கொள்கிறோம். நேரடியாக நம்மைத் தொடும் பொழுது அந்த intensityயை தாங்கிக்கொள்ளும் சக்தி நமக்கு சாதாரணமாக கிடையாது. அதனால் தான் பிரசாதமாக துளித்துளியாக குழந்தைக்கு பால் கொடுப்பது போல தருகிறார்கள். இவற்றை பெற்று பெற்றே, நமது சொந்த முயற்சியான அனுஷ்டானங்களால், நாம் கொஞ்சம் கொஞ்சமாக பக்வியாக ஆகிறோம். உண்மையாகவே பக்வியான ஒருத்தருக்கு வேறு விதமான தீட்சைகள் கிடைக்கும். அதற்கு தயார் பண்ணுவது போல தான் மகான்களின் பிரசாதம். 

இதனால் தான் அதீத சக்தி உடைய மூர்த்தங்கள் உடைய கோயில் தீர்த்தம் கூட நமக்கு ஆத்ம லாபத்தையும் தோஷ நிவாரணத்தையும் அளிக்கிறது.

பரிகாரம் என்று சில பல கோயில்களுக்கு போவதும் இதனால் தான். மகான்களிடம் போவதும் இதனால் தான். இது அனுபவ உண்மை.

நம் தேசத்தில் என்று இல்லை. எல்லா தேசத்திலும் மகான்கள் இருந்து இதை பண்ணி இருக்கிறார்கள். இயேசு நாதர் குருடனுக்கு பார்வை கொடுத்ததும் முடவருக்கு நடக்க அருள் செய்ததும் வியப்பில்லை. அத்தனையையும் செய்த அவர் தனக்கென்று எதையும் பண்ணிக்கொள்ளவில்லை.  தமது பாவங்களை அடுத்தவர் மேல் பழி போட நினைக்கும் மக்கள் இடையே,  உலகத்தோரின் பாபங்களை தானே ஏற்று பிராணத்யாகம் பண்ணின மகான் இல்லையா அவர்?  அவர் நினைத்து இருந்தால் தன்னை காத்துக்கொண்டு இருக்க முடியும். ஆனாலும் தனக்கென எதையும் செய்யாமல் பிறர்க்கென மட்டும் தனது அனுக்ரக சக்தியை உபயோகப் படுத்தினார். தன்னை கொல்ல வந்தவர்களையும் மன்னிக்குமாறு பிரார்த்தனை பண்ணினார். மகான்களின் லக்ஷணம் இது.

டிஸ்கி: நான் மகான்கள் என்று சொன்னது உண்மையான மகான்களை. அவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. புகழுக்கும் இகழுக்கும் அசைந்து கொடுப்பதில்லை. தம்மை யாரும் வணங்க வேண்டும் என ஆசைப்படுவதும் இல்லை.

எந்த தேசத்தில் உதித்த மகான்களும் தங்களை விளம்பரம் பண்ணிக்கொள்ளவில்லை. குருடனுக்கு பார்வை அளித்த வள்ளல் ஏசுநாதர் அவனிடம் என்ன சொன்னார்? ஊருக்குள் போய் தண்டோரா போடாதே என்றார். நமது தேசத்தில் வந்த மகான்களும் அப்படித்தான்.

சரி.... விளம்பரம் பண்ணவே மாட்டார்களா? அப்புறம் எப்படி மக்கள் அவர்களிடம் சென்று அருள் பெறுவது? ரொம்ப ரொம்ப சிம்பிள். அவர்களுக்கு இறையருள் அப்படி கிட்ட வேண்டும் என விதி இருந்தால் தான் மகான்களை சந்திக்கவோ, சந்தித்தாலும் அவரை அடையாளம் காணவோ முடியும். பல பேர் மகான்களின் அருகிலேயே இருந்தும் அவரை பற்றி உணராமல் போவார்கள், அது இதனால் தான். அர்ஜுனன் கண்ணனிடம் இதை தானே சொன்னான். இயேசு நாதரும் சொன்னார் – A prophet is never honoured in his own nation!

-----

With Love,

Bhuvaneshwar D

 

2 comments:

பார்வதி இராமச்சந்திரன் said...

அற்புதக் கருத்துக்கள் நிறைந்த அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

bdharmal said...

தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள், சகோதரி.